You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார்: பாஜக கூட்டணியை 'உடைத்தவருக்கு' துணை முதல்வர் வாய்ப்பு - காங்கிரஸ் போடும் கணக்கு என்ன?
- எழுதியவர், தீபக் மண்டல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிகாரில் 'மகா' கூட்டணி வெற்றி பெற்றால், விகாஷீல் இன்சான் கட்சி (VIP) நிறுவனர் முகேஷ் சஹானி துணை முதல்வராக இருப்பார்.
வியாழக்கிழமை பாட்னாவில் நடைபெற்ற மகா கூட்டணி கட்சிகளின் (ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விகாஷீல் இன்சான் +) செய்தியாளர் சந்திப்பில், மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மகா கூட்டணியின் சார்பாக பிகாரின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அசோக் கெலாட் முன்மொழிந்துள்ளார்.
முகேஷ் சஹானி கூறியது என்ன?
"இந்த தருணத்திற்காக நாங்கள் மூன்று ஆண்டுகளாகக் காத்திருந்தோம். பாஜக எங்கள் கட்சியை உடைத்து எங்கள் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது. இப்போது பாஜகவை உடைக்கும் வரை நாங்கள் விலக மாட்டோம்" என்று மகா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் முகேஷ் சஹானி கூறினார்.
"கங்கை நீரை எங்கள் கைகளில் ஏந்தி நாங்கள் ஒரு சபதம் எடுத்தோம். இப்போது நேரம் வந்துவிட்டது. மகா கூட்டணியுடன் உறுதியாக நிற்பதன் மூலம், பிகாரில் எங்கள் அரசாங்கத்தை அமைத்து, பாஜகவை மாநிலத்திலிருந்து வெளியேற்றுவோம்" என்று அவர் கூறினார்.
"பாஜக தனது கூட்டாளிகளிடமிருந்து உதவி பெறுகிறது, ஆனால் வேலை முடிந்ததும் அவற்றை விழுங்குகிறது. நாங்கள் ஏற்கனவே பாஜகவுடன் இணைந்து பணியாற்றிவிட்டோம். இப்போது நாங்கள் மகா கூட்டணியுடன் உறுதியாக இணைந்துள்ளோம்" என்று முகேஷ் சஹானி சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன் பிபிசியிடம் பேசிய அவர், "பிகாரில் 60 சட்டமன்றத் தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுவோம். பிகாரில் 37 சதவீத வாக்காளர்கள் மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதன் அடிப்படையில், மிகவும் பின்தங்கிய சமூகத்தின் மகன் பிகாரின் துணை முதல்வராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
முகேஷ் சஹானிக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
முகேஷ் சஹானியின் மல்லா சாதியின் மக்கள் தொகை பல கங்கைக் கரையோர மாவட்டங்களில் பரவியுள்ளது.
பிகாரின் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி (இபிசி) வாக்காளர்களில் பெரும் பகுதியை தங்கள் பக்கம் இழுக்கக்கூடும் என்பதால், சஹானியை துணை முதல்வராக ஆக்குவதாக மகா கூட்டணி வாக்குறுதி அளித்ததாக நம்பப்படுகிறது.
இபிசி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மல்லா சாதி வாக்காளர்கள், மாநிலத்தில் பல இடங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.
முகேஷ் சஹானி ஒருமுறை 'விஐபி' என்பதன் அர்த்தத்தை விளக்கி, "ஒரு ஜனநாயகத்தில், ஒரு விஐபி என்பவர் தன்னைச் சுற்றி அதிகமான மக்களைக் கொண்டவர்" என்று கூறினார்.
அவரை துணை முதல்வராக முன்னிறுத்துவதன் மூலம், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை சாதிகளின் வாக்காளர்களிடையே தனது ஆதரவை வலுப்படுத்த மகா கூட்டணி முயற்சித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், சில அரசியல் ஆய்வாளர்கள் இது மகா கூட்டணியின் தவறான முடிவு, முகேஷ் சஹானிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது முஸ்லிம் வாக்காளர்களை ஏமாற்றக்கூடும் என்று கருதுகின்றனர்.
மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நலின் வர்மா, "பிகாரில் முஸ்லிம்கள் 18 சதவீதம் பேர். அவர்களில் பெரும்பாலோர் மகா கூட்டணி வாக்காளர்கள். இது முஸ்லிம் வாக்காளர்களிடையே விரக்தியை ஏற்படுத்தும். உண்மையில், இந்த முடிவு மகா கூட்டணிக்கு ஒரு நெருக்கடியான நிலையாக இருக்கலாம். இந்த முடிவு முஸ்லிம் வாக்காளர்களை ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸிடமிருந்து அந்நியப்படுத்தக்கூடும்" என்கிறார்.
"முகேஷ் சஹானி எந்த கூட்டணியுடனும் விசுவாசமாக இல்லை. சில சமயங்களில் அவர் மகா கூட்டணியில் நீடிப்பார், சில சமயங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வார். அவர் ஒரு பேரம் பேசும் நபர். இந்த முடிவு, மகா கூட்டணி வாக்காளர்களுக்கு ஒரு நல்ல செய்தி இல்லை" என்று நலின் வர்மா கூறுகிறார்.
மூத்த பத்திரிகையாளர் ஷரத் குப்தா, "மல்லா சமூகத்தினர் மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள். தேஜஸ்வியை முதலமைச்சராகவும், சஹானியை துணை முதலமைச்சராகவும் நியமிப்பதன் மூலம், மிகவும் பின்தங்கிய வகுப்பினரை ஒன்றிணைப்பதில் மகா கூட்டணி வெற்றிபெற முடியும். இது முக்கியமானது, ஏனெனில் பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக உயர் சாதி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 49 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட மகா கூட்டணியை விரும்பலாம்." என்கிறார்.
"சஹானியை துணை முதல்வர் வேட்பாளராக்குவதும் அவசியமானது, ஏனென்றால் தேர்தலுக்குப் பிறகு அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம். இப்போது மகா கூட்டணி இந்த பயத்தைப் போக்கியுள்ளது" என்று குப்தா கூறுகிறார்.
முகேஷ் சஹானி யார்?
1981ஆம் ஆண்டு தர்பங்காவில் ஒரு மீனவர் குடும்பத்தில் பிறந்த முகேஷ் சஹானி, தன்னை 'மல்லாவின் மகன்' என்று அழைத்துக் கொள்கிறார்.
19 வயதில், அவர் பிகாரை விட்டு வெளியேறி மும்பையில் விற்பனையாளராக வேலை செய்யத் தொடங்கினார்.
பின்னர் அவர் பாலிவுட்டில் ஒரு செட் டிசைனராக பணிபுரிந்தார்.
ஷாருக்கானின் 'தேவதாஸ்' மற்றும் சல்மான் கானின் 'பஜ்ரங்கி பைஜான்' போன்ற வெற்றிப் படங்களின் அரங்கு வடிவமைப்பில் அவர் பணியாற்றினார்.
அவருக்கு மும்பையில் முகேஷ் சினி வேர்ல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் இருந்தது.
சஹானியின் அரசியல் வாழ்க்கை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் (என்டிஏ) தொடங்கியது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் நட்சத்திர பிரசாரகராக இருந்தார்.
பாஜக தலைவர் அமித் ஷா முகேஷுடன் கிட்டத்தட்ட 40 பேரணிகளுக்குச் சென்றார், தினமும் அவரை தனது ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றார். இருவரும் ஒன்றாக கூட்டங்களில் பங்கேற்று, உரையாற்றுவார்கள்.
இதன் பிறகு அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறினார்.
இதற்கான காரணத்தைக் கேட்டபோது, முகேஷ் சஹானி, "நிஷாத் சமூகத்திற்கும் அதனுள் பிரிக்கப்பட்ட 21 பிற சாதிகள் மற்றும் துணை சாதிகளுக்கும் சிறப்பு இடஒதுக்கீடு ஏற்பாடு செய்வதாக அமித் ஷா அப்போது எங்களுக்கு உறுதியளித்திருந்தார். 2015இல், அவர் தனது வாக்குறுதிகளை மீறிவிட்டார். அதனால்தான் நாங்கள் அவரை விட்டு விலகிவிட்டோம்" என்று கூறியிருந்தார்.
2015ஆம் ஆண்டில், அவர் நிஷாத் விகாஸ் சங்கத்தை நிறுவினார், பின்னர் 2018இல் விகாஷீல் இன்சான் கட்சியைத் தொடங்கினார்.
முகேஷ் சஹானி 2015 சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ஆதரித்தார், ஆனால் பின்னர் அவரிடமிருந்து பிரிந்தார்.
"நிதிஷ் குமாரும் எங்களை ஏமாற்றிவிட்டார். எங்கள் சமூகத்திற்கு இடஒதுக்கீடு மற்றும் வசதிகளை வழங்குவதாகவும் அவர் ஆரம்பத்தில் உறுதியளித்தார், ஆனால் அவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இப்போது அவரே பாஜகவில் சேர்ந்துள்ளார். எனவே, நாங்கள் அவருக்கு எதிராகவும் நிற்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார்.
2020ஆம் ஆண்டில், சஹானி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். 2020 பிகார் தேர்தலில், பாஜக தனது ஒதுக்கீட்டில் இருந்து 11 இடங்களை சஹானி கட்சிக்கு ஒதுக்கியது. சஹானி கட்சி இந்த இடங்களில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்றது.
முகேஷ் சஹானி 2020 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார், ஆனால் நிதிஷ் குமார் அரசாங்கத்தில் கேபினட் அமைச்சராக (மேலவை உறுப்பினர்) நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஒரு வருடத்திற்குள், அவரது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் உயிரிழந்தார். பின்னர், 2022இல், மீதமுள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்.
இதற்கிடையில், அவரது கட்சிக்கும் பாஜகவிற்கும் இடையே விரிசல் ஏற்படத் தொடங்கியது. உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் முகேஷ் சஹானி 53 இடங்களில் தனது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தினார். இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அவருக்கு எதிரான வெறுப்பைத் தூண்டியது, அதைத் தொடர்ந்து முகேஷ் சஹானி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
பிறகு, சஹானி தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு வெளியேறி ஏப்ரல் 2024இல் மீண்டும் மகா கூட்டணியில் இணைந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு