கவுன்சில் ஹவுஸ் முதல் நாடாளுமன்றம் வரை: 95 ஆண்டு பழைமை வாய்ந்த கட்டடத்தின் வரலாறு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெயதீப் வசந்த்
- பதவி, பிபிசி குஜராத்தி சேவைக்காக
இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைக்கிறார்.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் ஒரு குறியீடாகவும் இது பார்க்கப்படுகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
திரௌபதி முர்மு பழங்குடியினப் பெண் என்பதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தவிர வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் இதைத் திறந்து வைப்பதற்கும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மறுபுறம், இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது என்றும், விழாவிற்கு அனைவரையும் அழைக்கிறோம் என்றும் பாஜக தெரிவித்திருந்தது.
நாடாளுமன்றக் கட்டடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டுமா? என்ன காரணங்களுக்காக நாட்டுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடம் தேவைப்படுகிறது? பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை யார் கட்டினார்கள், எப்போது? அதற்கு முன் மக்கள் பிரதிநிதிகள் எங்கே அமர்ந்திருந்தார்கள்? போன்ற கேள்விகள் சாமானிய மக்கள் மனதில் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கான பதில்களுக்கு இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்கவும்.
இந்தியா சுதந்திரம் அடையும் முன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவும், சட்டங்களை இயற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைப்புகள், அரசு மற்றும் ஆட்சி

பட மூலாதாரம், Getty Images
மாநிலங்களவையின் முன்னாள் தலைமைச் செயலாளர் டாக்டர் யோகேந்திர நாராயண், 'இந்திய நாடாளுமன்றத்தின் அறிமுகம்' என்ற புத்தகத்தில், "இந்திய கவுன்சில் சட்டம்-1861 இல், கவர்னரின் நிர்வாகக் குழுவில் கூடுதல் அதிகாரபூர்வமற்ற உறுப்பினர்களை சேர்க்க ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதை நோக்கிய உறுதியான அமைப்பு எதுவும் நிறுவப்படவில்லை.1892 இல், இது தொடர்பான மற்றொரு சட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
இருப்பினும், 'இந்திய கவுன்சில் சட்டம் - 1909' கொண்டு வந்த சீர்திருத்தம் தான், இந்த திசையில் முதல் தீவிர முயற்சியாகும். இது 'மார்லே-மின்டோ சீர்திருத்தங்கள்' என்றும் அழைக்கப்படுகிறது.
கல்கத்தா (இன்றைய கொல்கத்தா) 1911 வரை பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது.
தில்லி, அதன் வரலாற்று பின்னணி மற்றும் கேந்திர முக்கியத்துவம் காரணமாக 1912 இல் அப்போதைய பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்டது.
தில்லி சட்டமன்றத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, 1913 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி டெல்லி அரசாங்கத்தின் பழைய செயலகத்தில் சட்டமன்றக் கவுன்சிலின் முதல் கூட்டம் நடைபெற்றது.
பொறியாளர் மாண்டேக் தாமஸ் வடிவமைத்த இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
1919 ஆம் ஆண்டின் 'இந்திய அரசு சட்டம்' இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மைல்கல் என்று டாக்டர் நாராயண் குறிப்பிடுகிறார். இதில், முதன்முறையாக இரண்டு அவைகள் என்ற முறை அமல்படுத்தப்பட்டது, இதன் நோக்கம் மாகாணங்களிலும் அரசாங்கங்களை அமைப்பதாகும்.
இருந்தும், மேற்கூறிய சட்டத்தை திறம்படச் செயல்படுத்த முடியவில்லை. இதனால் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய இயலவில்லை. 1935 இல் நிறைவேற்றப்பட்ட 'இந்திய அரசு சட்டம்-1935' கூட்டாட்சி மற்றும் பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது.
புதிய தலைநகர், பழைய நாடாளுமன்றம்
1947 இல் நாடு சுதந்தரம் அடைந்த பிறகு, மாகாண ஆளுநர்கள் அரசியலமைப்புத் தலைவர்களாக ஆக்கப்பட்டனர், அதே நேரத்தில் பொறுப்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்திய நாடாளுமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் அமர்ந்துதான் அரசியலமைப்பை உருவாக்கினார்கள். 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றதிலிருந்து இது நடைமுறையில் உள்ளது.
இந்திய அரசியலமைப்பு மக்களவை மற்றும் மாநிலங்களவை என்ற அமைப்பை நமக்கு வழங்குகிறது.
மக்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் மாநிலங்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில சட்டமன்றங்களின் எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மக்களவையின் உறுப்பினர்கள், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவை கலைக்கப்படுவதில்லை.
அதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, ஆறு ஆண்டுகள் நிறைவு செய்யும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
புது தில்லி புதிய தலைநகரமாக மாற்றப்பட்டபோது, கவர்னர் ஜெனரல் இல்லம் (தற்போதைய ராஷ்டிரபதி பவன்), ராணுவ அதிகாரிகளுக்கான குடியிருப்பு மற்றும் அரசு அலுவலகங்களுக்கான நார்த் ப்ளாக் மற்றும் சௌத் ப்ளாக் போன்ற பல புதிய கட்டடங்கள் தேவைப்பட்டன.
இந்தப் பணியை எட்வின் லுட்யென்ஸ் என்ற ஆங்கிலேய கட்டடக்கலைஞர் மேற்கொண்டார்.
இதன்காரணமாக, அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து பங்களாக்கள் அமைந்துள்ள இந்தப் பகுதி இன்று 'லுடியன்ஸ்' டெல்லி' என்று அழைக்கப்படுகிறது.
கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, முதல் உலகப் போர் (ஜூலை-1914 முதல் நவம்பர்-1918 வரை) வெடித்ததால், அப்போதைய ஆங்கிலேய அரசு தனது வளங்களைத் திசைதிருப்பவும், பணியின் வேகத்தைக் குறைக்கவும் வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், ANI
லுடியன்ஸின் பங்கு
மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, தற்போதைய நாடாளுமன்றக் கட்டடத்தின் வடிவமைப்பை ஹெர்பர்ட் பேக்கர் உருவாக்கியுள்ளார். இதில் சர் லுட்யென்ஸும் பங்களித்தார்.
அப்போதைய 'கவுன்சில் ஹவுஸ்' 1921 பிப்ரவரி 12 அன்று கன்னாட் அரசர் மற்றும் அப்போதைய இந்திய ஆளுநரால் திறக்கப்பட்டது.
இது 64 சுற்றுத் தூண்களைக் கொண்டுள்ளது, இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொரேனாவில் உள்ள யோகினி கோயில் அமைப்பை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்பட்டாலும் அதற்கான அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை. கட்டுமானம் முழுவீச்சில் நடந்த போது, 2,500 சிற்பிகள் மற்றும் கொத்தனார்கள் பணியமர்த்தப்பட்டனர்.
மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் டி.கே. விஸ்வநாதன் தனது புத்தகத்தில் இந்திய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் அதன் கட்டுமானத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இது 18 ஜனவரி 1927 அன்று அப்போதைய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அப்போது ரூ. 83 லட்சம் செலவிடப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடத்தின் விட்டம் 560 அடி. இது சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 27 அடி உயரமுள்ள 144 தூண்கள் இதற்கு ஒரு முக்கிய வடிவத்தைக் கொடுக்கின்றன.
சுவர்கள் மற்றும் ஜன்னல்களில் பலகணிகள், பளிங்கு ஜாலிகள் போன்ற இந்திய கட்டடக்கலை பாணியின் கூறுகளும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் மூன்று முக்கிய கட்டடங்கள் உள்ளன. 'பார்லிமென்ட் ஹவுஸ்', 'பார்லிமென்ட் லைப்ரரி' (நூலகம்) மற்றும் 'பார்லிமென்ட் ஹவுஸ்' (இணைப்பு). தேவைக்கேற்ப, நாடாளுமன்ற வளாகத்தில் கூடுதல் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1956 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்கள், அமைச்சர்களுக்கான அறைகள், கட்சிகளின் அலுவலகங்கள், அவைகளின் முதல்வர்களும் துணை முதல்வர்களும் உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் தங்குவதற்கும் என இரண்டு கூடுதல் தளங்கள் கட்டப்பட்டன.
மக்களவை அரைவட்டமாகவும் பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டும் உள்ளது. இதில் 545 எம்.பி.க்களுக்கான இருக்கை வசதிகள் உள்ளன.
மாநிலங்களவையில் 245 எம்.பி.க்களுக்கு இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் சபாநாயகரின் வலதுபுறத்தில் ஆளும் கட்சியும், இடதுபுறம் எதிர்க்கட்சியும் அமர்வது மரபு.

பட மூலாதாரம், RAJYA SABHA
சுதந்திரத்திற்குப் பிறகு நாடாளுமன்றம்
மூலக் கட்டடத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. பின்னர் இணைப்புக் கட்டடத்தில் அவற்றுக்கு இடம் ஒதுக்கப்பட்டன.
மத்திய பொதுப்பணித்துறையின் தலைமைக் கட்டடக் கலைஞர் ஜே.எம். பெஞ்சமின் மற்றும் மூத்த கட்டடக் கலைஞர் கே.ஆர். ஜானி இதனை வடிவமைத்தார்.
இதன் அடிக்கல்லை அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி 1970 ஆகஸ்டில் நாட்டினார். இணைப்புக் கட்டடம் 1975 அக்டோபரில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், 200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 'பார்லிமென்ட் மாளிகை' நூலகத்துக்கு, 1987ல் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்டினார். 1994ல் அப்போதைய சட்டசபை சபாநாயகர் சிவராஜ் பாட்டீல் பூமி பூஜை செய்து, மே-2002ல் அப்போதைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் அதைத் திறந்து வைத்தார். இது பிரபலக் கட்டடக்கலை நிபுணர் ராஜ் ரெவெல் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு 12 வாயில்கள் உள்ளன, ஆனால் போக்குவரத்துக்கான பிரதான வாயில் எண் ஒன்று, இது நாடாளுமன்றச் சாலையில் அமைந்திருக்கிறது.
தற்போதைய அரசாங்கம், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை 'லோக் கல்யாண் மார்க்' என்றும், 'ராஜ்பத்தை' 'கர்தவ்யபத்' என்றும் பெயர் மாற்றியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதி விரிவாக்கத்திற்காகப் புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு 2012-ம் ஆண்டு அப்போதைய மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமையில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் மற்றும் சென்ட்ரல் விஸ்டாவை வடிவமைக்கும் போது தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை மனதில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்ட்ரல் விஸ்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய நாடாளுமன்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி பல வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2026ம் ஆண்டுக்கு பின், நாட்டில் மக்களவை, மாநிலங்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படும். அப்போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதல் எம்.பி.க்களுக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தற்போதைய மத்திய மண்டபத்தில் 440 உறுப்பினர்கள் அமரும் வசதி உள்ளது. இதனால், பார்லிமென்ட் கூட்டுக் கூட்டத் தொடரில் சிரமம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
புதிய லோக்சபாவில் 888 இடங்களும், ராஜ்யசபாவில் 384 இடங்களும், மொத்த பலம் 1,272 ஆக இருக்கும்.
சென்ட்ரல் விஸ்டாவும் சர்ச்சையும்
பழைய கட்டடத்தின் அசல் வடிவமைப்பில் சிசிடிவி கேபிள், ஆடியோ வீடியோ சிஸ்டம், ஏர் கண்டிஷனிங், ஃபயர் ஃபைட்டிங் சிஸ்டம் போன்ற வசதிகள் இல்லாததால், இவையனைத்தும் புதிய கட்டடத்தில் சிறப்பாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
பழைய கட்டடத்தின் வடிவமைப்பு தீ விபத்து விதிகளுக்கு உட்பட்டு இல்லை என்று அரசு கூறுகிறது. கட்டடம் கட்டப்பட்ட போது, இந்தப் பகுதி நில அதிர்வு மண்டலம்-2 இல் இருந்தது, இது தற்போது நில அதிர்வு மண்டலம்-4 ஆக மாறியுள்ளது. இதனால் இககட்டடம் நில அதிர்வு தாக்கும் ஆபத்தில் உள்ளது.
சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய கட்டடத்தை ஜனாதிபதியால் அல்லாமல், பிரதமரால் திறந்துவைக்கும் விவகாரத்தில் சுமார் 20 அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்து இந்த அரசு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இருப்பினும், அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சர்ச்சைக்குள்ளாகித் தான் வந்திருக்கிறது. டிசம்பர்-2020 இல், பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியபோது, கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அதை வீண் செலவு என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
அப்போது சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக மரங்களை வெட்டவும் கட்டுமானத்தை மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்க மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ அதிகாரம் உள்ளதா என்ற சர்ச்சையும் எழுந்தது.
கட்டுமானப் பணிகள் காரணமாக, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாசுபாடு போன்ற பிரச்னைகள் எழுப்பப்பட்டன. இறுதியாக, உச்ச நீதி மன்றம் இதற்கு ஒப்புதல் அளித்தது.
புதிய கட்டடத்தை வடிவமைக்கும் பணி குஜராத்தைச் சேர்ந்த பிமல் படேல் வசம் ஒப்படைக்கப்பட்டது, இவர் இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோதிக்காகப் பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். இருவரின் நெருக்கம் ஊடகங்களிலும் எதிர்க்கட்சிகளிடையிலும் விவாதப் பொருளாக மாறியது.
அதன்பிறகு, நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும் தேசிய சின்னமான சிங்கங்களின் தோரணை மென்மையாக இல்லாமல் ஆக்ரோஷமாக இருப்பதாகவும் ஒரு பிரச்னை எழுப்பப்பட்டது.
தில்லியில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள மத்திய அலுவலகங்கள் மற்றும் துறைகள் சென்ட்ரல் விஸ்டாவில் அமைந்தால் வெளியில் இருந்து வரும் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்பது அரசின் வாதம்.
விஐபி அல்லது விவிஐபி நபர்களின் நடமாட்டத்தால் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை அல்லது ரயில் நிலையத்திற்குச் செல்லும் பொது மக்கள் லுடியன்ஸ் தில்லி வழியாகத் தான் வரவேண்டியிருப்பதால் அவதிக்குள்ளாகின்றனர். சென்ட்ரல் விஸ்டாவில் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டால் இந்த அவதி நீக்கப்படும்.

பட மூலாதாரம், GOVERNMENT OF INDIA
இந்திய நாடாளுமன்றம்: சீர்மிகு வரலாறு
ஒவ்வொரு ஆண்டும் வாடகை செலுத்துவதற்கே அரசு பல லட்சம் கோடி ரூபாய் செலவு செய்வதாகவும் அது இப்போது மிச்சப்படுத்தப்படும் என்றும் அரசு கூறுகிறது.
தற்போதைய பார்லிமென்ட் மாளிகைக்கு எதிரே கட்டப்படும் சென்ட்ரல் விஸ்டா செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய பார்லிமென்ட் மாளிகையை அருங்காட்சியகமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் மதிப்பீட்டின்படி, 75 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தக் கால கட்டத்தில் பழைய நாடாளுமன்ற கட்டடம் பல வரலாறுகளை உருவாக்கியுள்ளது.
ஆகஸ்ட் 15, 1947 இல், இந்த கட்டடத்தில் தான் இந்தியர்கள் ஆட்சி அதிகாரத்தை ஏற்றுக்கொண்டனர். இங்கிருந்து தான் பிரதமர் ஜவஹர்லால் நேரு நள்ளிரவில் ‘டிரிஸ்ட் வித் டெஸ்டினி’ என்ற புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார்.
புதிய அரசியலமைப்புக்காக அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் செய்த ஆலோசனைகளுக்கும் இந்தக் கட்டடம் ஒரு சாட்சி. 42வது திருத்தத்தில் ஒரு 'எளிய அரசியலமைப்பு' அமல்படுத்தப்பட்டது.
சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், உத்தரகாண்ட், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் இங்கிருந்து தான் உருவாக்கப்பட்டன. டையூ, டாமன், தாத்ராநகர் ஹவேலி மற்றும் புதுச்சேரி (முந்தைய பாண்டிச்சேரி) ஆகியவற்றை இந்தியாவுடன் இணைப்பது பற்றிய விவாதமும் இங்கிருந்து தான் நிகழ்த்தப்பட்டது.
1962-ல் சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா அடைந்த தோல்வியும், 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியும் குறித்து அரசும் எதிர்க்கட்சிகளும் விவாதம் செய்ததும் இங்கு தான்.
கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தான் இடையே எழுந்த நிலப்பிரச்னைகளைத் தீர்க்க இரு நாடுகளையும் பிரிப்பதற்கும் இங்கிருந்து தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வரதட்சணை எதிர்ப்புச் சட்டம் (1961), வங்கி ஆணையச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (2002) போன்ற சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் கூட்டு அமர்வுகள் அழைக்கப்பட்டன.
இது தவிர, ஒவ்வொரு ஆண்டும் முதல் அமர்வின் முதல் நாளில், குடியரசுத் தலைவர் கூட்டு அமர்வில் உரையாற்றி, அரசாங்கத்தின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் முன்வைப்பார்.
ஜிம்மி கார்ட்டர், பராக் ஒபாமா போன்ற வெளிநாட்டுப் பிரமுகர்கள் இந்திய நாடாளுமன்றத்தின் கூட்டுச் சபைகளில் உரையாற்றும் பெருமையைப் பெற்றுள்ளனர்.
இந்த நாடாளுமன்ற வளாகத்தில், நாட்டின் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு மற்றும் கமிஷன் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 50 ஆண்டு நிறைவையும் , நாடு சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் குறிக்கும் வகையில், நாடாளுமன்றம் இரவில் கூடி, 'ஒரே நாடு, ஒரே வரி முறை'க்காக ஜிஎஸ்டி குறித்து நள்ளிரவு வரை விவாதம் நடந்ததும் இங்கு தான்.
பஞ்சாயத்து ராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் அதிகாரத்தை பரவலாக்குவதை இந்த நாடாளுமன்றம் கண்டுள்ளது.
இந்த கட்டடம் 1991 இல் உரிமம் வழங்குவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையின் சாட்சியாகவும் உள்ளது.
டிசம்பர்-2001ல் இந்திய நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடந்தது.
இதையடுத்து, பிப்ரவரி - 2014ல், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிவினை சர்ச்சையின் போது, காங்கிரஸ் எம்.பி., லாகட்பட்டி ராஜகோபால், பேரவையில் மிளகுப் பொடியைத் தெளித்து அச்சச் சூழலை உருவாக்கினார்.
சொத்துரிமை மீதான கட்டுப்பாடுகள், மன்னர் மானிய ஒழிப்பு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகள் ரத்து போன்ற முக்கிய நிகழ்வுகளும் இந்தக் கட்டடத்தில் தான் நடந்துள்ளன.
இந்த நாடாளுமன்ற கட்டடம் சிறுபான்மை சமூகங்களான சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்களை சேர்ந்த ஜனாதிபதிகள் மற்றும் துணை ஜனாதிபதிகளைப் பார்த்துள்ளது.
தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திரா காந்தி ஒரு பெண் பிரதமராகவும், நஜ்மா ஹெப்துல்லா ராஜ்யசபாவின் துணைத் தலைவராகவும் இருந்து பெண்களுக்கு அதிகாரம் அளித்ததையும் இது கண்டுள்ளது.
இந்த நாடாளுமன்றம் வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 ஆக குறைத்துள்ளது.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான அங்கீகாரமும் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் இன்னும் கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் இது நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












