காணொளி: ‘காபி’க்கு பின்னே இருக்கும் ஆட்டுக்குட்டி கதை தெரியுமா?
காலையில் காபி, மதியம் காபி, மாலையில் காபி- இப்படி பலருக்கு காபி குடிக்காவிட்டால் அன்றைய நாளே ஓடாது. தினமும் நாம் பருகும் இந்தக் காபி எங்கு தோன்றியது என்பதற்கு பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.
அவற்றில் மிகவும் பிரபலமானது, ஒரு ஆட்டின் மூலம் காபி கண்டுபிடிக்கப்பட்டது என்ற கதை. கிபி 9ஆம் நூற்றாண்டில் எத்தியோப்பியாவில் ‘கால்டி’ என்ற ஆட்டு மேய்ப்பவர் வாழ்ந்து வந்தார். ஒருநாள், திடீரென தனது ஆடுகள் அனைத்தும் மிகுந்த சுறுசுறுப்போடு நடமாடுவதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார்.
காரணம் அறிய முயன்றபோது, அந்த ஆடுகள் காபி பழங்களைத் தின்றதைக் கண்டறிந்தார். ஆர்வத்தால் அவர் தாமும் அந்தப் பழத்தைச் சுவைத்தார்; உடனே உற்சாகமாக உணர்ந்தார். இதுவே மனித உணவில் காபி ஒரு பகுதியாக இணைவதற்கான ஆரம்பமாகக் கருதப்படுகிறது.
காபியின் தோற்றம் குறித்து ஏமனிலும் இன்னொரு கதை நிலவுகிறது. அங்கு வசித்த ஒரு சூஃபி துறவியைச் சுற்றி உருவான அந்தக் கதையில், ஆடுகளுக்கு மாற்றாக பறவைகள் காபி பழங்களைத் தின்று சுறுசுறுப்படைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன்பிறகு, காபி மெதுவாக மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு பானமாகப் பரவத் தொடங்கியது.
உலகில் முதலாவது காபி ஹவுஸ் 15ஆம் நூற்றாண்டில், அன்றைய கான்ஸ்டான்டிநோபிள் (இன்றைய இஸ்தான்புல்) நகரில் திறக்கப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



