மாமல்லபுரம்: கடற்கரை கோவில் தவிர மேலும் ஒரு கோவில் கடலுக்கடியில் மூழ்கியுள்ளதா? ஆய்வில் கிடைத்தது என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மாமல்லபுரத்தில் கடல் மட்டம் குறையும் நேரங்களில் கடலுக்கு நடுவே கற்கள் போன்ற அமைப்புகள் தென்படுகின்றன. இது கடற்கரை கோவில் தவிர அங்கே மேலும் கோவில்கள் கடலுக்கடியில் மூழ்கியிருக்கலாம் என்ற அப்பகுதி மக்கள் நம்பக் காரணமானது.

இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை ஏற்கனவே நடத்திய ஆய்வுகளில், கடலுக்கடியில் சில கட்டுமானங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஆய்வு நடந்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை ஆகஸ்ட் மாத மத்தியில் மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் கடலடி அகழாய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த ஆய்வில் கடலடியில் ஆய்வை மேற்கொள்ள அதிநவீனமான ரிமோட் மூலம் இயங்கும் வாகனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வில் கிடைத்தது என்ன? இந்திய தொல்லியல்துறை என்ன சொல்கிறது?

7 கோவில்கள் இருந்ததா?

சென்னையிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் கடலோரமாக அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில், தமிழ்நாட்டில் முதன் முதலில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவிலாகக் கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் நரசிம்மவர்மனால் இந்தக் கோவிலின் பெரும்பகுதி கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

மொத்தம் ஏழு கோவில்கள் இருந்ததாகவும் அவற்றில் தற்போதைய கடற்கரைக் கோவில் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் பலர் நம்புகிறார்கள். இதுபோன்ற ஒரு சந்தேகம் எழ பல காரணங்கள் இருந்தன. அந்தப் பகுதியில் கடல் மட்டம் குறையும்போது தெரிந்த, சில கற்களும் இதற்குக் காரணமாக இருந்தன.

பதினாறாம் நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பியர்களின் குறிப்புகளில் மாமல்லபுரம் காணக் கிடைக்கிறது. ஏழு கோவில்கள் என்று பொருள்படும் 7 பகோடாக்கள் (Seven Pagodas) என இந்தக் கோவில்கள் குறிப்பிடப்பட்டன. 1772ல் மாமல்லபுரம் பகுதிக்கு வந்த வில்லியம் சேம்பர்ஸ் என்பவர், இது குறித்து ஒரு கட்டுரையை கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ஏசியாட்டிக் ரிசர்ச்சஸில் எழுதினார்.

மாமல்லபுரத்தின் ஏழு கோவில்கள் என குறிப்பிடப்படும் நிலையில், அந்த ஏழு கோவில்கள் எது என்பதில் தெளிவு இல்லை. ஒரு சிலரைப் பொறுத்தவரை, ஒரே கல்லால் ஆன ரதங்களும் கடற்கரைக் கோவிலும் சேர்ந்துதான் ஏழு கோவில்கள் எனக் குறிப்பிடப்படுவதாக கருதுகிறார்கள்.

வேறு சிலர், கடற்கரையோரம் ஏழு கோவில்கள் இருந்ததாகவும் அவற்றில் ஆறு கடலால் சேதமடைந்துவிட, ஒன்று மட்டும் எஞ்சியிருப்பதாகக் கருதுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் கடலுக்குள் சில கட்டுமானங்கள் மூழ்கியிருக்கலாம் என்ற அனுமானம் நீடித்துக் கொண்டேயிருந்தது.

இந்தியத் தொல்லியல் துறை ஆய்வு

எனவே இந்தப் பகுதியில் அகழாய்வுகளை மேற்கொள்ள ஏஎஸ்ஐ முடிவுசெய்தது. 1990 - 91ல் இந்தியத் தொல்லியல் துறையின் சென்னைப் பிரிவு மாமல்லபுரம் கடற்கரையில் மேற்கொண்ட அகழாய்வில் ஒரே கல்லால் ஆன வராஹ மூர்த்தியின் சிற்பம், ஒரு பழங்காலக் கிணறு, பல்லவர் காலத்தைச் சேர்ந்த சில கல்வெட்டுகள், படிகளைப் போன்ற அமைப்பு ஆகியவை கண்டறியப்பட்டன.

1998லிருந்து 2000வரை மேற்கொள்ளப்பட்ட மற்றொரு அகழாய்வில் அந்தப் படிகளைப் போன்ற அமைப்பு கடற்கரையை ஓட்டி நீண்டு சென்றுகொண்டிருந்தது கண்டறியப்பட்டது. கடற்கரைக் கோவிலுக்கு மேற்கில் செங்கலால் ஆன ஒரு கட்டுமானமும் கண்டறியப்பட்டது.

இதற்கிடையில் 1995வாக்கில் இந்தியத் தொல்லியல் துறையும் இந்தியப் புவியியல் ஆய்வுத் துறையும் சேர்ந்து நடத்திய ஒரு ஆய்வில், மாமல்லபுரம் கடலை ஒட்டிய பகுதிகள் தொல்லியல் ஆய்வு நடத்தப்படவேண்டிய பகுதிகள் எனத் தெரியவந்தது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியத் தொல்லியல் துறையின் நீரடி அகழாய்வுப் பிரிவு இந்தப் பகுதியில் கடலடியில் ஆய்வுகளை நடத்த முடிவுசெய்தது. 2001ஆம் ஆண்டு நவம்பரில் மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிக்குள் மூழ்கி ஆய்வு நடத்தப்பட்டது. அதேபோல, நிலப் பகுதியிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதற்குப் பிறகு, 2002 மார்ச் மாதம் மீண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த முறை கடற்கரையோரக் கோவிலுக்கு வடக்கில், கடல் சற்று உள் நுழைந்திருந்த பகுதியில் கடலடி ஆய்வுகள் நடத்தப்பட்டன.

கடலுக்குள் 2 கிமீ தூரத்தில் ஆய்வு

மற்றொரு இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கட்டுமானத்திற்குப் பயன்பட்ட செதுக்கப்பட்ட கற்கள் கிடைத்தன. இவை பல வேலைப்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன. இவை எல்லாமே பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவே கருதப்பட்டது.

இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டு பிப்ரவரியில் மீண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த முறை இந்தியக் கடற்படை உதவியுடன் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின்போது கடற்கரையை ஒட்டி பல கட்டுமானங்கள், கற்கள் தென்பட்டன. முடிவில், இவை எல்லாமே அந்த இடத்தில் ஒரு கட்டுமானம் இருந்ததையும் அவை கடற்கரையின் வடிவம் மாறியதால், நீரில் மூழ்கியதையும் தெளிவுபடுத்தின.

இந்த நிலையில்தான் மீண்டும் அந்தப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14, 15 ஆகிய தேதிகளில் கடலடி அகழாய்வுகளை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை நடத்தியிருக்கிறது.

இது குறித்துப் பேசிய தொல்லியல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர், "ஏற்கனவே அங்கு கடலடி ஆய்வு நடந்திருக்கிறது. அந்த சமயத்தில் சில கட்டுமானங்கள் தென்பட்டன. அவற்றின் நிலை இப்போது என்ன என்று அறிய நினைத்தோம். ஆகவே, மீண்டும் ஆய்வு நடத்தினோம். இதற்கு முன்பாக நடந்த ஆய்வுகளின்போது வீரர்கள் கடலுக்குள் மூழ்கி ஆய்வு நடத்த வேண்டியிருந்தது. அதில் பல சவால்கள் இருந்தன. ஆனால், இந்த முறை ரிமோட் மூலம் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டோம்" என்று தெரிவித்தார்.

இப்போது நடத்தப்பட்ட ஆய்வில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட கட்டுமானங்கள் அப்படியே இருப்பது தெரிந்தது. "மனிதனால் கட்டப்பட்ட படிகளைப் போன்ற அமைப்புகளும் தென்பட்டன. கல்லால் ஆன வேறு சில அமைப்புகளும் தென்பட்டன. இந்த ஆய்வுகள் அனைத்தும் கரையிலிருந்து ஒன்று முதல் இரண்டு கி.மீ. தூரத்திற்குள் செய்யப்பட்டன" என்கிறார் அந்த அதிகாரி.

"கூடுதல் நிதி, கூடுதல் ஆய்வு"

மாமல்லபுரத்தில் இந்த ஆய்வை மேற்கொண்டதற்கு பல காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறார் இந்த ஆய்வை தலைமை ஏற்று மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஆலோக் திரிபாதி.

இது குறித்து பிபிசியிடம் விரிவாகப் பேசிய அவர், "2005ல் நடந்த அகழாய்வின் தொடர்ச்சியாகவே தற்போதைய ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டு நாட்கள் மட்டுமே ஆய்வு நடத்தப்பட்டது. கடலுக்குள் உள்ள பாறைகள், கட்டுமானங்களின் காட்சிகளைப் பதிவுசெய்தோம். கடலடியில் உள்ள இடங்கள் நீர்மட்டம் உயர்வதாலும் தாழ்வதாலும் மாற்றமடையும். அந்த மாற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். எந்த அளவுக்கு கடல் உயிரினங்கள் வளர்கின்றன, கடல்சூழல் அந்த இடத்தில் எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் ஆராய்வதுதான் இந்த ஆய்வின் நோக்கம்" என்று தெரிவித்தார்.

கடல் மட்டம் மாறுவதால் முன்பு நீருக்கடியில் தெரிந்த இடங்கள் மண்ணுக்கடியில் சென்றிருக்கும்; சில இடங்கள் வெளிப்பட்டிருக்கும். இதையெல்லாம் ஆராய்ந்து பதிவுசெய்வதுதான் தற்போது நடந்த ஆய்வின் நோக்கம் என்கிறார் அவர்.

இந்தியத் தொல்லியல் துறை கடலடி ஆய்வுகளுக்காக ஒதுக்கும் தொகை அதிகரித்திருப்பதால் தொடர்ந்து ஆய்வுகளை நடத்தும் திட்டம் இருப்பதாகவும் ஆலோக் திரிபாதி தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு