You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கொன்றுகொண்டே இருந்தனர்' - இரான் ஒடுக்குமுறை குறித்து நேரடி சாட்சியங்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், ரோஜா அசாதி மற்றும் சாரா நம்ஜூ
- பதவி, பிபிசி பாரசீக சேவை
"அவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி நேரடியாக சுட்டனர், போராட்டக்காரர்கள் எங்கு நின்று கொண்டிருந்தார்களோ அங்கேயே விழுந்தனர், இதை நான் என் கண்களால் பார்த்தேன்."
தான் பேசும்போது தன்னை கண்காணிக்கலாம் என்ற அச்சம் காரணமாக ஓமிட்டின் குரல் நடுங்குகிறது. அதிகாரிகளின் பழிவாங்கல் நடவடிக்கை குறித்த அச்சத்திற்கு நடுவே, இரான் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு இடையேயான மௌனத்தை உடைப்பதற்கு மிகப்பெரும் தைரியம் தேவைப்படுகிறது.
ஓமிட்டின் பெயர் அவரின் பாதுகாப்பு காரணமாக மாற்றப்பட்டுள்ளது. இரானில் மோசமாகிவரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அவர் கடந்த சில தினங்களாக தெற்கு இரானில் உள்ள சிறுநகரத்தில் தெருக்களில் இறங்கி போராடிவருகிறார்.
தன்னுடைய நகரத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளை கொண்டு ஆயுதமற்ற போராட்டக்காரர்களை சுட்டதாக அவர் தெரிவித்தார்.
"மிருகத்தனமான அரசுக்கு எதிராக நாங்கள் வெறுங்கைகளுடன் சண்டையிடுகிறோம்," என அவர் தெரிவித்தார்.
ரெஸா பஹ்லவியின் அழைப்பு
கடந்த வாரம் இரான் முழுதும் நடைபெற்ற பரவலான போராட்டங்களில் பாதுகாப்புப் படையினரால் இதேபோன்ற ஒடுக்குமுறைகள் நிகழ்ந்தது குறித்த தகவல்கள் பிபிசிக்கு கிடைத்துள்ளன.
போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இணைய வசதி அதிகாரிகளால் துண்டிக்கப்பட்டதால் இரானிலிருந்து செய்தி சேகரிப்பது முன்னெப்போதையும் விட மிகவும் கடினமாகியுள்ளது. இரானுக்குள் இருந்து செய்தி சேகரிக்க பிபிசி பாரசீக சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இரானில் மிகப்பெரிய தேசியளவிலான போராட்டங்களில் ஒன்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. போராட்டங்கள் ஆரம்பித்த 12-ஆம் நாள் இரவு அது. 1979-ஆம் ஆண்டு நிகழ்ந்த இஸ்லாமிய புரட்சியில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஷா-வின் (மன்னருக்குரிய பட்டம்) நாடு கடத்தப்பட்ட மகனான ரெஸா பஹ்லவியின் அழைப்புக்குப் பிறகு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பலரும் போராட்டங்களில் இணைந்ததாக தோன்றுகிறது.
அதற்கடுத்த நாள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, "இஸ்லாமிய குடியரசு பின்வாங்காது" எனத் தெரிவித்தார். அதன்பின், அவரிடமிருந்து பாதுகாப்புப் படையினர் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை உத்தரவுகளை பெற்றதைத் தொடர்ந்து மோசமான படுகொலைகள் நிகழ்ந்ததாக தோன்றுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இப்பிரச்னையை தூண்டிவிடுவதாக தெரிவித்துள்ள இரானிய அதிகாரிகள், "பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு" கண்டனம் தெரிவித்துள்ளதாக, அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
"தீர்ப்பு நாள் போன்று இருந்தது"
கடந்த வியாழக்கிழமை "தீர்ப்பு நாள்" போன்று இருந்ததாக டெஹ்ரானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தெரிவித்தார்.
"நீங்கள் நம்பமுடியாத வகையிலான, டெஹ்ரானின் தொலைதூர பகுதிகளில் கூட போராட்டக்காரர்கள் திரண்டனர்," என அவர் தெரிவித்தார்.
"ஆனால் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கொன்று கொண்டே இருந்தனர். அதை என் கண்களால் பார்த்தபோது என்னுடைய மன உறுதி முற்றிலும் குலைந்துவிட்டது. அந்த வெள்ளிக்கிழமை ஒரு குருதி தோய்ந்த நாள்."
வெள்ளிக்கிழமை நிகழ்ந்த கொலைகளுக்குப் பிறகு மக்கள் வெளியே செல்ல அஞ்சுவதாக தெரிவித்த அவர், தற்போது அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் தங்கள் வீடுகளிலிருந்து முழக்கமிடுவதாக கூறினார்.
போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் தெருக்களை சூழ்ந்துகொண்டதால் டெஹ்ரான் அப்போது போராட்டக்களமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால், "போரில் இரு தரப்பிலும் ஆயுதங்கள் இருக்கும். ஆனால் இங்கு முழக்கங்களை மட்டுமே இடும் மக்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு தரப்பில் மட்டும் நடக்கும் போர்." எனவும் அவர் கூறினார்.
டெஹ்ரானுக்கு சற்று மேற்கே உள்ள ஃபர்டிஸ் எனும் நகரத்தைச் சேர்ந்த நேரடி சாட்சியங்கள் கூறுகையில், தெருக்களில் காவல்துறையினர் பல மணிநேரங்களாக இல்லாத நிலையிலும், இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கீழ் செயல்படும் துணை ராணுவமான பசிஜ் படையினர் திடீரென போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தனர்.
நேரடி சாட்சியங்களின் கூற்றுப்படி, சீருடை அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வலம்வந்த படையினர், போராட்டக்காரர்களை நோக்கி சுட்டனர்.
குறுகிய தெருக்களுக்கு உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத கார்களில் வந்தவர்கள், போராட்டங்களில் ஈடுபடாத குடியிருப்புவாசிகளை நோக்கி சுட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
"ஒவ்வொரு குறுகிய தெருவிலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர்," என நேரடி சாட்சியமான ஒருவர் குற்றம் சாட்டினார்.
பிபிசி பாரசீக சேவையிடம் பேசியவர்கள் இரானுக்குள் நடப்பவை வெளியுலகம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து சர்வதேச ஊடகம் கூறும் எண்ணிக்கை தங்களின் சொந்த மதிப்பீடுகளின் ஒரு பகுதியையே பிரதிபலிப்பதாகவும் தெரிவித்தனர்.
இறந்தவர்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
சர்வதேச செய்தி ஊடகங்கள் அந்நாட்டுக்கு உள்ளேயிருந்து சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்படவில்லை, எனவே அவை நாட்டுக்கு வெளியே இருந்து இயங்கும் இரானிய மனித உரிமை குழுக்கள் தரும் தகவல்களையே பெரிதும் சார்ந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை நார்வேயை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் இரான் மனித உரிமைகள் அமைப்பு (IHRNGO) இரானில் குறைந்தது 648 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர்களுள் 9 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சில உள்ளூர் வட்டாரங்கள் மற்றும் நேரடி சாட்சியங்கள் கூறும் தகவல்களின்படி, பல்வேறு நகரங்களில் அதிகளவிலான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். அதன்படி, இந்த எண்ணிக்கை பல நூறு பேரிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வரை இருக்கலாம்.
இந்த எண்ணிக்கையை பிபிசியால் தற்போதைக்கு சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. இதுவரை எத்தனை போராட்டக்காரர்கள் இறந்தார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ அல்லது வெளிப்படையான புள்ளிவிவரங்களை இரானிய அதிகாரிகள் வெளியிடவில்லை.
எனினும், இந்தப் போராட்டங்களில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 பேர் கொல்லப்பட்டதாக இரான் ஊடகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படை "கலவரக்காரர்கள்" என அழைக்கும் அந்த போராட்டக்காரர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள பல மசூதிகள் மற்றும் வங்கிகளுக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளது.
பிபிசி பாரசீக சேவையின் உண்மை சரிபார்ப்பு குழுவால் சரிபார்க்கப்பட்ட காணொளிகள், போராட்டங்களின்போது வெவ்வேறு பகுதிகளில் காவல்துறை வாகனங்கள் மற்றும் சில அரசு கட்டடங்களுக்கு தீ வைக்கப்படுவதைக் காட்டுகின்றன.
பிபிசி பாரசீக சேவையிடம் பேசிய சாட்சியங்கள் மற்றும் காணொளிகள் ஆகியவை இரானின் பெரிய நகரங்களான டெஹ்ரான் மற்றும் அதற்கு அருகிலுள்ள கராஜ், வடக்கில் ரஷ்த், வடகிழக்கில் மஷத், தெற்கில் ஷிராஸ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவை. இந்த நகரங்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையத் தொடர்பு மூலம் அதற்கான வசதி கிடைத்துள்ளது.
போராட்டங்களின் ஆரம்பத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட சிறுநகரங்கள் குறித்த தகவல்கள், அப்பகுதிகளில் ஸ்டார்லிங்க் இணையவசதி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளதால் அரிதாகவே கிடைக்கப் பெற்றுள்ளன.
ஆனால், கிடைத்துள்ள சாட்சியங்களின் அளவு, நிலைத்தன்மை மற்றும் ஒத்துப்போதல் ஆகியவற்றின்படி பல்வேறு நகரங்களில் ஒடுக்குமுறை மற்றும் பரவலாக கொடிய வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதன் தீவிரத்தைக் காட்டுகின்றன.
மருத்துவமனை பணியாளர்கள் கூறுவது என்ன?
பிபிசியிடம் பேசிய செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள், தாங்கள் அதிகளவிலான சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை கண்டதாக தெரிவித்தனர்.
பல நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் காயம்பட்டவர்களால் நிரம்பி வழிவதாகவும், பலருக்கும் குறிப்பாக தலை மற்றும் கண்களில் படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
சடலங்கள் "ஒன்றின் மேல் ஒன்றாக குவிக்கப்பட்டதாக" கூறிய நேரடி சாட்சியங்கள், அவை குடும்பங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.
செயற்பாட்டாளர் ஒருவரால் நடத்தப்படும் டெலிகிராம் சேனலான வாஹித் ஆன்லனில் ஞாயிற்றுக்கிழமை வெளியான வன்முறை தொடர்பான காணொளிகளில் டெஹ்ரானின் காஹ்ரிஸாக் தடயவியல் மருத்துவ மையத்தில் அதிகளவிலான சடலங்கள் இருப்பதையும் பல குடும்பங்கள் துக்கத்துடனும் சடலங்களை அடையாளம் காண்பதிலும் ஈடுபட்டிருப்பதை பார்க்க முடிந்தது.
காஹ்ரிஸாக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக தோன்றும் வீடியோக்களில் ஒன்றில், உறவினர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள திரையில் காட்டப்படும் அடையாளம் தெரியாத உடல்களின் புகைப்படங்களை பார்ப்பதைக் காட்டுகின்றன.
கருப்புப் பைகளில் பல சடலங்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதையும் அதற்கு வெளியே உள்ள தெருவில் சடலம் இருப்பதையும் பார்க்க முடிந்தது, அவற்றில் சில சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஒரு காணொளி சேமிப்பு அறை ஒன்றில் பல உடல்கள் இருப்பதையும் மற்றொரு காணொளி டிரக் ஒன்றிலிருந்து இறந்தவர்களின் உடல்களை சிலர் வெளியே எடுப்பதையும் காட்டுகின்றன.
மஷத்தில் உள்ள கல்லறை ஒன்றில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்திற்கு முன்பாக 180 முதல் 200 வரையிலான உடல்கள் தலையில் தீவிரமான காயங்களுடன் கொண்டு வரப்பட்டு உடனடியாக அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ரஷ்த் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரின் உடல்கள் வியாழக்கிழமை அந்நகரில் உள்ள மருத்துவமனையின் பிணவறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
குடும்பங்களிடம் உடல்களை ஒப்படைப்பதற்கு முன்பாக "தோட்டாக்களுக்கான கட்டணத்தை" தருமாறு அவர்களிடம் பாதுகாப்புப் படையினர் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், கிழக்கு டெஹ்ரானில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர் ஒருவர் பிபிசி பாரசீக சேவையிடம் கூறுகையில், கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் சுமார் 40 உடல்கள் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். அந்த பணியாளரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மருத்துவமனையின் பெயர் வெளியிடப்படவில்லை.
ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "போராட்டக்காரர்களுக்கு எதிராக சமீப நாட்களாக உயிரிழப்புகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் வகையிலான வன்முறை மற்றும் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்துதல் குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன." என்றார்.
"உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டி, பாதுகாப்புப் படையினர் கடுமையான பலத்தை பயன்படுத்தியது கவலைக்குரியது என நான் வலியுறுத்த விரும்புகிறேன்," என இரானில் மனித உரிமைகள் சார்ந்து தற்போது நிலவும் சூழல் குறித்து பிபிசி பாரசீக சேவையிடம் ஐநா சிறப்பு அறிக்கையாளர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு