களத்தில் உரசிய ஹர்பஜன்-அக்தர்; இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிகளின் சுவாரஸ்யங்கள்
இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அது போர்க்களம்தான். கிரிக்கெட் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக அது திகழ்கிறது.
1984 இல் தொடங்கிய ஆசிய கோப்பையில், இதுவரை ஒருமுறை கூட இரு அணிகளும் இறுதிச்சுற்றில் நேரடியாக மோதியதில்லை. ஆனால், சில விறுவிறுப்பான ஆட்டங்களை ரசிகர்களுக்கு பரிசளித்துள்ளன. ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 3 முக்கியமான ஆட்டங்களை பார்க்கலாம்.
2010 : அக்தரை வெறுப்பேற்றிய ஹர்பஜன்
2010 ஆசிய கோப்பையின் எல்லா ஆட்டங்களும் இலங்கையின் தம்புலா மைதானத்தில் நடைபெற்றன. ரவுண்ட்-ராபின் முறையில் நடத்தப்பட்ட இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் மோதி, புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடம் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும். இலங்கையுடன் தோல்வியை சந்தித்த ஷாஹித் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் எம்எஸ் தோனியின் இந்திய அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அஃப்ரிடி, பேட்டிங்கை தேர்வுசெய்தார். தொடக்க ஆட்டக்காரர் சல்மான் பட் (74) உள்பட டாப் ஆர்டர் பேட்டர்கள் நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுக்க, ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அணி 144/1 என்ற நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால், பிரவீன் குமார், ஜாஹீர் கானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 159 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நல்ல தொடக்கம் அமைந்தும், அதை சரிவர பயன்படுத்திக் கொள்ளாமல், தொடர்ச்சியாக 9-வது முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஆல் அவுட்டானது. 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 267 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கம்பீர் அபாரமான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தாலும், சேவாக், கோலி போன்ற டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பியதால், இந்திய அணி சேசிங்கில் நெருக்கடியை சந்தித்தது. மிடில் ஆர்டரில் கம்பீர், கேப்டன் தோனி ஜோடி, 98 ரன்கள் எடுத்து அணியை மீட்டெடுத்தது. 56 ரன்களில் ஷோயப் மாலிக் பந்தில் தோனி பவுல்டானதும் ஆட்டம் மீண்டும் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.
கடைசிக்கட்டத்தில் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு ரெய்னா தோள்களில் இறங்கியது. கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகமது அமீர் வீசிய முதல் பந்திலேயே இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு ரெய்னா ரன் அவுட்டானார். எதிர்முனையில் ஹர்பஜன் இருக்க, அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கிய பிரவீன் குமார், அடுத்த இரு பந்துகளில் 3 ரன்கள் எடுத்து, ஹர்பஜனுக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.
ஓவரின் ஐந்தாவது பந்தில் அமீர் வீசிய லெங்த் பந்தை மிட்விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட ஹர்பஜன், இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். ஹர்பஜன் – அக்தர் இடையிலான காரசாரமான வாக்குவாதம் இந்த ஆட்டத்துக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது. 83 ரன்கள் குவித்த கம்பீர் ஆட்ட நாயகனாக தேர்வானார். இன்று வரைக்கு மறக்க முடியாத ஆட்டமாக இந்த ஆட்டம் திகழ்கிறது.
2014 : கடைசி ஓவரில் அஃப்ரிடி அதகளம்
ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெற்ற இந்த தொடரில், இறுதிச்சுற்றுக்கு முன்னேற இரு அணிகளுக்கும் கட்டாய வெற்றி தேவைப்பட்ட நிலையில், வங்கதேசத்தின் மிர்பூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் ஃபீல்டிங் தேர்வுசெய்தார். டாப் ஆர்டரில் தவன், கோலி உள்ளிட்டோர் சொதப்பிய நிலையில், ரோஹித் சர்மா அதிரடியாக 56 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். சயீத் அஜ்மலின் மாயாஜால சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல், இந்திய அணியின் மிடில் ஆர்டர் விக்கெட்கள் சீட்டுக்கட்டைப் போல சரிந்தன. அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கைகொடுக்கவே, இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து 245 என்ற கௌரவமான ஸ்கோரை எட்டியது.
பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றிய முகமது ஹஃபீஸ், பேட்டிங்கிலும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் அஹமது சேஷாத் (42), ஷர்ஜீல் கான் (25) ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், அமித் மிஸ்ராவின் சுழற்தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து பாகிஸ்தான் பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். டாப் ஆர்டர் கைவிட்ட நிலையில், மிடில் ஆர்டரில் ஹஃபீஸ்-சோயப் மக்சூத் ஜோடி, அணியை சரிவிலுருந்து மீட்டது. ஆனால் அடுத்தடுத்த ஓவர்களில் எதிர்பாராத விதமாக இருவரும் ரன் அவுட்டானதால், ஆட்டம் மீண்டும் இந்தியாவின் கைகளுக்கு சென்றது.
கடைசி 5 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட, கடைசி நான்கு விக்கெட்கள் மட்டுமே பாகிஸ்தான் வசமிருந்தன. 46, 47-வது ஓவர்களில் அஃப்ரிடி ரிஸ்க் எடுத்து முறையே ஜடேஜா, புவனேஷ்வர் குமார் பந்துகளில் சிக்ஸரும் பவுண்டரிகளும் விளாசினார். அடுத்த ஓவரை ஷமி கட்டுக்கோப்பாக வீசவே, பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் அழுத்தம் அதிகரித்தது. கடைசி ஓவருக்கு முந்தைய ஓவரில் 2 விக்கெட்களை பறிகொடுத்த பாகிஸ்தானுக்கு அஃப்ரிடி மட்டுமே ஆபத்பாந்தவனாக தெரிந்தார். கடைசி ஓவரை வீசும் பொறுப்பை அதுவரை கட்டுக்கோப்பாக பந்துவீசிய அஸ்வினிடம் ஒப்படைத்தார் கேப்டன் கோலி. முதல் பந்தில் அஜ்மல் ஆட்டமிழந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்கு அஃப்ரிடியுடன் ஜுனைத் கான் கைகோர்த்தார். இரண்டாவது பந்தில் ஜுனைத் கான் சிங்கிள் கொடுக்க, 4 பந்துகளில் 9 ரன்கள் எடுத்தாக வேண்டிய பொறுப்பு அஃப்ரிடி வசம் சென்றது.
அஸ்வின் ஐந்தாவது பந்தை ஷார்ட்டாக வீச, லெக் ஸ்டம்ப் திசையில் நகர்ந்து, தனக்கு வேண்டிய ரூமை (room) ஏற்படுத்திக் கொண்ட அஃப்ரிடி, டீப் எக்ஸ்ட்ரா கவர் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், லாங் ஆன் திசையில் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசி, மறக்க முடியாத ஒரு வெற்றியை பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தார். சரியாக டைம் செய்யப்படாத ஷாட்டாக இருந்த போதும், அஃப்ரிடியின் உடல்வலு, அந்த ஷாட்டை சிக்ஸராக மாற்றியது. வெற்றி இலக்கை எட்டியவுடன் ஆர்ப்பரித்த அஃப்ரிடி, ஜுனைத் கான் கன்னத்தில் முத்தமிட்டார். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் இதுவொரு முக்கியமான ஆட்டம் என்றே சொல்ல வேண்டும்.
2016 : பேட்டிங் வகுப்பெடுத்த கோலி
ஆசிய கோப்பையில் மட்டுமல்ல இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இதை குறிப்பிட்டாக வேண்டும். டி20 கிரிக்கெட்டில் ஆகச் சிறந்த குறைந்த ஓவர் திரில்லர்களில் ஒன்றாக இந்த ஆட்டம் இன்றும் நினைவுகூரப்படுகிறது. 2016 இல் தான் முதல்முறையாக ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்பட்டது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வங்கதேசம் மிர்பூர் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார். இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் முகமது ஹஃபீஸ் விக்கெட்டை வீழ்த்தி, பாகிஸ்தான் அணிக்கு 'செக்' வைத்தார் ஆஷிஸ் நெஹ்ரா. பேட்டிங்கிற்கு ஆதரவற்ற பிட்ச்சில் ரன் குவிப்பதற்கு பாகிஸ்தான் பேட்டர்கள் தொடக்கம் முதலே சிரமப்பட்டனர். நெஹ்ரா, பாண்ட்யா, பும்ராவின் கறாரான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், வருவதும் போவதுமாக பாகிஸ்தான் பேட்டர்கள் இருந்தனர்.
விக்கெட் கீப்பர் பேட்டர் சர்ஃபராஸ் அஹமது மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி, 25 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் பேட்டர்கள் இடையே சரியான புரிதல் இல்லாதததால் தேவையின்றி ஓடி, இருவர் ரன் அவுட் ஆகினர். ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்ட்யா பிரமாதமாக பந்துவீசி, 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் கைப்பற்றினார். 17.3 ஓவர்களில் பாகிஸ்தான் அணி, 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அன்றைக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் குறைந்த ஸ்கோர் அதுதான்.
84 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த இந்திய அணிக்கு, பாகிஸ்தானின் நட்சத்திர இடக்கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார். ரோஹித் சர்மாவை ரன் ஏதுமின்றி எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றிய அவர், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹானேவையும் 'கோல்டன் டக்' செய்து பெவிலியன் அனுப்பினார். தனது அடுத்த ஓவரில் சுரேஷ் ரெய்னா விக்கெட்டையும் கைப்பற்றி, இந்திய அணியின் பேட்டிங் வரிசையை நிலைகுலைய வைத்தார். இக்கட்டான நிலைமையில், கைகோர்த்த கோலி-யுவராஜ் சிங் ஜோடி, அமீர், முகமது சமி, முகமது இர்ஃபான் போன்றவர்களின் அதிவேகப் பந்துவீச்சை சமாளித்து விளையாடி, சிறுக சிறுக ரன் சேர்த்தது.
கடினமான பிட்ச்சில் பேட்டிங் மாஸ்டர்கிளாஸ் நடத்திய கோலி, 49 ரன்களில் சமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்ததாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் பாண்டியா ரன் ஏதுமின்றி வெளியேறினாலும், 6 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி எளிதாக இலக்கை எட்டியது. 51 ரன்களில் 49 ரன்கள் குவித்த கோலி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். கோலியின் சிறந்த டி20 இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



