இடிந்த வீடுகள், மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - தமிழ்நாட்டில் திட்வா புயல் பாதிப்பு விவரம்

இலங்கையில் பேரழிவை ஏற்படுத்திய திட்வா புயல் தற்போது தமிழ்நாட்டின் கடற்கரையை ஒட்டியே வடக்கு நோக்கி நகர்கிறது. இதன் எதிரொலியாக தமிழ்நாட்டில் குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தற்போது வரை தமிழ்நாட்டில் இந்தப் புயல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

தஞ்சாவூர்

கடந்த இரண்டு நாட்களாக தஞ்சாவூரில் பெய்துவரும் கனமழை காரணமாக, சுந்தரம் மீனா நகர் பகுதியில் முழங்கால் அளவிற்கு மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கும்பகோணம் தேவனாஞ்சேரியில் தொடர்மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியானார். ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்த முத்துவேல் மற்றும் குடும்பத்தார் (மனைவி மற்றும் இரண்டு மகள்கள்) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய நான்கு பேரையும் மீட்டனர். அவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பலத்த காயமடைந்த இளைய மகள் ரேணுகா (19 வயது) தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மற்ற மூவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர்

திட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதுமே கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடலும் சீற்றமாக காணப்படுகிறது. கடலூர் துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. தரங்கம்பாடி கடற்கரையில் கடல் அலைகள் சுமார் 10 அடிக்கு மேல் எழுகின்றன.

மீனவர்கள் கரைகளில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்திவிட்டு வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவ்வப்போது காற்றும் வீசி வருவதால் தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2 நாட்களாக மழை தொடர்கிறது. மன்னார்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளான சவளக்காரன், தரிசுவேளி, கூனமடை, கீழநாலாநல்லூர், ராமாபுரம், துண்டாக்கட்டளை, அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன.

ஏற்கனவே பெய்த கனமழையின் காரணமாக குளம் போல் தேங்கியிருந்த மழை நீர் இன்னும் வடியாத நிலையில் தற்போது மீண்டும் கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் உடனடியாகக் கணக்கெடுத்து அதற்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்திலும் பெய்த மழையின் காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திகுளம் சோழன்குளம் கண்மாய் நிரம்பியது.

நிரம்பிய நீர், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுகால் பாயும் நிலையில் அதன் வழியாக மீன்கள் துள்ளி குதிக்கின்றன. அந்த மீன்களை அப்பகுதி மக்கள் பிடித்து மகிழ்கின்றனர்.

விழுப்புரம்

திட்வா புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூழ்நிலையை சமாளிக்க தீயணைப்புத் துறை தயார் நிலையில் இருக்கிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நிலைய பொறுப்பாளர் ஜமுனாராணி, "திட்வா புயல் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 10 தீயணைப்பு நிலையங்களிலும் சுமார் 200 வீரர்கள் விடுப்பு எடுக்காமல் தயாராக உள்ளனர். ஐந்து ரப்பர் படகுகள், மரம் அறுக்கும் கருவிகள் உள்பட அனைத்து மீட்பு உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இருபதுக்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்." என்று கூறினார்.

மேலும், மாவட்டத்தில் புயல் காரணமாக ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் 112 என்ற அவசர எண்ணுக்குத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் அவர் கூறினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில் வீதியில் நள்ளிரவில் தனம்மாள், சரவணன் ஆகியோரது வீடுகளின் மீது புளிய மரக்கிளை விழுந்தது. இதில் விஜயா (60) என்பவர் காயமடைந்தார். விஜயாவின் கூச்சலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரியில் திட்வா புயல் காரணமாக நேற்று (நவம்பர் 29) காலை 8:30 மணியிலிருந்து இன்று (நவம்பர் 30) அதிகாலை 5.30 மணி வரையிலும் சுமார் 7.3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் 2 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்துக் கொண்டு ஆக்ரோஷமாக கரையை நோக்கி வருகின்றன.

புதுச்சேரி துறைமுகத்தில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரை சாலை மூடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கான விமான சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால் நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இரு தினங்களாக காற்று பலமாக வீசுகிறது.

காரைக்கால் பாரதியார் வீதி உள்ள பகுதியில் பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், காரைக்கால் மாவட்ட குடிமை பாதுகாப்பு படை மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு