'பதான்' வசூல் சாதனை: ஆமிர் கான் தவறியதை ஷாரூக் கான் சாதித்துக் காட்டியது எப்படி?

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விகாஷ் திரிவேதி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"கடந்து போன 4 ஆண்டுகளை நான்கே நாட்களில் மறந்துவிட்டேன்"

பதான் திரைப்படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித் திரைக்கு ஷாரூக் கான் மீண்டும் வந்தார். ஐந்தே நாட்களில் அந்த படம் உலகம் முழுவதும் ரூ.523 கோடி வசூல் வேட்டை நிகழ்த்தியிருக்கும் மகிழ்ச்சி ஷாரூக் கான் முகத்தில் தெரிந்தது. 

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனவரி 30-ம் தேதி மாலையில் உரையாற்றிய ஷாரூக் கான் தன்னிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். செய்தியாளர் சந்திப்பில் தன்னுடைய பழைய ஸ்டைலில் ஷாரூக் கான் தோன்றினார். சிரிப்பும், நகைச்சுவையும் இழையோடினாலும் அவ்வப்போது முன்வைக்கப்பட்ட தீவிரமான கேள்விகளுக்கு தடாலடி பதில்களையும் அவர் அளித்தார். 

"நம் எல்லோருடையை வாழ்க்கையிலும் நல்ல காலமும் உண்டு, மோசமான கால கட்டமும் உண்டு. அது எனக்கும் பொருந்தும்." என்றார் அவர். 

"மக்களிடையே மகிழ்ச்சியை பரப்ப வேண்டும் என்பதே என் மனப்பூர்வமான ஆசை. அதில் நான் தோல்வியடையும் போது வேறு யாரையும் காட்டிலும் நானே அதிகம் காயப்படுகிறேன். என்னால் மற்றவர்களுக்கு சந்தோஷத்தை அளிக்க முடியும் போது நான் மிகவும் மகிழ்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். 

ஷாரூக் கான் குறிப்பிடும் மகிழ்ச்சி என்பது 'பதான்' படத்தின் வெற்றி தொடர்புடையது. ஷாரூக் கானின் மகிழ்ச்சியை அவரது ரசிகர்களிடையேயும் காண முடிந்தது. வசூல் அடிப்படையில், இந்த படம் பாக்ஸ் ஆஃபீசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுபோன்ற சூழலில், பதான் பட வெற்றியின் ரகசியம் என்ன? என்ற கேள்வி எழுவது இயல்பான ஒன்று. பதான் பட வெற்றிக்கு பின்னால் உள்ள 5 காரணங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம். 

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், PRODIP GUHA/GETTY

1. ஷாரூக் கானின் மீள் வருகை

டிசம்பர் 2018. 

இதுதான் ஷாரூக் கான் நடித்த ஜீரோ படம் வெளியான மாதம். 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் வெறும் 186 கோடி ரூபாயை மட்டுமே வசூலித்தது. 

ஜீரோ படம் வசூல் ரீதியில் தோல்வியடைந்தது. பதான் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷாரூக்கானிடம் ஜீரோ பட தோல்வியின் சுவடுகள் தென்பட்டன. அவர் ஜீரோ படம் குறித்தும் பேசினார். ஜீரோ படத்திற்குப் பிறகு என் மீது நான் வைத்திருநத நம்பிக்கை ஆட்டம் கண்டது. சில சமயம் நான் பயந்து போனேன் என்று அவர் கூறினார். 

திரையில் தோன்றாமல் விலகியிருந்த 4 ஆண்டுகள் குறித்துப் பேசுகையில்,"என்னுடைய கடைசிப் படம் சாலி தி அல்ல. என்னுடைய படம் இனி எடுபடாது என்று சிலர் கூறினார்கள். ஆகவே, மற்ற தொழில் வாய்ப்புகளை நான் தேடத் தொடங்கினேன். நான் சமைக்கக் கற்றுக் கொண்டேன்," என்று நகைச்சுவையாக அவர் கூறினார். 

ஷாரூக் கான் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு வந்தாலும் அவரது ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் செல்ல சிறிதும் தாமதிக்கவில்லை. 

பிபிசி இந்தியிடம் பேசிய திரை விமர்சகர் கோமல் நேத்தா,"பதான் படத்தின் வெற்றிக்கு ஷாரூக் கான் சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்ததும் ஒரு காரணம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாரூக் கான் திரும்பியதும் அவர் மீதான அன்பை ரசிகர்கள் காட்டியுள்ளனர்," என்றார். 

'சிட்டி அன்ட் சினிமா' என்ற புத்தகத்தை எழுதிய மிஹிர் பாண்டியா, பிபிசியிடம் பேசுகையில், "கொரோனா பேரிடரின் போது திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையை மாற்ற இப்படியொரு படம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதுமுதலே இருந்து வந்தது. குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சென்று பார்க்கும் வகையிலான, இப்படிப்பட்ட படம் வர வேண்டும் என்பதற்காகவே மக்களும் காத்திருந்தனர்," என்று கூறினார். 

அவர் மேலும், "கொரோனாவுக்கு முந்தைய கால கட்டத்தைப் போலவே இப்போதும் மக்கள் குடும்பத்துடன், நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் சென்றுள்ளனர். அதேநேரத்தில், தென்னிந்திய திரைப்படங்களும் வந்து நல்ல வசூலைப் பார்த்துள்ளன. ஆனால், என்னைப் பொருத்தவரை, மசாலா மற்றும் பொழுதுபோக்கு அம்சகங்கள் சரியான விகிதத்தில் கலந்து தயாரான இந்திய படத்தின் தேவை தொடர்ந்து இருந்து வந்தது." என்று குறிப்பிடுகிறார். 

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், PRODIP GUHA/GETTY

2. புறக்கணிப்பால் பலன்

படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே புறக்கணிப்போம் என்று ஒரு பிரிவினரால் டிரெண்ட் செய்யப்பட்ட சில படங்களில் பதானும் ஒன்று. 

படத்தில் இருந்து முதல் பாடலாக 'பேஷாராம் ரங்' பாடல் வெளியானதுமே படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் இன்னும் ஓங்கி ஒலித்தன. ஆட்சியில் இருக்கும் தலைவர்கள், அமைச்சர்கள் சார்பில் இருந்தும் இதுபோன்ற வேண்டுகோள்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டன.

காவி வண்ண உடைகளை பட நாயகி தீபிகா அணிந்திருந்தது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக அவர்கள் கூறினார்கள். அந்த காட்சியையே படத்தில் இருந்து நீக்குமாறு சிலர் வலியுறுத்தினார்கள். 

இதன் விளைவாக, அந்த பாடல் வெற்றிகரமாக கோடிக்கணக்கான பார்வையாளர்களை அடைந்தது. இரண்டாவதாக, திரையரங்குகளில் அந்த பாடல் வரும் போது சில ரசிகர்கள் எழுந்து நின்று நடனமாடியதையும் பார்க்க முடிந்தது.

"படத்தை புறக்கணிக்க வற்புறுத்திய கும்பலுக்கு ஷாரூக் கானின் ரசிகர்கள் தாங்கள் யார் என்று காட்டினார்கள். பிரமாஸ்திரா என்ற படத்தின் வெற்றியால் அந்த கும்பலுக்கு ஏற்கனவே பின்னடைவை சந்தித்திருந்தது. பதான் படம் அந்த கும்பலை முற்றிலுமாக தரையில் சாய்த்திருக்கிறது. ஷாரூக் கான் ரசிகர்கள் எந்தவொரு திட்டமும் இல்லாமலேயே, ஒன்றிணைந்து அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர்," என்கிறார் கோமல் நேத்தா.

பதானைப் போலவே பிரமாஸ்திரா படத்திற்கும் புறக்கணிப்போம் என்ற கோஷம் எழுந்தது. அதையும் மீறி அந்த படம் 400 கோடி ரூபாயை வசூலித்து வெற்றி பெற்றது. 

மிஹிர் பாண்டியா கூறுகையில்,"பாலிவுட் படங்களை புறக்கணிப்போம் என்ற டிரெண்டை கடந்த காலத்திலும் பார்க்க முடிந்துள்ளது. அது பெரிய அளவில் தூண்டப்பட்டும் இருக்கிறது. அதுபோன்ற தருணங்களில், சில இடங்களில் எதிர்வினையும் நடந்தேறியுள்ளது. நாம் என்ன பார்க்க வேண்டும் என்பதை யாரோ ஒருவர் எப்படி தீர்மானிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஏராளமான மக்கள் திரையரங்குகளுக்குச் சென்றுள்ளனர்.

பதான் படம் வெளியான தொடக்க நாட்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்குச் செல்ல இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். புறக்கணிப்பு டிரெண்டால் அங்கே எந்தவொரு இழப்பும் இல்லை. அது நடந்தால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் திரளும் என்பதால் அது நன்மையளிப்பதாகவே முடியும்," என்று கூறினார்.

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், PRODIP GUHA

3. ஷாரூக் கானின் மௌனம்

2017-ம் ஆண்டு...

இந்தியா டுடே கருத்தரங்கில் ஷாரூக் கானிடம், "நீங்கள் ஒரு நல்ல முஸ்லிம். ஆனால், உங்களை ஷேகர் கிருஷ்ணா என்று கருதுவோமானால்..."

ஷாரூக் கான் ஒரு விநாடியும் தாமதிக்காமல் உடனே கூறுகிறார் - ஷேகர் ராதா கிருஷ்ணா...SRK.

அந்த வீடியோ இன்றும் கூட சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுகிறது. ஷாரூக் கான் அவரது நகைச்சுவை உணர்வுக்காக அறியப்படுகிறார் என்பதே அதற்குக் காரணம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே ஷாரூக் கான் மௌனம் காத்து வந்தார். 

மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போதும் சரி, தகுந்த ஆதாரம் இல்லை என்று பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் சரி. பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல் அருகே பிரார்த்தனையின் போது எச்சில் உமிழ்ப்பட்ட சர்ச்சையாகட்டும், சமூக ஊடகங்களில் இரவு, பகலாக புறக்கணிப்பை எதிர்கொண்ட போதாகட்டும் ஷாரூக் கான் மௌனம் காத்தது கண்கூடாக தெரிந்தது. அந்த தருணங்களில் ஷாரூக் கான் பேசவே இல்லை. 

கோமல் நேத்தா கூறுகையில், "கடந்த காலத்தில் ஷாரூக் கான் பல முறை குறி வைக்கப்பட்டிருக்கிறார். தங்களது ஆதர்ச நாயகன் இவ்வாறு குறிவைக்கப்பட்டிருக்கக் கூடாது என்று அவரது ரசிகர்கள் கருதினார்கள். குறிப்பாக, ஆர்யன் கான் கைதுக்குப் பிறகு, ஷாரூக்கிற்கு தொல்லை கொடுப்பவர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியும், தன் வலிமை என்ன என்பதை அவர் சொல்லியிருக்கலாம் என்று அவரது ரசிகர்கள் எண்ணியுள்ளனர்," என்று தெரிவித்தார். 

"ஷாரூக் கான் தனது ரசிகர்களுடன் நேரடித் தொடர்பை கொண்டிருந்தார். அவரது படங்கள் தோல்வியடையும் போது கூட அவரது நட்சத்திர அந்தஸ்தோ, பிரபலமோ குறைந்ததே கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பாக கூடிய அதே கூட்டம் இப்போதும் அவரது வீட்டின் முன்பு கூடுகிறது" என்று மிஹிர் பாண்டியா கூறுகிறார். 

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், FRANCOIS NEL

கடந்த காலத்தில் ஷாரூக் கானின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அவர் மீது மக்களிடையே கருணையை அதிகரித்தன. அந்த இக்கட்டான வேளையிலும் ஷாரூக் கான் ஒருபோதும் பொது வெளியில் கோபத்தை வெளிப்படுத்தியதே இல்லை. மக்களும் அதனை உணர்ந்தே இருந்தனர். 

ஷாரூக் கானின் நாயக பிம்பம் குறித்து மிஹிர் பாண்டியா கூறுகையில், "நாம் போற்றும் நாயகனுக்கு எதிராகவே எப்போதும் அனைவரும் இருப்பார்கள். நமது படங்களில் வரும் நாயகன் எப்போதும் தனியாகவே இருப்பார். அதிகாரத்திற்கு எதிராக நிற்பதாலேயே துன்பங்களை எதிர்கொள்வார். ஷாரூக் கானின் தனிப்பட்ட வாழ்க்கை இந்திய சமூகத்தில் இருக்கும் நாயக பிம்பத்துடன் பொருந்திப் போகிறது. ஷாரூக் கானின் படங்களை மக்கள் பார்க்க விரும்ப இதுவும் ஒரு காரணம்" என்கிறார் கோமல் நேத்தா.

4. ஷாரூக் கானின் சர்வதேச பிம்பத்தால் சாதகம்

இந்தியப் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ராஜ் கபூர் தொடங்கிய நீளும் இந்த பட்டியலில் ஷாரூக் கானுக்கும் இடம் உண்டு. 

பதான் திரைப்படம் இந்தியாவில் எந்த அளவுக்கு வசூல் ஈட்டியுள்ளதோ அதற்கு இணையாக வெளிநாடுகளிலும் வசூலித்துள்ளது. 

யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் அளித்துள்ள தகவல்படி, பதான் திரைப்படம் இந்தியாவுக்கு வெளியே 5 நாட்களில் 208 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது. 

2021-ம் ஆண்டு டிசம்பரில் உலக அளவில் ஷாரூக்கான் பிரபலமாகி இருப்பதை உணர்த்தும் நிகழ்வு நடந்தது. 

அஷ்வினி பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில், "எகிப்தில் ஒரு பயண முகவர் பணம் அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், பணத்தை அனுப்புவதில் பிரச்னை இருநதது. பின்னர், நீங்கள் ஷாரூக் கானின் நாட்டில் இருநது வருகிறீர்கள், நான் உங்களை நம்புகிறேன். நான் முன்பதிவு செய்கிறேன். நீங்கள் பின்னர் பணம் தாருங்கள். ஷாரூக் கான் தவிர வேறு யாருக்கும் நான் இதைச் செய்ய மாட்டேன்," என்று அனுபவத்தை பகிர்ந்தார். 

பதான் திரைப்படத்தால் பல ஒற்றைத் திரை கொண்ட சிறிய திரையரங்குகளுக்கும் நல்ல நாள் பிறந்துள்ளது. ஸ்ரீநகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஹவுஸ்புல் போர்டை பார்க்க முடிந்துள்ளது. ஏனென்றால், அங்கு பதான் படம் திரையிடப்பட்டது என்பது ஒன்றே காரணம். 

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், YRF

5. யாஷ் ராஜின் உத்தி

தான் பட வெளியீட்டிற்கு சில நாட்கள் முன்பாக, அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜான் ஆப்ரஹாம் நிகழ்ச்சி ஒன்றில் கேள்விகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தார். 

அப்போது பதான் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்ட போது அதற்கு பதிலளிப்பதை தவிர்த்த ஜான் ஆப்ரஹாம், அடுத்த கேள்வியை கேட்குமாறு கூறினார். 

இது உண்மையில், பதான் படத்தை பிரபலப்படுத்தும் உத்திகளுள் ஒன்று. மற்ற படங்களைப் போல பதான் படத்திற்காக அதில் நடித்த நடிர்கள் ஊடகங்களில் பேட்டியளித்ததை பார்க்க முடியவில்லை. 

பதான் வெளியீட்டிற்கு முன்பாக, ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். எந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பதை ஷாரூக் கானே தேர்வு செய்தார் என்பது இதில் குறிப்பிடத்தக்க விஷயம். விளம்பரம் தரக் கூடிய, அதேநேரத்தில் சர்ச்சைகளுக்கு இடம் தராத கேள்விகளை மட்டுமே தேர்வு செய்து ஷாரூக் பதிலளித்தார். 

பதான் பட வெளியீட்டிற்கு விடுமுறை காலத்தை தேர்வு செய்திருந்தனர். ஜனவரி 25, 26 மற்றும் சனி, ஞாயிறு என விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வந்தன. ஜனவரி 25-ம் தேதி புதன்கிழமை படம் வெளியிடப்பட்டது. இதன் மூலம் படத்திற்கு அதிகபட்ச விடுமுறை தினங்கள் கிடைத்தன. அதற்கு 15 நாட்கள் முன்னதாக படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. 

படம் 8,000த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சில திரையரங்குகளில் காலை 6 மணிக்கே காட்சி தொடங்கிவிட்டது. 

பதான் திரைப்படம் வசூலை வாரிக் குவித்தாலும், அதனை மசாலா திரைப்படமாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 

படத்தின் கதை புதிதல்ல, படத்தில் வரும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்களால் ஒரு பயனும் இல்லை என்று சில பார்வையாளர்கள் விமர்சித்தனர். 

பதான் சாதனை - ஷாரூக் சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், YRF

'பதான்' வெற்றியால் பாலிவுட்டிற்கு பலன் என்ன?

"பதான் வெற்றியால் பாலிவுட்டிற்கு பலன் கிடைத்துள்ளது. மூடப்பட்டிருந்த பல சிறிய திரையரங்குகள் பதான் பட வெளியீட்டால் மீண்டும் திறக்கப்பட்டன. பாலிவுட்டின் இருப்பு குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. பாலிவுட் முடங்கிக் கிடப்பதாக கூறப்பட்டது. அவ்வாறு கூறியவர்களின் வாயை பதான் பட வசூல் அடைத்துவிட்டது. தென்னிந்திய சினிமாவோ அல்லது வேறு எந்த சினிமாவோ பாலிவுட்டுடன் போட்டியிட முடியாது என்று பதான் வெற்றி உணர்த்திவிட்டது. ஏனென்றால் பாகுபலி வசூலை இது விஞ்சிவிடும்," என்று கோமல் நேத்தா கூறுகிறார். 

பதான் வெற்றிக்குப் பிறகு ஜனவரி 30-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஷாரூக் கான் கடைசியாக, "கடந்து செல்லும் போது ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். இது தீபிகா படுகோன். அவர் அழிவே இல்லாதவர். நான் ஷாரூக் கான், நான் அக்பர், இது ஜான், இது அந்தோணி. இது சினிமா. எந்த வகையிலும் எங்களுக்குள் வேறுபாடு இல்லை. மக்களை, கலாசாரத்தை நேசிப்பதால்தான் நாங்கள் படங்களை உருவாக்குகிறோம்," என்றார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஷாருக்கிடம் புறக்கணிப்பு தொடர்பான கேள்வி கேட்கப்பட்டபோது, "​​நண்பரே, நான் பெரிய வார்த்தைகள் பேசவில்லை, ஆனால் நான் அடிக்கும் காற்றில் சிறிது நகரப் போகிறேன். அந்த காற்று புதர்களை வளரச் செய்கிறது," என்று பதிலளித்தது இந்த நம்பிக்கையின் காரணமாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: