காணொளி: சிட்னி துப்பாக்கிச்சூடு - தந்தை, மகன் பற்றி கிடைத்த தகவல்கள் என்ன?
ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் 50 வயதான சஜித் அக்ரம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவரின் குடும்பத்தினர் சொல்வது என்ன? காவல்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
தெலங்கானா போலீஸ் சொல்வது என்ன?
கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி போன்டை கடற்கரையில் நடந்த ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் 2 பேரில் ஒருவர் சஜித் அக்ரம். மற்றொருவர் இவரின் 24 வயது மகன் நவீத் அக்ரம்.
இவர்களைப் பற்றி தெலங்கானா போலீசார் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர். அதில், சஜித் 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பிறகு 6 முறை மட்டுமே இந்தியா வந்து சென்றதாகவும், தனது குடும்பத்தினருடன் பெரியளவில் தொடர்பில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வயதான பெற்றோரை பார்ப்பதற்கும், குடும்ப சொத்துக்கள் தொடர்பான விவகாரத்திற்கும் அவர் வந்து சென்றதாகவும் கூறுகின்றனர். மேலும் தனது தந்தை இறப்புக்கு கூட சஜித் இந்தியா வரவில்லை என தெலங்கானா காவல்துறை அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சஜித்தின் பயங்கரவாத மனநிலை மற்றும் அது தொடர்பான நடவடிக்கை குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் மற்றும் நவீத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவுக்கும், தெலங்கானாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெலங்கானா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. சஜித் இந்தியாவில் இருந்த காலகட்டத்தில் அவர் மீது எந்த வித கிரிமினல் வழக்குகளுக்கு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
முழு விவரம் காணொளியில்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



