தனியார் பள்ளிகள் மூலம் அரசு வழங்கும் "இலவச மற்றும் கட்டாய கல்வி" - உண்மை நிலை என்ன?

    • எழுதியவர், கவியரசு
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விண்ணப்பிப்போருக்கான அவகாசம் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிலையில், கல்வி உரிமைச் சட்டம் உண்மையில் அனைவருக்குமான கல்வியை உறுதி செய்துள்ளதா அல்லது அது பெற்றோரை கவரும் வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறதா என்பதை அறிய, கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பெற்றோர் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.

இதை விரிவாக பார்ப்பதற்கு முன்பு இந்த கல்வி உரிமைச் சட்டத்தின் ஆரம்ப அறிமுகத்தைப் பார்க்கலாம்.

இந்தியாவில் அடிப்படை கல்வி என்பது அனைவருக்குமான உரிமை.

நம் நாட்டில் அனைவரும் கல்வி பெறுவதை உறுதிப்படுத்தும் கல்வி உரிமைச்சட்டம் இயற்றப்பட்டு 14 ஆண்டுகளும் அது அமலுக்கு வந்து 13 ஆண்டுகளும் ஆகின்றன.

இத்தனை காலத்தைப் கடந்து வந்த பின் இந்த சட்டம் விளைவித்துள்ள பலன்களையும், அது பயனாளர்களை முறையாக சென்று அடைந்துள்ளதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்தே பல விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இருந்து வந்துள்ளன. அவற்றைக் கடந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சட்டம் தன் இலக்கை அடைந்துள்ளதா என்ற கேள்வி பிரதானமாகிறது.

என்ன சொல்கிறது ஆர்டிஇ சட்டம்?

இந்திய அரசியலமைப்பு சட்டம் 2002இல் (86-வது திருத்தம்), ஆறு முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வியை அடிப்படை உரிமையாக வழங்குவதற்காக, இந்திய அரசியலமைப்பில் 'பிரிவு 21A' சேர்க்கப்பட்டது. இது கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009 என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களுக்கான முழு கல்விக்கட்டணத்தையும் அரசே ஏற்கிறது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை எல்கேஜி முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பிலும், 1 ஆம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பிலும் விண்ணப்பித்து சேர்க்கலாம்.

அப்படி சேர்க்கும் பள்ளி, குழந்தையின் இருப்பிடத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்க வேண்டும். கடந்த 2021ஆம் ஆண்டு வரை இந்த சுற்றளவு 5 கிலோ மீட்டராக இருந்து வந்தது.

இத்திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் எந்த விதமான கட்டணமும் பெறக்கூடாது என்று சட்டம் சொல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் இலவசக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை அரசு 25% ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் இடங்கள் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மே 18ஆம் தேதி கடைசி நாள்.

இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து அதன் பலன்களை பெறுவது களத்தில் எப்படி உள்ளது?

"சட்டத்தில் திருத்தப்பட வேண்டியவை"

இந்த சட்டம் குறித்து இன்று நடைமுறையில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேசிய கல்வி செயல்பாட்டாளர் ஈஸ்வரன் கூறும்போது,"ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் உள்ள தனியார் பள்ளிகளில் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என்கிற நிபந்தனையை நிச்சயம் அரசு நீக்க வேண்டும். பல மாநிலங்களில் அப்படியொரு நிபந்தனை கிடையாது. ஊருக்கு வெளியில் இருப்பவர்களோ தொலைவில் இருப்பவர்களோ இந்த நிபந்தனையால் பாதிக்கப்படுவர். இதன் மூலம் மாணவர் சேர்க்கையை குறைக்கும் நடவடிக்கையை தான் அரசு எடுத்துள்ளது.

மேலும் சமூகத்தில் பின் தங்கிய வகுப்பை சார்ந்த மாணவர்களையும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களையும் ஒரே சேர்க்கை முறை மூலம் தேர்ந்தெடுப்பது சரியானதல்ல; அது பயன் தரக் கூடியதும் அல்ல. அத்துடன் எல்லா பள்ளிகளும் இச்சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களிடம் புத்தக கட்டணம், இதர கட்டணம் என ஏதோ ஒரு வழியில் கட்டணம் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன," என்று கூறினார்.

இலவசக் கல்வி: கள யதார்த்தம்

இந்த சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் பின்பற்றப்படுவது கண்காணிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கிறார்கள் கல்வியாளர்கள். அவர்கள் கூறுவதை உறுதிபடுத்தக்கூடிய சில பெற்றோர்களிடம் நாம் பேசினோம்.

இந்த திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகனை சேர்ந்த ஒரு பெற்றோரிடம் நாம் பேசினோம்.

"என் குழந்தையை இந்த திட்டத்தின் கீழ் பள்ளியில் சேர்க்கும்போது சேர்க்கை கட்டணம் எதுவும் கேட்கப்படவில்லை. தற்போது கல்விக்கட்டணம் எதுவும் கேட்கப்படுவதில்லை. ஆனால் ஒவ்வொரு வருடமும் 12,000 ரூபாய் புத்தக கட்டணம் என பள்ளிக்கு செலுத்தி வருகிறோம். அந்த கட்டணத்தை நாங்கள் தான் செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது" என்று அவர் கூறினார்.

அதே நகரில் தனியார் பள்ளியில் தமது பிள்ளையை சேர்த்த மற்றொரு பெற்றோர், "என் பிள்ளை படிக்கும் பள்ளியில் கடந்த ஆண்டு வரை ஒரு பருவ கட்டணத்தை நாங்கள் செலுத்த வேண்டும் என்று சொல்லி கட்ட வைத்தது பள்ளி நிர்வாகம். சமீபத்தில் இது பற்றி நான் பள்ளி முதல்வரிடம் பேசிய பிறகு, பருவ கட்டணம் கேட்பதை நிறுத்தி விட்டு, கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகள் (Extra curricular activities) என்று சொல்லி அதே கட்டணத்தை பெறுகிறார்கள். அதை மாணவர் விருப்பத்திற்கு விடாமல் 'கட்டாயம் கட்ட வேண்டும்' என திணிக்கிறார்கள்", என்று கூறினார்.

கட்டணம் செலுத்த நெருக்கடி

இதர கட்டணங்கள் என்று சொல்லி பணம் கேட்கும் பள்ளியில் தன் குழந்தையை இத்திட்டத்தின் கீழ் சேர்த்துள்ள பெற்றோர் ஒருவர் கூறும்போது,"இதர கட்டணங்கள் என்று ஒரு தொகையை கட்டாயப்படுத்தி கேட்கிறார்கள்.

அதை குறிப்பிட்ட அவகாசத்திற்குள் செலுத்தத் தவறும் போதெல்லாம் 'கட்டணம் செலுத்த தவறியவர்கள்' என்று கரும்பலகையில் எழுதப்படும் மாணவர்களின் பெயர் பட்டியலில் என் பிள்ளையின் பெயரையும் எழுதுகிறார்கள்" என்று கூறினார்.

இப்படி பொதுவெளியில் மாணவர்களின் பெயர்களை வெளியிடுவதை அவமானப்படுத்தும் செயல் செயல் என்று அரசு பொதுவாகவே கண்டித்துள்ளது. ஆனால் அரசின் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களே இப்படி நடத்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

இது போன்ற செயல்களால் ஏற்படக்கூடிய உளவியல் பிரச்னைகளை விவரித்த கல்வி செயல்பாட்டாளர் ஈஸ்வரன், "இப்படி மாணவர்களை நடத்துவது உளவியல் ரீதியாக அவர்களைப் பெரிதும் பாதிக்கும். சக மாணவர்கள் முன்னிலையில் இப்படி பாகுபாட்டுடன் நடத்தப்பட்டால் அவர்கள் சமூக வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் அந்த மாணவருக்குள் தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும். அதுவும் இந்த சட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களை இப்படி நடத்துவது நிச்சயம் கண்டிக்கத்தக்கது," என்று கூறுகிறார்.

தன் பிள்ளையை பள்ளியில் சேர்த்த காலத்தில் இருந்து கடந்த மாதம் வரை கட்டண விஷயத்தில் பள்ளியுடன் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி மேட்டுப்பாளையத்தில் உள்ள பெற்றோர் நம்மிடம் பேசினார்.

"நான் என் குழந்தையை எல்கேஜியில் சேர்த்தபோது கல்விக் கட்டணத்தை என்னை செலுத்த சொன்னார்கள். அரசிடம் இருந்து நிதி வந்தவுடன் எனக்கு கட்டணத்தை திருப்பி அளிப்பதாகக் கூறியது பள்ளி நிர்வாகம். அவர்கள் சொன்னதை நம்பி எல்கேஜி, யூகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பு என மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நான் கல்விக் கட்டணம் கட்டினேன். ஆனால் கடைசி வரை எனக்கு அந்த கட்டணம் திருப்பி அளிக்கப்படவில்லை.

அதன் பிறகு நான் பள்ளி நிர்வாகத்திடம் மூன்று ஆண்டுகளுக்கான கட்டணத்தை எனக்கு அளிக்காமல் இனி எந்த கட்டணமும் செலுத்த மாட்டேன் என்று சொன்னேன். கடந்த முழு ஆண்டு தேர்வின்போது, நான் கட்டாமல் இருந்த ரூ.4,000 கட்டணத்தைக் காரணம் காட்டி என் பிள்ளையைத் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. நான் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டேன். ஆனால் அதற்கு கூட அவர்கள் சம்மதிக்கவில்லை. எப்படியோ பணத்தை புரட்டி கட்டணத்தை செலுத்தியபின் தான் என் பிள்ளையால் தேர்வெழுத முடிந்தது" என்று கூறினார்.

தாங்கள் எந்த கட்டணமும் கட்ட வேண்டியதில்லை என்று தெரிந்திருந்தும், பள்ளி நிர்வாகத்தை எதிர்த்தாலோ, இது குறித்து புகார் அளித்தாலோ தங்கள் பிள்ளைகளுக்கு பிரச்சனை வரக்கூடும் என்ற அச்சத்தில் இவர்கள் அனைவரும் நிர்வாகத்திற்கு பணிந்து போவதாகக் கூறினார்கள்.

கள்ளக்குறிச்சியில் இருந்து நம்மிடம் பேசிய பெற்றோர் ஒருவரும் இதே போல் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

"இந்த திட்டம் மூலம் தனியார் பள்ளியில் என் பிள்ளையை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தேன். இப்போது அவன் ஏழாம் வகுப்பு செல்கிறான். சேர்க்கும்போது இலவசம் என்று சொல்லித்தான் சேர்த்தார்கள். ஆனால் இன்று வரை புத்தகம் மற்றும் வாகனக் கட்டணம் என்று வருடத்திற்கு ரூ.10000 செலுத்தி வருகிறேன். நானும் என் கணவரும் தினக்கூலிகள் தான். அரசு குறைந்தது புத்தகக் கட்டணத்தை மட்டுமாவது நீக்க வழி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

"தனியார் பள்ளிகளின் தந்திரம்"

இது குறித்து ஈஸ்வரன் பேசும்போது, "பல பள்ளிகள் இன்றும் இந்த திட்டம் முறையான பயனாளர்களைச் சென்று அடைவதற்கு தடையாக இருக்கின்றன. தங்கள் பள்ளிகளுக்கு சேர்க்கைக்காக வரும் பணவசதி கொண்ட பெற்றோரிடம் இந்த திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்கும்படி வலியுறுத்துகிறார்கள். அந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு கட்டணத்தில் இருந்து தள்ளுபடி வழங்குவது போல் தந்திரமாக கட்டணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம் முறையாக இந்த சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் பெற்றோர்களிடம், கல்விக்கட்டணம் மட்டும்தான் அரசு வழங்கும், புத்தகக் கட்டணம், சீருடைக்கட்டணம் போன்ற பிற கட்டணங்களைப் பெற்றோர் தான் கட்டவேண்டும் என்று பெற்றோர்களை ஏமாற்றி கட்டணம் கட்டச் செய்கிறார்கள்" என்று கூறினார்.

"பயனற்ற சட்டம்"

இந்த சட்டத்தை நம்மிடையே விரிவாகப் பேசினார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"ஒரு நாடு விடுதலை அடைவதன் உண்மையான வெளிப்பாடு, அரசு தன் முழு பொறுப்பிலும் செலவிலும் கல்வியை வழங்குவது. இந்தியா விடுதலை அடைந்தபின் இப்படியொரு கோரிக்கை எழுந்தபோது, `இந்தியாவின் பொருளாதாரம் கல்வியை அடிப்படை உரிமையாக கொடுப்பதற்கு இடம் கொடுக்கவில்லை' என்றது, அடிப்படை உரிமைகளை வரையறுத்த குழு. அப்போது அதிர்ந்துபோன அம்பேத்கர், அரசு நெறிமுறைக் கட்டளைகளின் கோட்பாடு (Directive principles of state policy) பாகம் நான்கில் 45-வது பிரிவில் அரசு 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்க முயற்சிக்கும் என்ற நெறிமுறையைக் கொண்டு வந்தார். (The State shall endeavour to provide, within a period of ten years from the commencement of this Constitution, for free and compulsory education for all children until they complete the age of fourteen years).

ஆனால் 2002-ல் 86-வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டபோது இது மாற்றி அமைக்கப்பட்டது. உச்சவரம்பு 6 வயது ஆக்கப்பட்டு, `for’ என்கிற இடைச்சொல் இலவச மற்றும் கட்டாய கல்விக்கான வாக்கியத்திலிருந்து நீக்கப்பட்டது (The State shall endeavour to provide early childhood care and education for all children until they complete the age of six years).

அதாவது அரசு இலவச மற்றும் கட்டாய கல்வியை வழங்க வேண்டும் என்கிற நெறிமுறையில் இருந்து விலகி, இலவச மற்றும் கட்டாய கல்வி வழங்குவதற்கான சூழலை உருவாக்கும் என்ற நெறிமுறைக்கு வந்தது.

பல கல்வியாளர்கள் அந்த காலகட்டத்தில் இதை எதிர்த்தனர். ஆனால் 'ஏதோ ஒரு வழியில் இலவச மற்றும் கட்டாய கல்வி கிடைத்துவிட்டதே' என்ற ஒரே கூற்றை சொல்லியே இதை மூடி மறைத்து விட்டார்கள். அப்படி திருத்தப்பட்ட சட்டத்தின் தொடர்ச்சி தான் இந்த கல்வி உரிமைச் சட்டம்.

இப்போதும் இதை மிகச்சிறந்த ஒரு திட்டமாக மக்கள் கருதுகிறார்கள். ஆனால், இது மக்களைத் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்ல வற்புறுத்தும் ஒரு முயற்சி தான். ஒரு பக்கம் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாகவும், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துவிட்டு, மற்றொரு பக்கம் இப்படி செய்வது தனியார் பள்ளிகளுக்கு விளம்பரம் தேடித்தரும் செயல் தான்.

இலவச கல்வி என்பது வெறும் கல்விக்கட்டணத்தை மட்டும் உள்ளடக்கியது கிடையாது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கிடைக்கும் சத்துணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் இந்த திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் கிடைக்காது. தனியார் பள்ளிகளில் அடிக்கடி இதர செலவுகள் என்ற பெயரில் ஏதாவது ஒரு கட்டணம் கேட்கப்பட்டு கொண்டுதான் இருக்கும். பின்தங்கிய மாணவர்கள் அவற்றையெல்லாம் எப்படி கையாள முடியும்?

அரசு பள்ளிகளை திறம்பட நடத்த முடியாத அரசு, தன் இயலாமையை மறைப்பதற்காக, பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள் என்று கூறுவதும், இப்படி பெற்றோர்களைத் தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும்படி வழி காட்டுவதும் எந்த வகையில் நியாயமானதாக இருக்க முடியும்? அரசு பள்ளிகளுக்கு வந்து சேரவேண்டிய மாணவர்களையும், நம்பகத்தன்மையையும் தனியார் பள்ளிகளுக்கு திருப்பியனுப்பும் முயற்சியைத்தான் இந்த திட்டம் மூலம் அரசு செய்து வருகிறது," என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

பெற்றோர்களும் செயல்பாட்டாளர்களும் முன்வைக்கும் இந்த விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்திடம் (Directorate Of Matriculation Schools) பேச முயற்சித்து நாம் செய்த அழைப்புகளுக்கும் மெயிலுக்கும் பதில் கிடைக்கவில்லை. இந்த திட்டம் குறித்த குறைகள் மற்றும் சந்தேகங்கள் பற்றி தெரியப்படுத்த அரசால் கொடுக்கப்பட்டுள்ள உதவி எண் உபயோகத்தில் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: