பாகிஸ்தான் நீண்ட காலத்துக்கு பிறகு அமெரிக்க கச்சா எண்ணெய் வாங்குவது ஏன்?

பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தன்வீர் மாலிக்
    • பதவி, பிபிசி உருதுக்காக

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் ஹப் மாவட்டத்தில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முனையத்திற்கு புதன்கிழமையன்று 10 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை கொண்டிருந்த கப்பல் வந்து சேர்ந்தது.

இந்த பாகிஸ்தான் சுத்திகரிப்பு ஆலை பல தசாப்தங்களில் முதல் முறையாக அமெரிக்க கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததாகக் கூறுகிறது.

அமெரிக்க கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குவதற்கான ஆர்டர்கள் ஏற்கனவே தங்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக சினர்ஜிகோ பாகிஸ்தான் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்வாகம் கூறுகிறது.

சுத்திகரிப்பு நிலையத்தின் கூற்றுப்படி, 10 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் கொண்ட முதல் சரக்கு வந்த பிறகு, அடுத்த சரக்கு நவம்பர் நடுப்பகுதியில் பாகிஸ்தானை வந்து அடையும், மூன்றாவது சரக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும்.

அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட 'எம்.டி.பெகாசஸ்' கப்பல் செப்டம்பர் 14-ஆம் தேதி ஹூஸ்டனில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை பிற்பகல் பாகிஸ்தானை அடைந்ததாக சினர்ஜிகோ பாகிஸ்தான் சுத்திகரிப்பு ஆலை தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை பன்முகப்படுத்துவதற்கும், அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கும் இத்துறையில் உள்ள வல்லுநர்கள் இதை ஒரு முக்கியமான படியாக பார்க்கின்றனர்.

இந்த ஆண்டு ஜூலையில், அமெரிக்கா பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு 19% வரியை விதித்தது, இது மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.

இந்த ஆண்டு ஜூலை மாதம், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானில் எண்ணெய் இருப்புகளை ஆராய்வதற்கான ஒப்பந்தத்தை அறிவித்தார்.

"பாகிஸ்தானுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் கீழ், இரு நாடுகளும் இணைந்து பாகிஸ்தானின் 'மிகப்பெரிய எண்ணெய் இருப்புகளை' மேம்படுத்தும்" என்று அவர் கூறியிருந்தார்.

இருப்பினும், அதிகாரிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானில் எண்ணெய் இருப்புக்களை ஆய்வு செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பாகிஸ்தான் தனது கச்சா எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

மேற்கு ஆசியாவிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான முக்கிய காரணம் பாகிஸ்தான் இந்த நாடுகளுக்கு மிக அருகில் உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் பிற நாடுகள் வெகு தொலைவில் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் வளைகுடா நாடுகளிடமிருந்தே தனது கச்சா எண்ணெயை இதுவரை வாங்கி வருகிறது.

அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான காரணம் என்ன?

உலகில் பல வகையான கச்சா எண்ணெய் உள்ளன, அவற்றில் ஒன்று அமெரிக்க டபிள்யூடிஐ (US WTI) கச்சா எண்ணெய்.

இது தவிர, ப்ரெண்ட் கச்சா எண்ணெய், அரபு லைட் கச்சா எண்ணெய், துபை கச்சா எண்ணெய் போன்ற நன்கு அறியப்பட்ட வகைகள் உள்ளன. அவற்றின் விலைகள் சற்று மாறுபடும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து பாகிஸ்தான் தனது கச்சா எண்ணெய் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

"அமெரிக்காவிடமிருந்து எண்ணெயை வாங்குவது பாகிஸ்தானுக்கு அவசியம் என்று நாங்கள் கூற முடியாது, ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெய் இறக்குமதியும் இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்." என்றார் சினர்ஜிகோ சுத்திகரிப்பு ஆலையின் துணைத் தலைவர் ஒசாமா குரேஷி .

"இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் அரசு இதனை பரிசீலிக்குமாறு எங்களிடம் கேட்டுள்ளது. எங்கள் நிறுவனம் ஒரு வணிக ரீதியான சுத்திகரிப்பு நிறுவனமாகும். மேலும் எங்கள் வணிக மாடலின் ஒரு பகுதியாக சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெயை வாங்குகிறோம்'' என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க கச்சா எண்ணெய் துபை கச்சா எண்ணெயை விட ஒரு பீப்பாய்க்கு மூன்று முதல் நான்கு டாலர்கள் மலிவானது.

அமெரிக்க கச்சா எண்ணெய் விலை மலிவானதா?

ஆனால் அமெரிக்க கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளை விட மலிவானதா என்பதுதான் கேள்வி, ஏனென்றால் தூரம் காரணமாக, கப்பல் கட்டணங்களும் அதிகமாக இருக்கும்.

இருப்பினும், அமெரிக்க கச்சா எண்ணெய் மற்ற நாடுகளை விட சற்று மலிவானது என்று ஒசாமா குரேஷி கூறினார்.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை நிபுணர் ஜாஹித் மிர் பிபிசி உருதுவிடம் "அமெரிக்க கச்சா எண்ணெய் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் அரபு லைட் கச்சா எண்ணெயை விட சற்று மலிவானது என்பது உண்மைதான்" என்றார்.

ஒசாமா குரேஷி கூறுகையில், "அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களின் விலைகளை கருத்தில் கொண்டு செய்த கணக்கீட்டின்படி, அந்த மாதங்களில் அமெரிக்க எண்ணெய் மேற்கு ஆசிய கச்சா எண்ணெயை விட மலிவாக இருந்தது''

''உலகிலுள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் பொதுவாக தங்களுக்கு அருகிலுள்ள நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. இதனால் போக்குவரத்து செலவு குறைவாக இருப்பதால், அது அவர்களுக்கு மலிவாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

பாகிஸ்தான் சுத்திகரிப்பு ஆலைகள் மேற்கு ஆசியாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கின்றன, ஏனெனில் தொலைவு குறைவாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"சினர்ஜிகோ சுத்திகரிப்பு ஆலை அமெரிக்க எண்ணெயை ஆர்டர் செய்வதற்கான காரணங்களில் ஒன்று, இங்குள்ள எண்ணெய் முனையம் 10 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் பெரிய கப்பல்களைக் கையாள முடியும், அதே நேரத்தில் பாகிஸ்தானில் உள்ள மற்ற துறைமுகங்கள் அதிகபட்சமாக 5 லட்சம் பீப்பாய்கள் திறன் கொண்ட கப்பல்களை மட்டுமே கையாள முடியும்" என்று ஒசாமா குரேஷி கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"பெரிய கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட முனையத்தின் காரணமாக சினர்ஜிகோவின் சரக்கு போக்குவரத்து செலவுகள் குறைவாக உள்ளன. இது அமெரிக்காவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை சாத்தியமாக்கியது" என்று ஜாஹித் மிர் கூறினார்.

"பெரிய கப்பல்களின் செலவு மற்ற கப்பல்களைக் காட்டிலும் குறைவாக இருப்பதால், ஒரு பீப்பாய்க்கு வரும் மொத்த செலவையும் இது குறைக்கும்" என்று ஒசாமா குரேஷி கூறினார்.

"அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அமெரிக்க எண்ணெய் இறக்குமதியில் மொத்த சுத்திகரிப்பு மார்ஜின் (நிகர லாபம்) காணப்பட்டதால் எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது" என்றார் ஒசாமா குரேஷி.

பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

பாகிஸ்தான் எவ்வளவு எண்ணெய் இறக்குமதி செய்கிறது?

பாகிஸ்தானில் கச்சா எண்ணெயின் உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருப்பதால், இது அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் தனது கச்சா எண்ணெய் தேவையில் 15 முதல் 20 சதவீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது என்று ஜாஹித் மிர் கூறினார்.

பாகிஸ்தானின் மத்திய புள்ளியியல் பணியகத்தின் கூற்றுப்படி, கடந்த நிதியாண்டில் சுமார் 55 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெயை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.

அதேசமயம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது.

பாகிஸ்தான் பெட்ரோலியம் தகவல் சேவையின் கூற்றுப்படி, கடந்த நிதியாண்டில் நாட்டில் உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 63,000 பீப்பாய்களாக இருந்தது, இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் குறைவாகும்.

பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஒரு நாளைக்கு 4.5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது என்று ஜாஹித் மிர் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு