'சவப்பெட்டியில் வேறு உடல் பாகங்கள்!' - ஏர் இந்தியா விபத்தில் இறந்தவர்களின் குடும்பம் அதிர்ச்சி
கடந்த ஜூன் மாதம் 260 பேரின் உயிரை பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியான பிரிட்டீஷ் பயணிகளின் உடல்களை அவர்களின் உறவினர்களுக்கு அனுப்பும்போது, தவறுதலாக வேறு உடல்கள் அனுப்பப்பட்டதாக பிரிட்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு குடும்பம், தங்களது உறவினரின் உடலுக்கு பதிலாக வேறு உடலை பெற்றதாகவும், மற்றொரு குடும்பம் பலரின் உடல் பாகங்கள் அடங்கிய சவப்பெட்டியை பெற்றதாகவும் அது கூறுகிறது.
அசோக் மற்றும் ஷோபனா பட்டேல் ஆகியோரும் இந்த விபத்தில் பலியாகினர், பிபிசியிடம் பேசிய அவர்களது மகன் மிதின்,' தனது தாயின் உடலுடன் வேறு உடல் பாகங்களும் கலந்திருந்ததாக கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், "பொதுவாக பின்பற்றப்படும் நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளின்படி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர். இறந்த அனைவரின் உடல்களும் மிகுந்த தொழில்முறையுடனும், இறந்தவரின் கண்ணியத்திற்கு உரிய மரியாதையுடனும் கையாளப்பட்டன" என தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் எந்த கவலையையும் நிவர்த்தி செய்வதில் பிரிட்டன் அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



