காணொளி: இந்தியா - பாகிஸ்தான் மோதிய 3 இறுதிப்போட்டிகளில் அதிகம் வென்றது யார்?
இந்தியா – பாகிஸ்தான் மோதும் நடப்பு ஆசிய கோப்பை பைனல், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1984 முதல் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில் இதுவரை ஒருமுறை கூட இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பைனலில் நேரடியாக மோதியதில்லை. இந்திய அணி எட்டு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியோ இரு முறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 10 முறை பைனலில் பலப்பரீட்சை நடத்தியுள்ளன. 10–ல் பாகிஸ்தான் 7 முறையும் இந்திய அணி 3 முறையும் கோப்பை வென்றுள்ளன. நடப்பு ஆசிய கோப்பை பைனல், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஐந்து கிளாசிக் பைனல் ஆட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
1985 பென்சன் அண்ட் ஹெட்ஜஸ் கோப்பை: ஆடி காரை தட்டித்தூக்கிய ரவி சாஸ்திரி
1983 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி வலுவான அணியாக உருவெடுத்தது. ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியே சந்திக்காமல், சுனில் காவஸ்கர் தலைமையிலான இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா, பைனலில் மீண்டும் ஜாவித் மியான்டட் தலைமையிலான அணியை எதிர்கொண்டது. பரம வைரிகளான இந்தியா–பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டத்தை காண்பதற்காக 35,296 ரசிகர்கள் கூடினர்.
பந்துவீச்சில் கறார் காட்ட சிவராமகிருஷ்ணன்
டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மியான்டட், இந்திய அணியை பந்துவீச பணித்தார். அபாரமாக ஓபனிங் ஸ்பெல் வீசிய நட்சத்திர வீரர் கபில்தேவ், மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் டாப் ஆர்டரை தகர்த்தார். மிடில் ஓவர்களில் கறாரான லெங்த்தில் பந்துவீசிய தமிழத்தை சேர்ந்த லெக் ஸ்பின்னர் லஷ்மண் சிவராமகிருஷ்ணன், 35 ரன்கள் மட்டுமே கொடுத்து மியான்டட் உள்பட மூன்று விக்கெட்டுகளை பறித்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 176 ரன்கள் மட்டும் எடுத்தது.
நீரும் நெருப்பும்: ஶ்ரீகாந்த்– ரவி சாஸ்திரி
ஶ்ரீகாந்த்– ரவி சாஸ்திரி ஜோடி, இந்திய அணிக்கு பிரமாதமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இம்ரான் கானின் ஓபனிங் ஓவர்கள் எச்சரிக்கையுடன் விளையாடிய ஶ்ரீகாந்த், பின்னர் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். தொடக்கத்தில் இருந்தே ஆமை வேகத்தில் ரன் சேர்த்த ரவி சாஸ்திரி(63*), கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார். 77 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 67 ரன்கள் குவித்த ஶ்ரீகாந்த், ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை கைப்பற்றிய ரவி சாஸ்திரி ஆடி 100 செடான் (Audi 100 sedan) காரை பரிசாக பெற்றார்.
1986 Austral–Asia cup பைனல்: கடைசி பந்தில் சிக்சர் விளாசி மிரட்டிய மியான்டட்!
இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிளாசிக் ஒருநாள் ஆட்டங்களில் ஒன்றாக இது மதிப்பிடப்படுகிறது. 40 ஆண்டுகளை கடந்த பிறகும் இன்றும் ரசிகர்களின் மனங்கவர்ந்த ஆட்டங்களில் ஒன்றாக திகழ்கிறது.
ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான், பந்துவீச்சை தேர்வுசெய்தார். ஶ்ரீகாந்த்–காவஸ்கர் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய ஶ்ரீகாந்த், 2 சிக்சர்கள், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் குவித்தார். ஶ்ரீகாந்த் ஆட்டமிழந்த பிறகு வெங்சர்க்காருடன் இணைந்து காவஸ்கர் ஒரு பார்ட்னர்ஷிப்பை கட்டினார். அன்றைய இளம் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம், அடுத்தடுத்து வெங்சர்க்கார்(50), கீர்த்தி ஆசாத்(0) விக்கெட்டுகளை கைப்பற்ற, இந்தியாவின் மிடில் ஆர்டர் ஆட்டங்கண்டது.
உச்சபட்ச போராட்டத்தை வெளிப்படுத்திய மியான்டட்
இம்ரான் கான் பந்தில் க்ளீன் போல்டாகிய காவஸ்கர்(92) சதத்தை தவறிவிட்டார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 245 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் தரப்பில், அதிகபட்சமாக வாசிம் அக்ரம் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மதன் லால், சேத்தன் சர்மாவின் கட்டுக்கோப்பான மித வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் டாப் ஆர்டர் தடுமாறியது. முடாசர் நாசர்(5), ரமிஸ் ராஜா(10) விரைவில் வெளியேற, இதுபோன்ற நெருக்கடியான சமயங்களில் தனது உச்சபட்ச ஆட்டத்தை வெளிக்கொணரும் மியான்டட் போராட்டத்தை தொடங்கினார். தொடக்க வீரர் மொஷின் கான், அப்துல் காதிருடன் பார்ட்னர்ஷிப்களை அமைத்த அவர், கடைசி ஓவர் வரை ஆட்டத்தை உயிர்ப்புடன் நகர்த்தி சென்றார்.
கடைசி பந்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி
கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்துவீசும் பொறுப்பை சேத்தன் சர்மாவிடம் வழங்கினார் கபில்தேவ். முதல் பந்தில் வாசிம் அக்ரம் ரன் அவுட்டான நிலையில், இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் மியான்டட். பவுண்டரிக்கு செல்ல வேண்டிய மூன்றாவது பந்தை, விக்கெட் கீப்பர் ரோஜர் பின்னி திறமையாக தடுக்க, ஒரு ரன் மட்டும் கிடைத்தது. அடுத்த பந்தில் ஜுல்கர்னைன் (0) க்ளீன் பவுல்டாக, கடைசி விக்கெட்டாக தௌசீஃப் அஹமது களமிறங்கினார். ஐந்தாவது பந்தில் எளிதாக கிடைத்த ரன் அவுட் வாய்ப்பை முகமது அசாருதீன் தவறவிட, கடைசி பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 4 தேவைப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 1 விக்கெட் தேவைப்பட்ட நிலையில், சேத்தன் வீசிய யார்க்கர் ஃபுல் டாஸாக மாற, கடைசி பந்தில் சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு திரில் வெற்றியை மியான்டட் பரிசளித்தார். ஆட்ட நாயகன் விருதை மியான்டட்டும் தொடர் நாயகன் விருதை காவஸ்கரும் பெற்றனர்.
முழு விவரத்தை காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



