இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நிழலாக தொடர்ந்த 'பஹல்காம்' - என்ன நடந்தது?

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி நிருபர்

"உனக்கும் எனக்கும் இடையே முன்பிருந்ததைப் போல இனி எந்த உணர்வும் இல்லை" என்கிற கவிதை இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டிக்கு கச்சிதமாகப் பொருந்தும்.

ஏனென்றால் ஞாயிறு நடைபெற்ற போட்டியில் வீரர்களிடையே எந்த உற்சாகமோ அல்லது உரையாடலோ இல்லை. இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

பஹல்காம் தாக்குதலின் தாக்கம் மிக வெளிப்படையாக நேற்றைய போட்டியில் தெரிந்தது. இந்த முறை இருநாடுகளின் விளையாட்டு வீரர்களும் களத்திற்கு வந்தபோது அவர்கள் பேசிக் கொள்ளவும் இல்லை. வழக்கமான கை குலுக்கலும் இல்லை.

ஏப்ரல் 22-இல் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு இரு நாடுகளும் முதல் முறையாக ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடின.

போட்டிக்குப் பிறகு பஹல்காம் தாக்குதல் பற்றி குறிப்பிட்ட இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்த வெற்றியை இந்திய ராணுவத்திற்கு சமர்ப்பித்தார்.

"நாங்கள் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் இருக்கிறோம். இந்த வெற்றியை நமது ராணுவத்திற்குச் சமர்ப்பிக்கின்றோம். அவர்கள் எப்போதும் எங்களுக்கு உந்துசக்தியாக இருப்பார்கள்" என்றா சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேட்டி கொடுக்கவில்லை.

கை குலுக்கிக் கொள்ளாத வீரர்கள்

இந்திய அணி பேட்டிங் செய்கையில் 15வது ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி இலக்கை எட்டியதும் சூர்யகுமார் யாதவ் மறுமுனையில் நின்றிருந்த ஷிவம் துபேவை அழைத்துக் கொண்டு நேரடியாக இந்திய அணியின் அறைக்குச் சென்றார்.

வழக்கமாக ஒரு கிரிக்கெட் போட்டியில் ஜெயித்த உடன் எதிரணி வீரர்களுடன் கை குலுக்கிக் கொள்வது ஒரு பாரம்பரியம். ஆனால் களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமலே திரும்பிச் சென்றார் சூர்யகுமார். மற்ற இந்திய வீரர்களும் போட்டி முடிந்த பிறகு களத்திற்கு வராமல் டிரஸ்ஸிங் ரூமிலே இருந்துவிட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுக்கம் டாஸ் போடும் போதே வெளிப்பட்டது. பாகிஸ்தான் டாஸ் வென்ற போது அந்த அணியின் கேப்டன் அகாவை வாழ்த்துவதற்கு சூர்யகுமார் கை குலுக்கவில்லை.

கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக மட்டுமல்ல, அதனுடன் சேர்ந்த பொழுதுபோக்கிற்காகவும் காத்திருந்தனர். ஆனால் இம்முறை பஹல்காம் தாக்குதலால் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்கிற பிரசாரம் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாகிஸ்தானுடனான போட்டியைத் தொடர்வது என்கிற பிசிசிஐ முடிவை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

போட்டி நடந்த அரங்கத்தில் காலி இருக்கைகளும் காணப்பட்டன. பொதுவாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட் விற்றுத்தீர்ந்துவிடும்.

35 ஓவர்கள் நடைபெற்ற போட்டியில் இரு நாட்டு வீரர்களும் ஒருமுறை கூட இன்னொருவருடன் பேசிக்கொள்ள முயலவே வில்லை.

இந்தியா-பாகிஸ்தான் வீரர்களும் வைரல் புகைப்படங்களும்

இது மிகவும் மாறுபட்ட ஒன்றாக இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் விளையாட இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை. ஆனால் துபையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற்றபோது இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் பேசிப் பழகிய காட்சிகளை நாம் பார்க்க முடிந்தது.

அப்போது சதமடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களோடு கை குலுக்கியதோடு அவர்களை அரவணைத்த புகைப்படங்களும் இணையத்தில் பரவியிருந்தன.

அதற்கு முன்னர் 2023-ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியா வந்தபோது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பாகிஸ்தானின் அப்போதைய கேப்டன் பாபர் அஸாமுடன் சிரித்துப் பேசிய புகைப்படங்கள் பரவியிருந்தன.

2023-இல் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போதும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியும் சந்தித்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

அத்தொடர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் ஜஸ்ப்ரீத் பும்ரா, தந்தை ஆகியிருந்தார். பும்ராவுக்கு பரிசு வழங்கிய அப்ரிடி அவரை வாழ்த்தியிருந்தார். அதற்கு அவரை அரவணைத்து நன்றி தெரிவித்திருந்தார் பும்ரா.

வைரலான ரிஸ்வான் மற்றும் விராட் புகைப்படம்

2022 ஆசிய கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு விராட் கோலி அவரின் ஜெர்ஸியை பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃபிடம் வழங்கிய காணொளி பிசிசிஐ-இன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

விராட் செயலை புகழ்ந்த ஹாரிஸ் ராஃப், "விராட் கோலி மிகச் சிறந்த வீரர். அவரிடம் நீண்ட காலமாக ஒரு ஜெர்ஸி ஒன்றைக் கேட்டுக் கொண்டிருந்தேன். தற்போது கையெழுத்திடப்பட்ட ஜெர்ஸி ஒன்றை வழங்கியுள்ளார். சிறப்பானதாக உணர்கிறேன்." எனத் தெரிவித்திருந்தார்.

விராட் கோலி சில ஆண்டுகளாக மோசமான ஃபார்மில் இருந்த போது பாபர் அஸாம் தனது எக்ஸ் பக்கத்தில், "இதுவும் கடந்து போகும்," என்று பதிவிட்டிருந்தார். இதற்கு விராட் கோலியும் நன்றி தெரிவித்திருந்தார். எதிரணி வீரருக்காக பாபர் அஸாம் வெளியிட்ட பதிவு அப்போது பரவலாக விவாதிக்கப்பட்டது.

2021-இல் கொரோனா காலகட்டத்தின்போது சவாலான ஒரு சூழலில் துபை மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

பாகிஸ்தான் அணி நீண்ட காத்திருப்புக்குப் பிறகு முதல் முறையாக உலக கோப்பையில் இந்தியாவுடன் வெற்றி பெற்றிருந்தது. தோல்விக்கு அப்பாலும் அப்போதைய இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை அரவணைத்து வாழ்த்தினார்.

அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "மிகைப்படுத்துதல் மற்றும் பாசாங்கிற்கு அப்பாலும் விளையாட்டின் உண்மையான கதை இது தான்." எனப் பதிவிட்டிருந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு