You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துணிவு படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு இன்று உலகமெங்கும் வெளியானது. துணிவு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து இருக்கிறது என ரசிகர்கள் பிபிசி தமிழிடம் படம் பார்த்த பிறகு பகிர்ந்து கொண்டனர்.
துணிவு பட ரிலீசை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்
அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் துணிவு ஆகும்.
விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்துடன் நேரடியாக போட்டியிடுவதால், துணிவு படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணி காட்சியிடப்பட்டது. இதற்காக இரவில் இருந்தே அஜித் ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள ரோகிணி, காசி உள்ளிட்ட திரையரங்களுக்கு முன்பாக கூடிய ரசிகர்கள் அஜித் கட் அவுட்டுக்கு முன்பாக ஆடிப்பாடி கொண்டாடினர்.
தமிழகத்தின் பிற பகுதிகளான திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களிலும் படம் வெளியாவதற்கு முன்பு ரசிகர்கள் அஜித் கட் அவுட் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
துணிவு படத்தின் கதை என்ன?
துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் அஜித் வங்கியை திட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபராக வருகிறார்.
வங்கிகள் கிரெடிட் கார்டு, மியுச்சுவல் ஃபண்ட், பெர்சனல் லோன் என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள் என படத்தில் விரிவாக பேசப்பட்டுள்ளது.
குறிப்பாக தனியார் வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து துணிவு திரைப்படம் விவரிக்கிறது.
அஜித் வங்கியில் ஏன் கொள்ளையடிக்கிறார், கொள்ளையடிக்கும் போது மாட்டிக் கொண்டாரா என்பதே துணிவு படத்தின் மீதி கதை.
துணிவு படம் எப்படி இருக்கிறது?
துணிவு படம் பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது படம் குறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை தெரிவித்தனர்.
"அஜித் ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் சிறந்த விருந்தாக அமையும்," என ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
"துணிவு திரைப்படம் ஆங்கில படத்திற்கு இணையாக எடுக்கப்பட்டு இருக்கிறது," என ரசிகர்கள் தெரிவித்தனர்.
"அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்தேன். அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தருகிறது," என அஜித் ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
படத்தில் வேறு எந்த படத்தில் சாயலும் இல்லை என்று ரசிகர் ஒருவர் கூறினார்.
"துணிவு படத்தின் முதல் பாதி வரை படம் விறுவிறுப்பாக அமைந்து இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி திரைப்படம் சற்று தொய்வடைந்து விட்டது," என படத்தை பார்த்த ரசிகர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
அஜித் - ஹெச்.வினோத் காம்போ எப்படி இருக்கிறது?
இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் கூட்டணியில் உருவான சிறந்த படமாக துணிவு அமைந்து இருப்பதாக ரசிகர்கள் கூறினர்.
வலிமை படத்தில் ஏற்பட்ட ஏமாற்றம், துணிவு படம் பார்த்த பிறகு ஏற்படவில்லை என ரசிகர்கள் கூறினர்.
படத்தின் இயக்குநர், வங்கிகளின் கட்டணக் கொள்ளை குறித்து சிறப்பாக விவரித்து இருக்கிறார். வங்கிகள் நமது தனிப்பட்ட தகவல்களை திரட்டி என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை துணிவு படத்தில் காட்சிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் தங்களது விமர்சங்களை தெரிவித்தனர்.
அஜித் குமார் நடிப்பு எப்படி?
அஜித் சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்தில் அஜித் ஸ்டைலாக தெரிகிறார். துணிவு படத்தை அஜித் தனது தோளில் சுமந்து இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
10 வருடங்களுக்கு பிறகு இன்னொரு மங்காத்தா போல இருப்பதாக மற்றொரு ரசிகர் கூறினார்.
படத்தின் இரண்டாவது பாதியில் உள்ள தொய்வை தவிர்த்து விட்டு பார்த்தால் துணிவு நன்றாக இருப்பதாக ரசிகர் ஒருவர் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த அஜித் திரைப்படத்தில் சில காட்சிகள் இழுவையாக இருந்தது, ஆனால் துணிவு மிகச்சிறப்பாக இருக்கிறது.
அஜித் ரசிகர்களை துணிவு திரைப்படம் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கிறது என ரசிகர்கள் கூறினார்கள்.
"இந்த பொங்கல் துணிவு பொங்கல்," என பிபிசி தமிழிடம் பேசிய ரசிகர் ஒருவர் கூறினார்.
வாரிசு Vs துணிவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு படமும்,அஜித் நடிப்பில் துணிவு படமும் ஒரே நாளில் வெளியாகி இருக்கின்றன. இருவரின் படங்களும் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகிறது.
2014ஆம் ஆண்டு பொங்கலின் போது விஜய் நடித்த ஜில்லா படமும், அஜித் நடித்த வீரம் படமும் ஒரே நாளில் வெளியாகின. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் படவெளியீட்டை சிறப்பாக கொண்டாடினார்கள்.
சில இடங்களில் கொண்டாட்டம் மோதலுக்கும் வழிவகுத்தது. சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று இரவில் இருந்தே விஜய் - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்தனர். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அஜித், விஜய் படங்களின் பேனர்களும் கிழிக்கப்பட்டன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்