You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாம்பவான்கள் அடங்கிய ஆர்சிபி அணிக்கு இளம் வீரர் 'ரஜத் பட்டிதார்' கேப்டனாக தேர்வானது எப்படி?
- எழுதியவர், போத்தி ராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் 20 ஓவர் தொடரில் இதுவரை 17 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 8 கேப்டன்கள், 7 தலைமைப் பயிற்சியாளர்கள், 5 முறை லோகோ மாற்றம், 2 முறை பெயர்மாற்றம் என இவ்வளவு செய்தும் இன்னும் ஒரு முறை கூட அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.
இந்த முறையாவது கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் புதிய வீரர்கள் மற்றும் புதிய கேப்டன் ரஜத் பட்டிதாருடன் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி.
2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணியை வழிநடத்த ரஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணியின் நிர்வாகம். கடந்த 2 சீசன்களிலும் தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த டூப்பிளசி கேப்டனாக ஆர்சிபி அணியை வழிநடத்திய நிலையில், இந்த சீசனுக்கு விராட் கோலி கேப்டனாக மீண்டும் வருவார் என்று பல்வேறு ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக இளம் வீரர் ரஜத் பட்டிதாரை கேப்டனாக ஆர்சிபி நிர்வாகம் நியமித்துள்ளது. அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெரிதாக இல்லை, மேலும் அவர் 100 உள்நாட்டு போட்டிகளில் கூட விளையாடியாதில்லை.
இருப்பினும் இந்த சீசனில் விராட் கோலி, மேக்ஸ்வெல், டிம் டேவிட், ஹேசல்வுட், பில் சால்ட், லிவிங்ஸ்டோன், புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் இந்த அணியை எவ்வாறு வழிநடத்தப் போகிறார், யாருக்கு முக்கியத்துவம் தரப்போகிறார் என்பதில்தான் ரஜத் பட்டிதாரின் வெற்றி இருக்கிறது.
- சாம்பியன்ஸ் கோப்பை 2025: பும்ரா இல்லாமல் இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியுமா?
- கபடியால் மாறிய வாழ்க்கை - ஒரு கிராமத்துப் பெண்களின் நெகிழ்ச்சி கதை
- பார்வை மாற்றுத்திறனாளிகள் ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுக்க உதவும் கைட் ரன்னர்கள்
- விளையாட்டுத் துறையில் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை குவிப்பதை நிதிப் பற்றாக்குறை தடுக்கிறதா?
நனவாகாத கனவு
ஆர்சிபி அணிக்கும், ஐபிஎல் டி20 சாம்பியன் பட்டத்துக்கும் எட்டாப் பொருத்தமாகவே இருக்கிறது.
இதுவரை 17 சீசன்களில் 3 முறை இறுதிப்போட்டிவரை சென்ற ஆர்சிபி அணி, கடந்த 5 சீசன்களில் 4 முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது, ஒருமுறைகூட சாம்பியன் பட்டத்தை அந்த அணியால் வெல்ல முடியவில்லை.
தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்ஸன், அணில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்ஸன், டூப்பிளசி உட்பட பல ஜாம்பவான்கள் கேப்டனாக இருந்தபோதிலும் அந்த அணியால் அதிகபட்சமாக பைனல் செல்ல முடிந்ததே தவிர சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை.
அதேசமயம், தொடக்கத்திலிருந்து பல முன்னணி வீரர்களையும் பயிற்சியாளர்களாக மாற்றிப்பார்த்தது ஆர்சிபி அணி. வெங்கடேஷ் பிரசாத், ரே ஜென்னிங்ஸ், டேனியல் வெட்டோரி, சைமன் கேடிச், கேரி கிறிஸ்டன், சஞ்சய் பங்கர், ஆன்டி பிளவர் ஆகியோரை அணியில் நியமித்து பார்த்தாலும் ஒரு முறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனால், 2025 ஐபிஎல் சீசனில் 3 வீரர்களை மட்டுமே தக்கவைத்த ஆர்சிபி அணி, முற்றிலும் புதிய வீரர்களுடன் களம் காண இருக்கிறது. கேப்டனாகவும் யாரும் எதிர்பாரா வகையில் இளம் வீரரை அறிமுகப்படுத்துகிறது.
8ஆம் வகுப்பு பாஸ் செய்ய திணறியவர்
ஆர்சிபி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரஜத் பட்டிதார் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 1993 ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி அன்று பிறந்தார்.
பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் பெரிய வர்த்தகர் என்பதால் செல்வச் செழிப்பான சூழிலில் ரஜத் பட்டிதார் வளர்ந்தார். சிறுவயதிலிருந்து ரஜத் பட்டிதார் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருந்ததால், அவருக்கு 8 வயது ஆகும்போதே அவர் கிரிக்கெட் பயிற்சிக்கான வகுப்புகளில் குடும்பத்தினர் சேர்த்தனர்.
இந்தூரில் உள்ள நியூ திகம்பர் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவர் குரு வஷிஸ்டா கல்லூரில் கல்லூரிப்படிப்பையும் முடித்தார்.
ரஜத் பட்டிதார் குறித்து அவரின் தந்தை மனோகர் பட்டிதார் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிறுவயதில் இருந்தே ரஜத் பட்டித்தாருக்கு படிப்பின் மீது துளி கூட கவனம் இருந்தது இல்லை, 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவே அவர் கடுமையாக சிரமப்பட்டார். கிரிக்கெட் பயிற்சிக்குச் சென்றபின் படிப்பின் மீது அவரது ஆர்வம் இன்னும் மோசமானது", என்றார்.
"கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ரஞ்சிக் கோப்பைக்கு ரஜத் பட்டிதார் தேர்வானபின் அவருக்கு முழுசுதந்திரம் அளித்தோம், முழுமையாக கிரிக்கெட்டில் கவனம் செலுத்த அனுமதித்தோம். கிரிக்கெட் விளையாடுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்க மாட்டார்", என்றார்.
ரஞ்சிகோப்பைத் தொடரில் அறிமுகம்
2015-16 ஆம் ஆண்டு நடந்த ரஞ்சிக் கோப்பைத் தொடரில்தான் மத்திய பிரதேச அணிக்காக விளையாட ரஜத் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் மண்டல அளவிலான டி20 தொடருக்கும் பட்டிதார் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரின் கிரிக்கெட் வாழ்க்கை மெல்ல வளர்ந்தது.
2018-19 ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் மத்திய பிரதேச அணிக்காக ஆடிய ரஜத் பட்டிதார் 8 போட்டிகளில் 713 ரன்கள் சேர்த்து முன்னணி வீரராக வலம்வந்தார். 2019 ஆம் ஆண்டில் இந்திய அணியின் ப்ளூ அணியிலும் பட்டிதாருக்கு இடம் கிடைத்தது.
இதுவரை 68 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய ரஜத் பட்டிதார் 13 சதங்கள் 24 அரைசதங்கள் உட்பட 4738 ரன்கள் சேர்த்துள்ளார். 64 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்றுள்ள பட்டிதார் 4 சதங்கள், 13 அரைசதங்கள் உள்பட 2211 ரன்கள் சேர்த்துள்ளார். 75 டி20 போட்டிகளில் ஆடி 2463 ரன்களையும் அவர் சேர்த்துள்ளார்.
சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரிலும் மத்திய பிரேதச அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டார். 2024-25 சயத் முஸ்தாக் அலி கோப்பைத் தொடரில் மத்திய பிரதேச அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார் பட்டிதார்.
சையத் முஷ்டாக் அலி தொடரில் 9 இன்னிங்ஸில் 428 ரன்கள் குவித்து 2வது அதிகபட்ச ரன் குவித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அதன்பின் விஜய் ஹசாரே கோப்பைத் தொடரிலும் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக பட்டிதார் நியமிக்கப்பட்டு 226 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் தொடரில் அறிமுகம்
2021-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி முதல்முறையாக ரஜத் பட்டிதாரை ஏலத்தில் ரூ.20லட்சத்துக்கு வாங்கியது. இந்தத் தொடரில் பட்டிதாருக்கு பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை, 4 போட்டிகளில் 71 ரன்கள் மட்டுமே பட்டிதாரால் சேர்க்க முடிந்தது.
2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரஜத் பட்டிதாரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ஆனால், ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த லிவித் சிசோடியா என்ற வீரர் காயத்தால் தொடரின் பாதியிலேயே விலகியதால், ரூ.20 லட்சத்துக்கு ரஜத் பட்டிதாரை ஆர்சிபி அணி மீண்டும் வாங்கி வாய்ப்பளித்தது.
ஆனால், இந்த முறை தனக்குக் கிடைத்த வாய்ப்பை பட்டிதார் தவறவிடவில்லை. எலிமினேட்டர் சுற்றில் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் பட்டிதார் 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்து மாபெரும் வெற்றியை ஆர்சிபிக்கு பெற்றுக்கொடுத்தார். 8 போட்டிகளில் பட்டிதார் 333 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்தார். இந்த சீசன் பட்டிதாருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தவே 2023 சீசனில் ஆர்சிபி அணி பட்டிதாரை தக்கவைத்து, 2024 ஏலத்திலும் பட்டிதாரை தக்கவைத்து, கேப்டனாக்கியுள்ளது.
ஆர்சிபிக்காக திருமணம் தள்ளிவைப்பு
ஆர்சிபி அணியில் விளையாடுவதற்காகவே தனக்கு நடக்க இருந்த திருமணத்தையே ஒத்திவைத்தவர் ரஜத் பட்டிதார். ரஜத் பட்டிதாருக்கும், குஞ்சன் பட்டிதார் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.
2022 ஐபிஎல் ஏலத்தில் ரஜத்பட்டிதாரை எந்த அணியும் வாங்கவில்லை. இதனால் ஐபிஎல் நடக்கும் மே மாதம் 9ம் தேதி ரஜத் பட்டிதார் திருமணம் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆனால், ஆர்சிபி அணியில் சிசோடியா காயத்தால் பாதியிலேயே விலகியதால் அவருக்குப் பதிலாக பட்டிதாரை ஆர்சிபி அணி அழைத்தது.
இதற்காக அவர் தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தள்ளி வைத்தார். திருமணத் தேதியை ஐபிஎல் தொடர் முடிந்தபின் வைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாட சென்றுவிட்டார். ஐபிஎல் தொடர் முடிந்தபின்புதான் ரஜத் பட்டிதார் குஞ்சன் பட்டிதாரை திருமணம் செய்துகொண்டார். இதை பட்டிதாரின் தந்தை மனோகர் பட்டிதார் "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்" நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பட்டிதாரின் ப்ளேயிங் ஸ்டைல், வலிமை
ரஜத் பட்டிதார் ஸ்ட்ரோக் ப்ளே மற்றும் பேட்டிங்கில் நல்ல ஷாட்களை ஆடக்கூடியவர். குறிப்பாக சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவிதமான ஷாட்களை அற்புதமாக பட்டிதார் ஆடக்கூடியவர். அணியில் தேவைப்படும் போது ஆங்கர் ரோலிலும், தொடக்க வீரராக களமிறங்கும்போது ஆக்ரோஷமான அதிரடி பேட்டிங்கையும் பட்டிதார் வெளிப்படுத்தக்கூடியவர்.
வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சை எளிதாக சமாளித்து பேட் செய்யக்கூடிய திறமை படைத்தவர். உள்நாட்டுப் போட்டிகள், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடக் கூடியவர். 2022 ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் பட்டிதாரின் சதம், கடுமையான நெருக்கடியிலும் தன்னால் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியது. அதுவே அவருக்கான திருப்புமுனையாகவும் அமைந்தது.
ஆர்சிபி கேப்டனாக ரஜத் பட்டிதார் தேர்வானது எப்படி?
ஆர்சிபி அணியின் தலைமைப்பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கிரிக்இன்போ இணையதளத்துக்கு அளித்த பேட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டனாக பட்டிதாரை ஏன் தேர்வு செய்தனர் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில்," ரஜத் பட்டிதாரைப் பற்றி என்னால் நீண்டநேரம் பேச முடியும். பகிர்ந்து கொள்ள ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று நான் நினைத்த மூன்று முக்கிய விஷயங்களை கூறுகிறேன். முதலாவதாக பட்டிதாரின் அமைதி மற்றும் எளிமை. இதுதான் அவருக்குரிய கேப்டன் பதவியை வழங்க பிரதான காரணமாக இருந்தது. ஒரு கேப்டனாக ஐபிஎல் அணிக்கு வரும்போது மிகவும் நிதானமாக, பதற்றமின்றி, எந்த சூழலையும் அமைதியாக கையாளும் திறமை இவருக்கு இருந்தது.
அது மட்டுமல்லாமல் மத்திய பிரதேச அணிக்காக சையத் முஷ்டாக் அலி தொடரில் கேப்டனாக பட்டிதார் செயல்பட்டதை நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன். அவரது முடிவு எடுக்கும் திறன், கிரிக்கெட் களத்தில் அவரின் அர்ப்பணிப்பு, வீரர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள் இவர் கேப்டனாக தகுதியானவர் என்பதை எனக்கு உணர்த்தின.
இரண்டாவது விஷயம், அவர் இயல்பாகவே மிகவும் அமைதியானவர், தன்னை கவனித்துக்கொள்வது, அவரைச் சுற்றியுள்ளவர்களின் மேல் அவர் காண்பிக்கும் அக்கறை, அவருடன் விளையாடும் சகவீரர்கள் குறித்த அக்கறை, டிரஸ்ஸிங் ரூமில் அவரின் போக்கு அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. சக வீரர்களுக்கு அளிக்கும் மரியாதை, அக்கறை அவரின் முக்கிய தகுதிகளாக எனக்குத் தெரிந்தது. ஒரு கேப்டனுக்கு இந்த தகுதிகள் முக்கியமானவை, அப்போதுதான் சகவீரர்கள் கேப்டனை பின்பற்றி நடக்க முடியும்.
மூன்றாவதாக, ரஜத் பட்டிதாரின் உத்வேகம். அணியில் ஏற்ற, இறக்கங்கள் வரும்போது அதீத வலிமையுடன், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதில் பட்டிதார் சிறந்தவர். அதனால்தான் பட்டிதாரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)