You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸா குறித்து ஏஐ வீடியோவை வெளியிட்ட டிரம்ப் - சமூக ஊடகங்களில் எழும் விவாதங்கள் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பக்கத்தில் காஸாவை பற்றி ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், காஸாவில் சுமார் 48 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் இந்த காணொளி தொடர்பாக சமூக ஊடகங்களில் சூடான விவாதம் தொடங்கியுள்ளது.
சில இணையதளவாசிகள் இது குழப்பத்தை அதிகரிப்பதாகக் கூறுகின்றனர். மற்றவர்கள் இதை ஒரு அரசியல் கேலிக்கூத்து என்றும் கிண்டல் செய்வதற்கான ஒரு சுவாரஸ்யமான வழி என்றும் கூறுகின்றனர்.
இந்த வீடியோவை டிரம்ப் பகிர்வதின் பின்னணியில் உள்ள உத்தியை அறிய பிபிசி வெரிபை (BBC Verify ) முயன்றது.
வீடியோவில் என்ன இருக்கிறது?
ஏஐ உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த காணொளி , காஸா கடற்கரையின் ஒரு கற்பனைக் காட்சியைக் காட்டுகிறது.
இந்த வீடியோ காஸாவின் பேரழிவையும், ஆயுதமேந்திய மனிதர்களையும் காட்டுகிறது. பின்னர் கட்டடங்கள் கட்டும் பெரிய இயந்திரங்களையும் , அதன் பிறகு இடிபாடுகளிலிருந்து காஸாவின் கற்பனை கடற்கரை காட்டப்படுகின்றது.
அந்த வீடியோவில், சில குழந்தைகள் காஸாவில் உள்ள இடிபாடுகளிலிருந்து கடற்கரையை நோக்கி நடந்து செல்வதைக் காணலாம். அங்கு கடற்கரையோரம் கட்டப்பட்ட வானளாவிய கட்டடங்கள் தெரிகின்றன.
மற்றொரு காட்சியில், இருபுறமும் அடுக்குமாடி குடியிருப்புகளுடன் கூடிய ஒரு பரபரப்பான தெரு காணப்படுகிறது. ஈலோன் மஸ்க் கடற்கரையில் உணவு உண்ணும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடற்கரையில் சூரிய குளியலில் ஈடுபடுவதும் காட்டப்படுகின்றது. அவர்களின் பின்னால் "டிரம்ப் காஸா" என்று எழுதப்பட்டுள்ளது.
வீடியோவின் ஒரு பகுதியில் காஸாவில் டிரம்பின் பிரமாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டிருப்பதையும், அரபு பெண்களின் உடையில் சில ஆண்கள் நடனமாடுவதையும் காணமுடிகின்றது.
இது தவிர, வீடியோவில் ஈலோன் மஸ்க் டாலர் நோட்டுகளை தூவுவதும், குழந்தைகள் மேலிருந்து விழும் டாலர்களை பிடிப்பதுமாக காட்டப்பட்டுள்ளது.
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் பெரும்பாலும் ஒரு பிரச்னையை கேலி செய்ய அல்லது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்க உருவாக்கப்படுகின்றன.
முன்னதாக, காஸாவில் ஏற்பட்டுள்ள அழிவைக் காட்ட ஏஐ உருவாக்கிய வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டன. இதே போன்ற ஒரு படம் இதற்கு முன்பு பதிவிடப்பட்டிருந்தது, இதில் எகிப்து மற்றும் காஸா எல்லையில் உள்ள ரஃபாவில் உதவி பொருட்கள் நிறைந்த ஆயிரக்கணக்கான லாரிகள் காட்டப்பட்டிருந்தது. அதில் "எல்லா கண்களும் ரஃபாவின் மீது" என்று எழுதப்பட்டிருந்தது.
இது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது மற்றும் காஸாவில் நடைபெறும் பெருந்துயரங்களை சிறுமைப்படுத்தும் முயற்சியாக கூறப்பட்டது.
சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்வினை
இந்த வீடியோ தொடர்பாக அனைத்து சமூக ஊடக வலைத்தளங்களிலும் கடுமையான எதிர்வினை வெளிப்பட்டுள்ளது. சிலர் இதை ஆட்சேபகரமானது என்றும் அவமானகரமானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதே நேரத்தில், சில இணையதளவாசிகள் காஸா அழிவுக்கு ஹமாஸ் மற்றும் இரான்தான் காரணம் என்று குற்றம் சாட்டி, சில வீடியோக்களைப் பகிர்ந்துள்ளனர்.
டிரம்பின் காணொளிக்குப் பதிலளிக்கும் விதமாக, ஒரு பயனர் ஏஐ உருவாக்கிய மற்றொரு காணொளியைப் பகிர்ந்துள்ளார்.
அதில் டிரம்ப், பைடன், நெதன்யாகு மற்றும் ஈலோன் மஸ்க் ஆகியோர் பேரழிவிற்குள்ளான காஸா கடற்கரையில் இருப்பதும், பின்னணியில் மத்தியதரைக் கடலின் நீர், சிவப்பு நிறமாக மாறுவதும் காட்டப்படுகின்றது.
டிக்டாக்கில் வெளியிடப்பட்டு பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகி வரும் மற்றொரு வீடியோவில், "நாங்கள் ஒருபோதும் காஸாவை விட்டு வெளியேற மாட்டோம்" என்று ஒரு பெண் கூறுவது கேட்கிறது.
கெர் பியர் என்ற ஒரு பயனர் ஒரு கார்ட்டூனை வெளியிட்டு , "காஸா ஏஐ வீடியோவைப் பார்த்து டிரம்ப் ஏமாறக்கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் வீடியோவில் திருநர் சமூகத்தினர் இடம்பெற்றிருப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
LGBTQ மற்றும் திருநர் சமூகத்தினரை ஏற்க டிரம்ப் மறுத்துவிட்டார். மேலும் அமெரிக்காவில் இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
டிரம்ப் காஸாவை சூதாட்டக் கூடமாக மாற்ற விரும்புகிறார் என்று ஒரு பயனர் கூறியுள்ளார். வேறு சிலர் இதை ஒரு பிரசார காணொளி என்று கூறியுள்ளனர்.
டிரம்பின் சமூக ஊடக உத்தி என்ன?
டிரம்ப் தனது சொந்த விளம்பரத்திற்காக சமூக ஊடகப் போக்குகளைப் பயன்படுத்திக் கொள்வதில் பெயர் பெற்றவர்.
2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் அதை விரிவாகப் பயன்படுத்தினார்.
நேரடி ஒளிபரப்பு மற்றும் பாட்காஸ்ட்கள் மூலம் முடிந்தவரை பலரைச் சென்றடைய அவர் முயன்றார்.
இது தவிர, டிரம்பின் ஆதரவாளர்கள் அவரைப் பற்றி ஏஐ உருவாக்கிய வீடியோக்களைப் பகிர்ந்தனர்.
இதேபோன்ற ஒரு கற்பனை வீடியோவில் டிரம்ப் மற்றும் ஈலோன் மஸ்க் நடனமாடுவது காட்டப்பட்டது.
தற்போது டிரம்ப் பதிவிட்டுள்ள கற்பனை காஸா வீடியோ, ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது.
இந்த வகையான உள்ளடக்கம் 'கோபத்துக்கான தூண்டில்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது எதிர்வினையைத் தூண்டுவது.
இந்த காணொளியை வெளியிட்ட பிறகு டிரம்ப் இன்னும் எந்த எதிர்வினையும் காட்டவில்லை என்றாலும், இது ஒரு 'கோபத்தை தூண்டும் உத்தியாக' இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட உள்ளடக்கத்திற்கு அதிக லைக், ஷேர், கமெண்ட் வந்தால் அதை மேலும் பலருக்கு காட்டும் வகையில், சமூக ஊடகங்களின் அல்காரிதம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்களை எதிர்வினையாற்றத் தூண்டுகிறது. அது எதிர்மறையாக இருந்தாலும் சரி, நேர்மறையாக இருந்தாலும் சரி. இதன் மூலம் அதிகமான மக்களை குறிப்பிட்ட உள்ளடக்கம் சென்றடைகிறது.
ஒரு உள்ளடக்கம் அதிக மக்களை சென்றடைவது விளம்பர வருவாய்க்கும், சமூக ஊடக நிறுவனங்களின் லாபத்துக்கும் வழிவகுக்கும்.
காஸாக்கான டிரம்பின் திட்டம்
காஸா முனையை அமெரிக்கா கையிலெடுத்து, அங்கு தேவையான பணிகளை மேற்கொள்ள முடியும் என்று டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் கூறினார். மேலும் காஸாவை "மத்திய கிழக்கின் கடற்கரை ஓய்வு விடுதி நகரமாக" மாற்ற விரும்புவதாகக் கூறினார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, டிரம்ப் தனது திட்டத்தை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார்.
"பாலத்தீன மக்கள் வேறு வழியில்லாததால்தான் காஸாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். காஸா மீண்டும் கட்டப்படும் வரை, அதன் குடியிருப்பாளர்கள் வேறு இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், அப்போதுதான் அமெரிக்கா காஸாவைக் கட்டுப்பாட்டில் எடுத்து இந்த அழிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்" என்று அவர் கூறினார்.
"அந்த நிலத்தை சொந்தமாக்குவது, அதை மேம்படுத்துவது, ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்குவது..அது மிகவும் அருமையாக இருக்கும். அனைவருக்கும் இந்த யோசனை பிடிக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், மத்திய கிழக்கு நாடுகள் டிரம்பின் திட்டத்தை நிராகரித்தன.
அவரது முன்மொழிவை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் உட்பட சர்வதேச சமூகம் எதிர்த்தது. மேலும் 'இனச்சுத்திகரிப்பு' குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)