கடலூரில் விஷம் அருந்திவிட்டு மனைவி மீது பழிபோட்ட கணவர் - உண்மை வெளிவந்தது எப்படி? இன்றைய முக்கிய செய்திகள்

இன்றைய ( 10/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கடலூரில் புதிதாக திருமணம் செய்துக் கொண்ட நபர், மனைவி மீது பழி போடுவதற்காக தானே விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டிடி நெக்ஸ்ட் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "கடலூரை சேர்ந்த கலையரசனுக்கு திருமணமாகி 25 நாட்கள் ஆகின்றன. திருமணமான நாள் முதல் அவருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவரது மனைவி தான் காதலித்தவரையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பிப்ரவரி 20-ஆம் தேதி, கலையரசன் விஷம் அருந்திவிட்டு, போலீஸ் விசாரணையின் போது தனது மனைவியின் மீது பழி சுமத்தியுள்ளார். தனது மனைவி தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

முதலில் அவர் மனைவியே அவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்ததாக நம்பப்பட்டது. பிறகு போலீஸ் விசாரணையின் போது கிடைத்த மருந்து கடை ரசீதும் சிசிடிவி காட்சிகளும் பூச்சிக்கொல்லி மருந்தை கலையரசனே வாங்கினார் என்பதை உறுதிசெய்தன. கலையரசனின் நண்பர் ஒருவரும் இதை உறுதி செய்துள்ளார். அவர் கலையரசனை பார்க்க சென்ற போது பூச்சிக் கொல்லி மருந்து குப்பியை அவரிடம் காண்பித்ததாகவும் கூறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாற்றின் கரையில் உள்ள 9500 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய முடிவு

சென்னையில் அடையாற்றின் கரையில் வசிக்கும் 9500 குடும்பங்களை மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், " சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை மறுகுடியமர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அடையாறு நதி சீரமைப்பு திட்டத்தின் கீழ் 9500 குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்ய கண்டறியப்பட்டுள்ளது. இது வரை 20 குடியிருப்புகளைச் சேர்ந்த 5200 குடும்பங்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

அந்த இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியவை. குடும்பங்களில் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்த கணக்கெடுப்பு பணிகள் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சத்யா நகர், வடக்கு சைதாப்பேட்டை, திடீர் நகர், ஜோதியம்மாள் நகர், கிரீன்வேஸ் சாலை, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மறுகுடியமர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஒரு குடும்பத்துக்கு வீட்டுக்கு ஆகக்கூடிய செலவுத் தொகை ரூ.15 லட்சம், மாற்று உதவித்தொகை ரூ.5000 உள்ளிட்ட நிதி சார்ந்த நிவாரணங்களை அரசு வழங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

சென்னையில் 110 கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தினகரன் நாளிதழ் செய்து வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், " சென்னை வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், நூக்கம்பாளைம் பகுதியில் 2 இளைஞர்கள் கஞ்சா விற்பதாக பள்ளிக்கரணை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 110 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சா மற்றும் அவர்கள் வைத்திருந்த ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முருகுதி அப்பள நாயுடு (42), செம்மல் சந்திய பாபு (32) என்பதும், இவர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கிவந்து பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் கூலி தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10-வது நாளில் தாய் உயிரிழப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10-வது நாளில், தாய் கழிப்பறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மனைவி எலிசபெத் ராணிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிகிச்சைக்காக தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற போது வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் மயக்கமடைந்து சுயநினைவு இல்லாமல் கிடந்ததைக் கண்டு அவரது தாய் ஜெயாவதி, அங்கிருந்த மற்றவர்கள் உதவியுடன் அவரை மீட்டுள்ளார்.

பின்னர் எலிசபெத் ராணி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். எலிசபெத் ராணியின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது." என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கை : மகனுக்கு ஹெராயின் வழங்க முயன்ற தந்தை கைது

இலங்கையில் வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க முற்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கையின் வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், "போதைப் பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இளைஞர் ஒருவர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தற்கு 6 மாத புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது 4 மாதங்கள் நிறைவடையில் நிலையில் குறித்த இளைஞரை பார்வையிடுவதற்காக குருநாகல் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் குற்றத்தடுப்பு பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் தந்தையும், பொலிசாராக கடமையாற்றும் தாயும் வருகை தந்துள்ளனர்.

புனர்வாழ்வு நிலையத்திறகுள் சென்று தமது மகனை பார்வையிட்ட போது அவர்கள் இருந்த இடத்தை நோக்கி பொலிஸ் மேப்ப நாய் வந்ததை அவதானித்த அவர்கள் தமது பையில் இருந்த பொதி ஒன்றை எடுத்து வெளியே வீசியுள்ளனர். இதனை காவல் கடமையில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் அவதானித்துள்ளனர். உடனடியாக மோப்ப நாயின் உதவியுடன் அதனை சோதனையிட்ட போது அதில் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த மோப்ப நாய் அதனை வீசிய இளைஞரின் தந்தையான உப பொலிஸ் பரிசோதகரையும் அடையாளம் காட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உப பொலிஸ் பரிசோதகரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)