ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்ன ஆனது தெரியுமா?

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், FRANCIS HAYMAN / NATIONAL PORTRAIT GALLERY, LONDON

படக்குறிப்பு, இந்தியாவைப் பற்றிய ரால்ப் ஃபிட்சின் தகவல்களின் அடிப்படையில், பிரிட்டனில் இருந்து 200 க்கும் மேற்பட்ட செல்வாக்கு மிக்க மற்றும் தொழில்முறை வல்லுநர்களுடன், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற யோசனை, மற்றொரு பன்னாட்டு வணிகரான ஜேம்ஸ் லான்கஸ்டருக்கு வந்தது.

(2020-ஆம் ஆண்டு வெளியான கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

அது பதினாறாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டு. உலகின் மொத்த பொருட்களின் உற்பத்தியில் கால் பகுதி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது. இதே காரணத்திற்காக, இந்த நாடு தங்கப் பறவை என்று அழைக்கப்பட்டது. அப்போது, முகலாய பேரரசர் ஜலாலுதீன் முஹம்மது அக்பர் டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

அவர் உலகின் பணக்காரப் பேரரசர்களில் ஒருவராக இருந்தார். மறுபுறம், பிரிட்டன் உள்நாட்டுப் போரினால் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதன் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்தே இருந்தது. உலகின் மொத்த உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டுமே அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

அந்த நேரத்தில் பிரிட்டனில், முதலாம் எலிசபெத் மகாராணி ஆட்சி செய்து வந்தார். ஐரோப்பாவின் முக்கிய வல்லரசுகளாக இருந்த போர்த்துகீசும் ஸ்பெயினும் வர்த்தகத்தில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளின. வணிகர்கள் என்ற போர்வையில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினின் வணிகக் கப்பல்களைக் கொள்ளையடிக்கும் கடல் கொள்ளையர்களாகவே திருப்தி அடைந்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.

அந்த நேரத்தில், திரை கடலோடி வணிகம் செய்து வந்த பிரிட்டிஷ் தொழிலதிபர் ரால்ஃப் ஃபிட்ச், இந்தியப் பெருங்கடல், மெசபதேமியா, பாரசீக வளைகுடா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளுக்கு வணிக பயணங்களை மேற்கொண்டதில் இந்தியாவின் செழிப்பைப் பற்றி அறிந்து கொண்டார்.

ரால்ஃப் ஃபிட்சின் பயணம் மிக நீண்டது, அவர் பிரிட்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு அவர் இறந்ததாகவே கருதப்பட்டு, அவரது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. லெவண்ட் நிறுவனம் கிழக்கத்திய நாடுகளிலிருந்து மசாலா பொருட்களைப் பெற இரண்டு முறை முயன்று தோல்வியைத் தழுவியது.

இந்தியாவைப் பற்றிய ரால்ப் ஃபிட்சின் தகவல்களின் அடிப்படையில், பிரிட்டனில் இருந்து 200 க்கும் மேற்பட்ட செல்வாக்கு மிக்க மற்றும் தொழில்முறை வல்லுநர்களுடன், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற யோசனை, மற்றொரு பன்னாட்டு வணிகரான ஜேம்ஸ் லான்கஸ்டருக்கு வந்தது.

அவர் டிசம்பர் 31, 1600 அன்று ஒரு புதிய நிறுவனத்திற்கு அடித்தளம் அமைத்து, கிழக்கு ஆசியாவில் வர்த்தக உரிமையையும் ராணியிடமிருந்து பெற்றார். இந்த நிறுவனத்திற்குப் பல பெயர்கள் உள்ளன, ஆனால் இது பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கிந்திய கம்பெனி வருகை அறிவிப்பு

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், HERITAGE IMAGE PARTNERSHIP LTD ALAMY

படக்குறிப்பு, பிரிட்டனின் வர்த்தக போட்டியாளர்களான டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் ஏற்கனவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வந்தனர்.

தொடக்க ஆண்டுகளில் மற்ற பிராந்தியங்களில் பயணம் செய்த பின்னர், ஆகஸ்ட் 1608 இல், கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் தனது 'ஹெக்டர்' என்ற கப்பலை இந்தியாவின் சூரத் துறைமுகத்தில் நிறுத்தி, கிழக்கிந்திய கம்பெனியின் வருகையை அறிவித்தார்.

பிரிட்டனின் வர்த்தக போட்டியாளர்களான டச்சு மற்றும் போர்த்துகீசியர்கள் ஏற்கனவே இந்தியப் பெருங்கடல் பகுதியில் செயல்பட்டு வந்தனர். இந்த நிறுவனம், தன் நாட்டை விட 20 மடங்கு பெரிய நாடும் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றுமான ஒரு நாட்டையே ஆளப்போகிறது என்று யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.

அந்த நேரத்தில், பேரரசர் அக்பர் உயிரிழந்தார். அந்த காலங்களில், சீனாவின் மிங் வம்சத்து அரசர் மட்டுமே அக்பருக்கு நிகரான சொத்துக்களுடன் இருந்தார்.

காஃபி கான் நிஜாமுல்-முல்க்-ன் 'முந்தகபுல்-பாப்' புத்தகம், அக்பர் ஐந்தாயிரம் யானைகள், பன்னிரண்டாயிரம் குதிரைகள், ஆயிரம் சிறுத்தைகள், பத்து கோடி ரூபாய், விலையுயர்ந்த நாணயங்கள், ஏராளமான தங்கம், முந்நூற்று எழுபது வெள்ளி துண்டுகள், ரூ .3 கோடி மதிப்புள்ள ரத்தினங்களை விட்டுச் சென்றார் என்று கூறுகிறது.

அக்பரின் மகன் , நூருதீன் சலீம், ஜஹாங்கிர் என்ற பட்டத்துடன் அரியணை ஏறினார். ஆட்சியில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் நோக்கில், காதுகள், மூக்கு மற்றும் கைகளை வெட்டும் தண்டனை ரத்து செய்யப்பட்டது.

பல சட்டவிரோத வரிகள் நீக்கப்பட்டன. பொதுமக்களுக்கு மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சிறப்பு நாட்களில் விலங்குகளை வெட்டுதல் ஆகியற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.

சாலைகள், கிணறுகள் மற்றும் சத்திரங்கள் கட்டப்பட்டன. அடுத்தடுத்த சட்டங்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு நகரத்தின் அரசு மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. பொதுமக்களின் குறைகளைக் கூற அரண்மனைச் சுவரில் நீதி சங்கிலி தொங்க விடப்பட்டது.

முகலாய பேரரசை சம்மதிக்க வைக்கும் முயற்சி

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், BENJAMIN WEST / BRITISH LIBRARY

படக்குறிப்பு, நிறுவனத்தின் அடித்தளமே வணிக மூலதனம். ஸ்பெயினுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளை விற்பனை செய்வதன் மூலம் 1621 முதல் 1843 வரை குவிந்திருந்த வெள்ளியைக் கொடுத்து, நிறுவனம் அதற்கு ஈடான பொருளை வாங்கியது.

அந்த நேரத்தில் ஐரோப்பாவில் நடந்ததைப் போல, போர் என்பது நாற்பது லட்சம் வீரர்களைக் கொண்ட முகலாய சேனையுடன் நடக்காத காரியம் என்று ஹாக்கின்ஸ் விரைவில் உணர்ந்தார் என்று உலகப் புகழ்பெற்ற வரலாற்று நிபுணர் வில்லியம் டெல்ரிம்பிள் கூறுகிறார்.

எனவே, இங்கே அவருக்கு முகலாயப் பேரரசரின் ஒத்துழைப்பும் அவரது ஆதரவும் தேவைப்பட்டது. ஹாகின்ஸ் ஒரு வருடத்திற்குள் முகலாய தலைநகர் ஆக்ராவை அடைந்தார். படிப்பறிவில் குறைந்த ஹாக்கின்ஸ், ஜஹாங்கிரிடமிருந்து வணிக அனுமதி பெறும் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தூதருமான சர் தாமஸ் ரோ, அரச தூதராக அனுப்பப்பட்டார். சர் தாமஸ் ரோ 1615 இல் முகலாய தலைநகர் ஆக்ராவை அடைந்தார். அவர் அரசருக்கு ஒரு விலைமதிப்பில்லாத பரிசை வழங்கினார். அதில் வேட்டை நாய்கள் மற்றும் அவருக்கு பிடித்த மதுபானம் ஆகியவை அடங்கும்.

பிரிட்டனுடன் நல்லுறவு கொள்வது, ஜஹாங்கீரின் முன்னுரிமையாக இருக்கவில்லை. விவாதங்களின் போது வர்த்தகம் குறித்துப் பேசுவதை விடுத்து, அரசர், குதிரைகள், கலைப்பொருட்கள் மற்றும் மதுவைப் பற்றி விவாதிப்பார் என்று தாமஸ் ரோ கூறுகிறார்.

சர் தாமஸ் ரோ மூன்று வருட தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு இதில் வெற்றி பெற்றார். ஜஹாங்கிர் கிழக்கிந்திய நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த நிறுவனம் மற்றும் அனைத்து இங்கிலாந்து வணிகர்களும் துணைக் கண்டத்தின் ஒவ்வொரு துறைமுகத்திலும், உரிமை கொள்ளவும் நிலங்களை வாங்கவும் விற்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு பதிலாக ஐரோப்பிய தயாரிப்புகள் இந்தியாவுக்கு வழங்கப்பட வாக்குறுதியளிக்கப்பட்டது. ஆனால் அப்போது அங்கே உற்பத்தியே இல்லையே என்பது உணரப்படவில்லை என்பது விந்தையே.

நிறுவனத்தின் கப்பல்கள் அரண்மனைக்குக் கொண்டு வரும் பழம்பொருட்கள் மற்றும் பரிசுகள் எதுவாக இருந்தாலும் அவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

நிறுவனத்தின் வணிகர்கள் முகலாயர்களின் ஒப்புதலுடன் பருத்தி, இண்டிகோ, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் தேநீர் ஆகியவற்றை இந்தியாவில் இருந்து வாங்கி, வெளிநாடுகளுக்கு அதிக விலையில் விற்றுப் பெரும் லாபம் ஈட்டினர்.

நிறுவனத்தின் அடித்தளமே வணிக மூலதனம். ஸ்பெயினுக்கும் அமெரிக்காவிற்கும் அடிமைகளை விற்பனை செய்வதன் மூலம் 1621 முதல் 1843 வரை குவிந்திருந்த வெள்ளியைக் கொடுத்து, நிறுவனம் அதற்கு ஈடான பொருளை வாங்கியது.

முகலாயர்களை எதிர்த்த கிழக்கிந்திய கம்பெனி

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பதினேழாம் நூற்றாண்டில், அவர்களுக்கு முகலாயர்களுடன் ஒரே ஒரு முறை மோதல் ஏற்பட்டது. 1681 ஆம் ஆண்டில், முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் மருமகனான நவாப் ஷாயிஸ்தா கானின் அதிகாரிகள் வரி மற்றும் பிற விஷயங்களில் ஆங்கிலேய கம்பெனிக்குத் தொல்லை கொடுத்ததாக அதன் ஊழியர்கள், இயக்குநர் சர் சைல்ட் -இடம் புகார் கூறினர்.

1670 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பேரரசர் இரண்டாம் சார்லஸ் கிழக்கிந்திய கம்பெனியை வெளிநாடுகளில் போர்களை நடத்துவதற்கும் காலனித்துவப்படுத்துவதற்கும் அனுமதித்தார். பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆயுதப் படைகள் முதலில் இந்தியாவில் போர்த்துகீசு, டச்சு மற்றும் பிரெஞ்சு போட்டியாளர்களுடன் போராடி பெரும்பாலான போர்களை வென்றன. படிப்படியாக, வங்காளத்தின் கடலோரப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.

ஆனால், பதினேழாம் நூற்றாண்டில், அவர்களுக்கு முகலாயர்களுடன் ஒரே ஒரு முறை மோதல் ஏற்பட்டது. 1681 ஆம் ஆண்டில், முகலாய பேரரசர் ஔரங்கசீப் ஆலம்கீரின் மருமகனான நவாப் ஷாயிஸ்தா கானின் அதிகாரிகள் வரி மற்றும் பிற விஷயங்களில் ஆங்கிலேய கம்பெனிக்குத் தொல்லை கொடுத்ததாக அதன் ஊழியர்கள், இயக்குநர் சர் சைல்ட் -இடம் புகார் கூறினர்.

சர் சைல்ட் இராணுவ உதவி கோரி இங்கிலாந்து அரசருக்குக் கடிதம் எழுதினார். இதன் பின்னர், 1686 இல் பத்தொன்பது போர்க்கப்பல்கள், இருநூறு பீரங்கிகள் மற்றும் அறுநூறு வீரர்கள் அடங்கிய ஒரு கடற்படைக் கப்பல் லண்டனில் இருந்து வங்காளத்தை நோக்கிப் பயணித்தது.

முகலாய சக்கரவர்த்தியின் படையும் தயாராக இருந்தது, எனவே முகலாயர்கள் போரில் வெற்றி பெற்றனர். 1695 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கடல் கொள்ளையர் ஹென்றி அவேரி, ஒளரங்கசீப்பின் ஃபதே முஹம்மது மற்றும் 'குலாம் சவாய்' கப்பல்களைச் சூறையாடினார். இதில் கிடைத்த பொருளின் மதிப்பு சுமார் ஆறு முதல் ஏழு லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள்.

முகலாய படையிடம் தோற்ற ஆங்கிலேய படை

பிரிட்டிஷ் வீரர்களை முகலாய இராணுவம் கொசு அடிப்பதைப் போல் அடித்துத் துவைத்தது என்றும், வங்காளத்தில் உள்ள கம்பெனியின் ஐந்து தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன என்றும் ஆங்கிலேயர்கள் அனைவரும் வங்காளத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர் என்றும் வரலாற்றாசிரியர் வில்லியம் டெல்ரிம்பிள் கூறுகிறார்.

சூரத்திலும் மும்பையிலும் இருந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டன. நிறுவனத்தின் ஊழியர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவர்கள் குற்றவாளிகளைப் போல நகரத்தில் ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

மன்னிப்பு கேட்டு தங்கள் தொழிற்சாலைகளை திரும்பப் பெறுவதற்காக அரசரின் முன், கையேந்துவதைத் தவிர, வேறு வழியில்லை. பிரிட்டிஷ் பேரரசர் அதிகாரப்பூர்வமாக ஹென்றி அவெரியைக் கண்டித்து முகலாயப் பேரரசரிடம் மன்னிப்பும் கேட்டார்.

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிழக்கிந்திய கம்பெனி சீன முகவர்கள் மூலம் மக்களிடையே அபின் பயன்பாட்டை ஊக்குவித்தது.

ஔரங்கசீப் ஆலம்கீர் 1690 இல் கிழக்கிந்திய கம்பெனியை மன்னித்தார். பதினேழாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில், கிழக்கிந்திய கம்பெனி சீனாவிடமிருந்து பட்டு மற்றும் பீங்கான் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தது. சீனாவிற்குத் தேவையான எந்தவொரு பொருளும் அவர்களிடம் இல்லாததால், வெள்ளியை விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

இதற்கு ஒரு தீர்வும் காணப்பட்டது. வங்காளத்தில் பாப்பி விதைகள் எனப்படும் கசகசா சாகுபடி செய்யப்பட்டது. அபின் தயாரிக்க பிகாரில் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இவை சீனாவுக்குக் கடத்தப்பட்டன.

அதுவரை சீனாவில் "அபின்" மிக அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி சீன முகவர்கள் மூலம் மக்களிடையே அபின் பயன்பாட்டை ஊக்குவித்தது. இந்நிறுவனம் இந்த ஓபியம் வர்த்தகத்தின் மூலம் பட்டு மற்றும் பீங்கான் பாத்திரங்களை வாங்கி லாபம் ஈட்டியது.

சீன அரசாங்கம் அபின் வர்த்தகத்தை நிறுத்த முயன்றது. மேலும், அங்கு அபின் ஒழிக்கப்பட்ட பிறகே சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பல போர்கள் உருவாகின. கடைசியில், சீனாவுடன் பல ஒப்பந்தங்களை பிரிட்டன் செய்தது.

அழிக்கப்பட்ட அபினுக்கான இழப்பீடு இவ்வாறு மீட்கப்பட்டது. சீனாவின் துறைமுகங்கள் கைப்பற்றப்பட்டன. ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு என்பது, இந்தச் சங்கிலியில் ஒரு இணைப்பாக இருந்தது.

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி
படக்குறிப்பு, தொழில்துறை புரட்சி காரணமாக, ஐரோப்பிய நாடுகள் போர் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தன.

சீன அரசு விக்டோரியா மகாராணிக்கு ஒரு கடிதத்தை எழுதி, அபின் வர்த்தகத்தை நிறுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்தபோதிலும் அது விழலுக்கு இறைத்த நீரானது.

1707 இல் பேரரசர் ஔரங்கசீப் இறந்த பிறகு, பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் எதிராகத் திரும்பினர். இந்த சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, நிறுவனம் லட்சக்கணக்கான உள்ளூர்வாசிகளை இராணுவத்தில் சேர்த்தது.

தொழில்துறை புரட்சி காரணமாக, ஐரோப்பிய நாடுகள் போர் நுட்பங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தன. இந்தச் சிறிய ஆனால் ஆற்றலுள்ள இராணுவம் முகலாயர்கள், மராட்டியர்கள், சீக்கியர்கள் மற்றும் உள்ளூர் நவாப்களின் பழங்காலத் தொழில்நுட்பத்துடன் இருந்த பெரிய படைகளை எளிதில் தோற்கடித்தது.

1756 ஆம் ஆண்டில், நவாப் சிராஜ்-உத்-தௌலா இந்தியாவின் மிகச் செழுமையான பகுதி தன்னாட்சி மாநிலமான வங்காளத்தின் ஆட்சியாளரானார். முகலாய ஆட்சியின் வருவாயில் ஐம்பது சதவீதம் இந்த மாநிலத்திலிருந்து வந்தது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஜவுளி மற்றும் கப்பல் கட்டுமானத்திற்கான ஒரு முக்கிய மையமாக வங்காளம் இருந்தது.

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், EDWARD DUNCAN

படக்குறிப்பு, மக்கள் பட்டு, பருத்தி, எஃகு, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் விவசாய மற்றும் தொழில்துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டினர்.

இந்தப் பிராந்திய மக்கள் பட்டு, பருத்தி, எஃகு, பொட்டாசியம் நைட்ரேட் மற்றும் விவசாய மற்றும் தொழில்துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டினர். நிறுவனம் கல்கத்தாவில் தனது கோட்டையை விரிவுபடுத்தத் தொடங்கியது. அதன் துருப்புக்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.

பிராந்திய விரிவாக்கத்தை நிறுத்துமாறு நவாப் விடுத்த செய்தியை ஆங்கிலேயர்கள் மீறிய நிலையில், நவாப் கல்கத்தாவைத் தாக்கி பிரிட்டிஷ் கோட்டையைக் கைப்பற்றினார். பிரிட்டிஷ் கைதிகள் வில்லியம் கோட்டையின் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மிர் ஜாஃபரின் நம்பிக்கை துரோகமும் பிளாஸி யுத்தமும்

நவாபின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் இச்சை கொண்டிருந்த மிர் ஜாஃபர் என்ற ராணுவத்தளபதியுடன் கை கோர்த்தது கம்பெனி. 23 ஜூன் 1757 அன்று, பிளாஸியில் ஆங்கிலேய கம்பெனிக்கும் நவாபின் படைகளுக்கும் இடையே ஒரு போர் மூண்டது.

பீரங்கிகள் அதிகமாக இருந்ததாலும், மிர் ஜாஃபர் காட்டிக் கொடுத்ததாலும், ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். மிர் ஜாஃபர் வங்காள சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். ஆங்கிலேயர்கள் இப்போது மிர் ஜாஃபரிடமிருந்து சரக்கு வரி வசூலிக்கத் தொடங்கினர். இவ்வாறு இந்தியாவில் கொள்ளையடிக்கும் சகாப்தம் தொடங்கியது.

கருவூலம் காலியாகிவிட்ட நிலையில், ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுபட, ​​மிர் ஜாஃபர், டச்சு இராணுவத்தின் உதவியைப் பெற்றார். 1759 -லும் மீண்டும் 1764-லும் வெற்றி பெற்று, கம்பெனி, வங்காள நிர்வாகத்தைக் கைப்பற்றியது.

புதிய புதிய வரிச் சுமைகளால் பாதித்திருந்த ஆங்கிலேய நிறுவனம் வங்காளத்தில் மலிவான விலையில் பொருட்களை வாங்கி மற்ற நாடுகளில் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் பாதியில், பிரிட்டிஷ் வர்த்தகர்கள் வெள்ளி நாணயங்களைக் கொடுத்து இந்தியர்களிடமிருந்து பருத்தி மற்றும் அரிசி வாங்குவர் என்று அறிஞர் வஜாஹத் மசூத் எழுதுகிறார்,.

பிளாசி போருக்குப் பிறகு, கிழக்கிந்திய கம்பெனி நிதி மற்றும் வருவாய்த் துறையின் செயல்முறை உதவியுடன் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை நிறுவியது.

இந்தியர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இந்தியத் தயாரிப்புகளை வாங்குவதற்குச் செலவிடப்படும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், இந்திய மக்கள், தாங்கள் கொடுத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடாகத் தங்கள் தயாரிப்புகளை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியும் மோசமான காலகட்டமும்

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துணி நெசவு தவிர, இரும்பு வேலைகளிலும் இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டது.

ஒரு வரலாற்றாசிரியரும், விமர்சகரும், பத்திரிகையாளருமான பாரி அலீக் தனது 'கம்பெனி அதிகாரம்' என்ற புத்தகத்தில் "உலகின் ஒவ்வொரு நாட்டின் வணிகர்களும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்தனர்.

நாகரிகம் படைத்த மக்களிடையே, டாக்கா மற்றும் முர்ஷிதாபாத்தின் மஸ்லின் பயன்பாடு, பெருமை மற்றும் மேன்மையின் சான்றாக இருந்தது. இந்த இரண்டு நகரங்களின் மஸ்லின் ஆடை மற்றும் கோழி வகைகள், ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்தன. " என்று எழுதுகிறார்.

ஜவுளித் தொழில் இந்தியாவில் உள்ள மற்ற தொழில்களை விட மிகச் சிறந்த நிலையில் இருந்தது. பருத்தி மற்றும் கம்பளி துணி, சால்வைகள், மஸ்லின் மற்றும் எம்பிராய்டரி ஆகியவை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆமதாபாத், பட்டு மற்றும் தங்க-வெள்ளி வேலைகளுக்கு உலகம் முழுவதும் பிரசித்தமானது. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இந்த ஆடைகளுக்கு வரி விதிக்க வேண்டிய அளவுக்கு இவற்றின் தேவை இருந்தது.

துணி நெசவு தவிர, இரும்பு வேலைகளிலும் இந்தியா கணிசமான முன்னேற்றம் கண்டது. பாரதி பாடியதைப் போல் இரும்பைக் காய்ச்சி உருக்கி, எந்திரங்கள் வகுத்தது. இரும்பினால் செய்யப்பட்ட பொருட்களும் இந்தியாவுக்கு வெளியே அனுப்பப்பட்டன. முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில், முல்தானில் கப்பல்களுக்கு இரும்பு நங்கூரங்கள் செய்யப்பட்டன. கப்பல் கட்டுமானத்தில் வங்காளம் கணிசமான முன்னேற்றம் கண்டது.

"எங்கள் ஆட்சிக்கு முன்னர், இந்திய மக்கள் மிகவும் இனிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பதை சாதாரண பிரிட்டிஷாருக்குப் புரிய வைப்பது கடினம். வணிகர்கள் மற்றும் துணிச்சல்காரர்களுக்குப் பல்வேறு வகையான வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர், இந்திய தொழிலதிபர்கள் மிகவும் வசதியான வாழ்க்கையை நடத்தி வந்தனர் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என்று ஒரு ஆங்கிலேயர் கூறுகிறார்.

"ஒளரங்கசீப்பின் ஆட்சியில் சூரத் மற்றும் ஆமதாபாத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் முறையே பதிமூன்று லட்சம் மற்றும் நூறு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டியிருக்கும்."

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வர்த்தக நிறுவனமாக இருந்தது, ஆனால் 2.5 லட்சம் வீரர்கள் கொண்ட ராணுவம் இருந்தது. வர்த்தகத்தில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பில்லாத இடத்தில், ராணுவம் அதை சாத்தியமாக்கியது. கம்பெனியின் ராணுவம் அடுத்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தது.

நிறுவனத்திற்கு வருவாய் அளித்த உள்ளூர் ஆட்சியாளர்கள் அந்த பகுதிகளை ஆளத் தொடங்கினர். அதிகாரம் நேரடியாக உள்ளூர் ஆட்சியாளர்களின் கைகளில் இருந்தது, ஆனால் மாநிலத்தின் வருவாயில் பெரும்பாலானவை, பிரிட்டிஷ் பெட்டகத்திற்குச் சென்றன. பொதுமக்கள் செய்வதறியாது தவித்தனர்.

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், FINE ART IMAGES / HERITAGE IMAGES / GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தியா, கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது.

ஆகஸ்ட் 1765 இல், கிழக்கிந்திய கம்பெனி, முகலாய பேரரசர் ஷா ஆலமைத் தோற்கடித்தது. கிழக்கு மாகாணங்களான வங்காளம், பீகார் மற்றும் ஒரிசாவின் 'திவானை', அதாவது வருவாயைச் சேகரிப்பதற்கும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்குமான உரிமையை, ஆண்டுக்கு ரூ. 26 லட்சத்திற்கு ஈடாக லார்ட் கிளைவ் கையகப்படுத்தினார்.

இதன் பின்னர், இந்தியா, கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது. "உலகம் கடவுளுடையது, நாடு அரசனுடையது, ஆட்சி அதிகாரம் கம்பெனியுடையது என்று மக்கள் கற்பிக்கப்பட்டிருந்தனர்" என்று வரலாற்றாசிரியர் சையத் ஹசன் ரியாஸ் கூறுகிறார்.

அரச குடும்பத்தின் ஆடம்பரம்

முகலாய ஆட்சியின் கடைசி கட்டத்தின் போது, ​​பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சி ஆட்சியாளர்களால் சேகரிக்கப்பட்ட செல்வம், அரச குடும்பத்தின் ஆடம்பரத்திற்காகச் செலவிடப்பட்டது. சுல்தான் என்று அழைக்கப்படும் முகலாய இளவரசர்கள், சோம்பல், செயலற்ற தன்மை, கோழைத்தனம் மற்றும் ஆடம்பரத்திற்குப் பெயர் போனவர்களாக இருந்தனர்.

வரலாற்றாசிரியர் டாக்டர் முபாரக் அலி தனது 'ஆக்கிரி அஹத் கா முகலியா இந்துஸ்தான்' புத்தகத்தில், "1948 ஆம் ஆண்டில், இசை, நடனம் என்று கேளிக்கைகளில் மூழ்கி, சொத்தை அழித்த சுல்தான்களின் எண்ணிக்கை 2104 ஐ எட்டியது. ஷா ஆலமின் மகன் அக்பரும் இந்த மோகத்தில் தனது தந்தைக்குச் சற்றும் சளைக்கவில்லை. பதினெட்டு வயதில் அவர் பதினெட்டு பேகம்களின் கணவரானார். " என்று எழுதுகிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டில், பீகார் முதல் வங்காளம் வரையிலான தெற்குப் பகுதி 1769 முதல் 1773 வரை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டது. இந்தப் பஞ்சம் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் இறந்தனர் என்று கூறப்படுகிறது. மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர் பட்டினியால் இறந்ததாக கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸின் அறிக்கை கூறுகிறது.

கிராமப்புற மக்கள், வானம் பொய்த்தது மட்டுமல்லாமல், கம்பெனி விதித்த கடும் வரி காரணமாகவும் துன்புற்றனர். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், வங்காளப் பஞ்சம் மனிதனால் உருவாக்கப்பட்டது என்கிறார்.

ஏதேனும் மோதல் ஏற்பட்டால், கிழக்கிந்திய கம்பெனி தனது ராணுவத்தை உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு வாடகைக்கு வழங்கியது. ஆனால் இந்த ராணுவ செலவுகளின் சுமை காரணமாக, அவர்கள் விரைவில் நிதியிழந்து, ஆட்சியையும் இழக்க நேரிட்டது.

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி

பட மூலாதாரம், HULTON ARCHIVE / GETTY IMAGES

படக்குறிப்பு, முகலாய ஆட்சியின் கடைசி கட்டத்தின் போது, ​​பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சி ஆட்சியாளர்களால் சேகரிக்கப்பட்ட செல்வம், அரச குடும்பத்தின் ஆடம்பரத்திற்காகச் செலவிடப்பட்டது.

மனித துயரங்களில் குளிர் காய்ந்த கம்பெனி

இவ்வாறாக, கம்பெனி தொடர்ந்து தனது ஆளுமையை விரிவுபடுத்தியது. மனிதர்களின் பெருந்துயரத்தால் இந்நிறுவனம் பயனடைந்தது. வங்காள பஞ்ச காலத்தில், அரிசி விலை சுமார் 40 மடங்கு உயர்ந்தது.

ஒரு இளைய அதிகாரி நிலையில் உள்ள ஒருவர், இவ்வாறு, 60,000 பவுண்டு லாபம் ஈட்டினார். கிழக்கிந்திய கம்பெனியின் 120 ஆண்டுகால ஆட்சியில் 34 முறை பஞ்சம் ஏற்பட்டது.

முகலாய ஆட்சியின் கீழ் பஞ்ச காலத்தில் வரி குறைக்கப்பட்டது, ஆனால் கிழக்கிந்திய நிறுவனம் பஞ்சத்தின் போது வரியை அதிகரித்தது. மக்கள் தங்கள் பசி போக்க, சொந்தக் குழந்தைகளையே விற்கத் தொடங்கினர்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஊழியரான ஷேக் தீன் முஹம்மது தனது பயணக் குறிப்பில் "1780 ஆம் ஆண்டில், எங்கள் படைகள் முன்னேறிக் கொண்டிருந்த போது, ​​சீதா குண்டிற்குச் செல்லும் பல இந்து யாத்ரீகர்களைக் கண்டோம். 15 நாட்களில் நாங்கள் முங்கரிலிருந்து பாகல்பூர் அடைந்தோம்" என்று குறிப்பிடுகிறார்.

"நாங்கள் நகரத்திற்கு வெளியே முகாமிட்டோம். இந்நகரம் தொழில்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. வர்த்தகத்தைப் பாதுகாக்க அதனிடம் சொந்த இராணுவமும் இருந்தது. நாங்கள் நான்கைந்து நாட்கள் அங்கேயே தங்கியிருந்தோம். ஐந்து படைப்பிரிவுகளின் தலைமைப் பொறுப்பிலிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் ப்ரூக், அருகிலேயே தங்கியிருக்கிறார். சில சமயங்களில் அவர் மலைவாழ் மக்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

"இந்த மலைவாழ் மக்கள் பாகல்பூருக்கும் ராஜ்மஹாலுக்கும் இடையிலான மலைகளில் வசித்து வந்தனர், மேலும் அந்த வழியாகச் சென்ற பயணிகளைத் தொந்தரவு செய்தனர். கேப்டன் ப்ரூக் அவர்களில் பலரைக் கைப்பற்றி அவர்களைக் கொடுமைப்படுத்தி மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். சிலர் கொல்லப்பட்டனர். மலைகளிலிருந்து தெளிவாகக் காணக்கூடிய வகையில் சிலர் தூக்கிலிடப்பட்டனர். இதனால் அவர்களைச் சேர்ந்த மற்றவர்களின் மனதில் பீதி ஏற்பட்டது."

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி
படக்குறிப்பு, கம்பெனி தொடர்ந்து தனது ஆளுமையை விரிவுபடுத்தியது. மனிதர்களின் பெருந்துயரத்தால் இந்நிறுவனம் பயனடைந்தது.

"இங்கிருந்து நாங்கள் முன்னோக்கி நகர்ந்தோம், அவர்களின் உடல்கள் ஒவ்வொரு அரை மைல் தூரத்திலும் மலையின் அனைத்து முக்கிய இடங்களிலும் தொங்குவதைக் கண்டோம். நாங்கள் சுக்லி கடி(GADI) மற்றும் தலியா கடி வழியாக ராஜ்மஹாலை அடைந்தோம், அங்கு நாங்கள் சில நாட்கள் தங்கியிருந்தோம். ஆனால் சில வர்த்தகர்கள் மலைவாழ் மக்களால் தாக்கப்பட்டனர். எங்கள் வீரர்கள் அவர்களைப் பின்தொடர்ந்தனர். "

"பலர் கொல்லப்பட்டனர் மற்றும் முப்பது அல்லது நாற்பது மலைவாழ் மக்கள் பிடிபட்டனர். மறுநாள் காலையில் நகர மக்கள் யானைகள், குதிரைகள் மற்றும் எருதுகளை வழக்கம்போல மேய்ச்சலுக்கும் அடுப்பெரிக்க விறகு வாங்கவும் மலைகளுக்குச் சென்றபோது, ​​மலைவாழ் மக்களின் அருகே சென்றதும் தாக்கப்பட்டனர். ஏழு அல்லது எட்டு பேர் இறந்தனர். மூன்று யானைகள், பல ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் மற்றும் காளைகள் ஆகியவற்றை மலைவாழ் மக்கள் கொண்டு சென்றனர்."

" ஆயுதமேந்திய எங்கள் வீரர்கள் பதில் நடவடிக்கையில், அம்புகள் மற்றும் வாள்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பல மலைவாழ் மக்களைக் கொன்று, இருநூறு மலைவாழ் மக்களைக் காவலில் வைத்தனர். அவர்களது வாள் 15 பவுண்டுகள் எடை கொண்டவை. அவை இப்போது எங்கள் வெற்றிக் கோப்பையும் ஆனது. கர்னல் கிராண்டின் உத்தரவின்படி, இந்த மலைவாழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். சிலரின் மூக்கு மற்றும் காதுகள் துண்டிக்கப்பட்டன. சிலர் தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு நாங்கள் கல்கத்தா நோக்கி எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். "

இந்தியா, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சவாலாக உருவான திப்பு சுல்தான்

மைசூரின் ஆட்சியாளரான திப்பு சுல்தான் மட்டுமே பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன் கிழக்கிந்திய கம்பெனியை உண்மையாக எதிர்த்தார். மேலும் இரண்டு போர்களில் ஆங்கிலேய ராணுவத்தைத் தோற்கடித்தார். ஆனால் இந்தியாவின் பிற ஆட்சியாளர்களை வசப்படுத்தி, திப்பு சுல்தானைக் கட்டுப்படுத்த ஆங்கிலேயரால் முடிந்தது. 1799 ஆம் ஆண்டில் கவர்னர் ஜெனரல் லார்ட் வெலெஸ்லிக்குத் திப்புவின் மரணச் செய்தி தெரிவிக்கப்பட்டபோது, ​​அவர் தனது கண்ணாடிக் குவளையைக் காற்றில் உயர்த்தி, இன்று நான் இந்தியாவின் சடலத்தின் மீது கொண்டாடுகிறேன் என்று கூறினார்.

லார்ட் வெல்ஸ்லியின் ஆட்சிக் காலத்தில் இராணுவ வெற்றிகள் இருந்தபோதிலும் கிழக்கிந்திய கம்பெனி, நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. அதன் கடன் 30 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் அதிகரித்தது. நிறுவனத்தின் இயக்குனர், வெலெஸ்லியின் வீணான செலவு குறித்து அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினார். வெல்லஸ்லி மீண்டும் பிரிட்டனுக்கு அழைக்கப்பட்டார்.

1813 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பாராளுமன்றம் இந்தியாவில் வர்த்தகம் தொடர்பான கிழக்கிந்திய கம்பெனியின் ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது மற்றும் பிற பிரிட்டிஷ் நிறுவனங்களுக்கு வர்த்தகம் மற்றும் அலுவலகங்களைத் திறக்க அனுமதித்தது.

தொழில்துறை நாடான இந்தியா வேளாண் நாடானது

விவசாயிகளின் வருமானத்திற்கு 66 சதவீத வரி விதிக்கப்பட்டது, இது முகலாய காலத்தில் 40 சதவீதமாக இருந்தது.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை பிரபலப்படுத்த, பல நூற்றாண்டுகள் பழமையான உள்ளூர் ஜவுளித் தொழில் நசுக்கப்பட்டது, இதனால் 1815 இல் 2.5 மில்லியன் பவுண்டுகளாக இருந்த பிரிட்டனின் ஏற்றுமதி 1822 இல் 48 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது.

1820 ஆம் ஆண்டில் மெட்ராஸின் ஆளுநராக நியமிக்கப்பட்ட தாமஸ் மூன்ரோவிடம் 1813 ஆம் ஆண்டில், பிரிட்டன் சபை, தொழில்துறை புரட்சி இருந்தபோதிலும் பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஏன் இந்தியாவில் விற்கப்படவில்லை என்று கேட்ட போது, இந்திய உடைகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை என்று பதிலளித்தார்.

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை பிரபலப்படுத்த, பல நூற்றாண்டுகள் பழமையான உள்ளூர் ஜவுளித் தொழில் நசுக்கப்பட்டது, இதனால் 1815 இல் 2.5 மில்லியன் பவுண்டுகளாக இருந்த பிரிட்டனின் ஏற்றுமதி 1822 இல் 48 மில்லியன் பவுண்டுகளாக அதிகரித்தது.

ஜவுளி உற்பத்தியின் முக்கிய மையமாக இருந்த டாக்கா, அதன் மக்கள் தொகை 1.5 லட்சத்திலிருந்து இருபதாயிரமாகக் குறைந்தது. கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிக் தனது 1834 அறிக்கையில் பொருளாதார வரலாற்றில் இதுபோன்ற ஒரு பயங்கரமான சூழ்நிலைக்கு வேறு எந்த உதாரணத்தையும் காண முடியாது என்றும், இந்திய நெசவாளர்களின் எலும்புகளால் இந்தியாவின் நிலமே வெண்மையானது என்றும் எழுதினார்.

விவசாயிகளின் வருமானத்திற்கு 66 சதவீத வரி விதிக்கப்பட்டது, இது முகலாய காலத்தில் 40 சதவீதமாக இருந்தது. உப்பு உட்பட அன்றாட பயன்பாட்டின் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. இதனால் உப்பு நுகர்வு பாதியாகக் குறைந்தது. குறைந்த உப்பு பயன்படுத்துவதால், இது ஏழைகளின் ஆரோக்கியத்தை பாதித்தது. காலரா மற்றும் வெப்ப பக்கவாதம் காரணமாக கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குனரான ஹென்றி ஜார்ஜ் டக்கர் 1823 இல், இந்தியா ஒரு தொழில்மயமான நாட்டிலிருந்து விவசாய நாடாக மாற்றப்பட்டது, இதனால் பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தியாவில் கட்டாயமாக விற்கப்பட்டன என்று கூறுகிறார்.

1833 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது, கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கப்பட்ட ஏகபோக வர்த்தக உரிமை பறிக்கப்பட்டது. அது ஒரு அரசாங்க நிறுவனமாக மாற்றப்பட்டது.

1874 -ல் உயிரிழந்த கம்பெனி

கம்பெனியின் இராணுவம் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைக்கப்பட்டது மற்றும் கம்பெனியின் கடற்படை கலைக்கப்பட்டது. கம்பெனி ஆரம்பத்தில் இருந்தே வணிகத்திலும் அரசியலிலும் ஒரு பங்காளியாக இருந்தது, எனவே அதன் கடைசி மூச்சு 1874 வரை தொடர்ந்தது என்று லார்ட் மெக்காலே எழுதுகிறார்.
படக்குறிப்பு, கிழக்கிந்திய கம்பெனி சாலைகள், பாலங்கள், சத்திரங்கள் கட்டியது, ரயில்களை அறிமுகப்படுத்தியது, ஆனால் விமர்சகர்கள் இந்த திட்டங்கள் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக கூறுகிறார்கள், ஆனால் அதன் உண்மையான நோக்கம் பருத்தி, பட்டு, அபின், சர்க்கரை மற்றும் மசாலா வர்த்தகத்தை மேம்படுத்துவதாகும்.

வில்லியம் டெல்ரிம்பிள், தனது புத்தகமான 'த அனார்க்கி, த ரெலென்ட்லெஸ் ரைஸ் ஆஃப் த ஈஸ்ட் இண்டியா கம்பெனி'-ல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தனது இராணுவம் மற்றும் கடற்படையின் உதவியுடன் ஒரு தனியார் நிறுவனம் 20 கோடி மக்கள் தொகையுடைய ஒரு நாட்டை அடிமைப்படுத்திய தனித்துவமான எடுத்துக்காட்டு என்று எழுதினார்.

கிழக்கிந்திய கம்பெனி சாலைகள், பாலங்கள், சத்திரங்கள் கட்டியது, ரயில்களை அறிமுகப்படுத்தியது, ஆனால் விமர்சகர்கள் இந்த திட்டங்கள் பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாக கூறுகிறார்கள், ஆனால் அதன் உண்மையான நோக்கம் பருத்தி, பட்டு, அபின், சர்க்கரை மற்றும் மசாலா வர்த்தகத்தை மேம்படுத்துவதாகும்.

1835 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ், ஆங்கில மொழி மற்றும் இலக்கியத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது. 1857 சுதந்தரப் போரின்போது (கம்பெனியைப்பொருத்தவரை கிளர்ச்சி), கம்பெனி ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தைகளிலும் தெருக்களிலும் தொங்கவிட்டு கொன்றது, மேலும் பலர் நசுக்கிக் கொல்லப்பட்டனர்.

இது பிரிட்டிஷ் காலனித்துவ வரலாற்றில் மிகப்பெரிய படுகொலை. சுதந்தரப் போராட்டத்தின் அடுத்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி, பிரிட்டனின் விக்டோரியா மகாராணி கம்பெனியின் உரிமைகளை ரத்து செய்து, ஆட்சியை நேரடியாக தனது கைகளில் எடுத்துக் கொண்டார்.

கம்பெனியின் இராணுவம் பிரிட்டிஷ் இராணுவத்துடன் இணைக்கப்பட்டது மற்றும் கம்பெனியின் கடற்படை கலைக்கப்பட்டது. கம்பெனி ஆரம்பத்தில் இருந்தே வணிகத்திலும் அரசியலிலும் ஒரு பங்காளியாக இருந்தது, எனவே அதன் கடைசி மூச்சு 1874 வரை தொடர்ந்தது என்று லார்ட் மெக்காலே எழுதுகிறார்.

அதே ஆண்டில், பிரிட்டிஷ் செய்தித்தாள் த டைம்ஸ் ஜனவரி 2 இதழில், "மனித குல வரலாற்றில் இதுபோன்ற ஒரு காரியத்தை வேறு எந்த நிறுவனமும் செய்யவில்லை, மேலும் வரும் ஆண்டுகளில் யாரும் இதைச் செய்யவும் வாய்ப்பில்லை" என்று எழுதியது.

இந்தியா அப்போது பிரிட்டன் ராணியின் ஆட்சியின் கீழ் இருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு