பேட்டில் ஆஃப் கல்வான்: சல்மான் கானின் இந்த திரைப்படம் சீனாவில் விமர்சிக்கப்படுவது ஏன்?

சல்மான் கானின் 'பேட்டில் ஆஃப் கல்வான்' திரைப்படத்தின் ஒரு காட்சி

பட மூலாதாரம், SKF

படக்குறிப்பு, சல்மான் கானின் 'பேட்டில் ஆஃப் கல்வான்' திரைப்படத்தின் ஒரு காட்சி

நடிகர் சல்மான் கானின் புதிய திரைப்படமான 'பேட்டில் ஆஃப் கல்வான் திரைப்படத்தை சீனாவின் அரசு ஊடகம் கண்டித்துள்ளது.

சீனாவின் பிரபலமான அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ், இத்திரைப்படம் 'உண்மைகளைத் திரித்து' காட்டுவதாகக் குற்றம் சாட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

17 ஏப்ரல் 2026 அன்று வெளியாகவுள்ள 'பேட்டில் ஆஃப் கல்வான்' திரைப்படம், 2020 ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

சல்மான் கான் மற்றும் சித்ராங்கதா சிங் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், இப்படத்தை அபூர்வா லாகியா இயக்கியுள்ளார்.

டிசம்பர் 27 அன்று சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

இந்திய -சீன வீரர்களுக்கு இடையேயான மோதலின் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூன் 2020 இல் சீன மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் ஒரு புகைப்படத்தை சீனா வெளியிட்டிருந்தது (கோப்புப் படம்)

மே 2020 இல் கிழக்கு லடாக்கின் பைங்கோங் த்சோ ஏரியின் வடக்குக் கரையில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பிலும் டஜன் கணக்கான வீரர்கள் காயமடைந்தனர். இதன்பின்னர் ஜூன் 15 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் மீண்டும் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து ஜூன் 16 அன்று இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், சீனா தனது வீரர்கள் உயிரிழந்தது குறித்து ஏதும் கூறவில்லை.

இந்திய சீன எல்லை

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA

படக்குறிப்பு, பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதால் இந்தியா மற்றும் சீனா இடையே இன்னும் முழுமையான எல்லை வரையறுக்கப்படவில்லை.

குளோபல் டைம்ஸ் கட்டுரையில் என்ன கூறப்பட்டுள்ளது?

சீன அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை ஒரு கட்டுரையை வெளியிட்டது, அதன் தலைப்பு - 'பாலிவுட் திரைப்படம் "பேட்டில் ஆஃப் கல்வான்" உண்மைகளைத் திரித்துக் கூறுவதால் சர்ச்சையில் சிக்கியுள்ளது.'

அக்கட்டுரையில், "சல்மான் கானைச் சீனப் பார்வையாளர்கள் பஜ்ரங்கி பைஜான் படத்தின் நாயகனாக அறிவர். மிகவும் சாதாரணமான கதைகளைக் கொண்ட மற்றும் யாராலும் வெல்ல முடியாதது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக சீன இணையதளங்களில் அவர் அடிக்கடி கேலி செய்யப்படுவார்" என்று எழுதப்பட்டுள்ளது.

"இப்படத்தில் சல்மான் கான் கர்னல் பிக்குமல்லா சந்தோஷ் பாபுவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் அவர் மிக முக்கியமான பங்கு வகித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன, அதன் காரணமாகவே இது பாலிவுட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது."

இந்தக் கட்டுரையில், "பாலிவுட் திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு சார்ந்த, உணர்ச்சிகரமான கதைகளைக் காட்டுகின்றன, ஆனால் எந்தவொரு மிகைப்படுத்தப்பட்ட திரைப்படக் கதையும் வரலாற்றை மீண்டும் எழுத முடியாது அல்லது சீனாவின் இறையாண்மைப் பகுதியை பாதுகாக்கும் பிஎல்ஏ வீரர்களின் உறுதியைக் குலைக்க முடியாது" என சீன நிபுணர் ஒருவர் கூறியதாக சொல்லப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைச் சீனா ஒருபோதும் தெளிவாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 2021 இல், கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த தனது நான்கு வீரர்களுக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதுகளை அறிவித்தது.

குளோபல் டைம்ஸிடம் சீனாவின் ராணுவ நிபுணர் சாங் ஜாங்பிங் கூறுகையில், "தேசியவாத உணர்வைத் தூண்டுவதற்கு இந்தியா திரைப்படங்களை, குறிப்பாகப் பாலிவுட் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது ஆச்சரியமான ஒன்றல்ல, இது ஆழமாக வேரூன்றிய கலாச்சார மற்றும் அரசியல் பாரம்பரியத்தைக் காட்டுகிறது" என்றார்.

திரைப்படங்கள் நிகழ்வுகளை எவ்வளவுதான் நாடகத்தனமாக அல்லது மிகைப்படுத்திக் காட்டினாலும், அவை கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின் அடிப்படை உண்மைகளை மாற்ற முடியாது என்று அவர் கூறினார்.

"மிகவும் கடினமான மலைப்பாங்கான சூழலில், சீன வீரர்கள் தொடர்ந்து தங்கள் கடமையைச் செய்கிறார்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்கிறார்கள், இது மக்களிடையே நம்பிக்கையை வளர்க்கிறது. இந்தச் சம்பவம் சீனச் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தேசிய விருப்பத்தையும் ராணுவ உணர்வையும் நடைமுறையில் அடையாளப்படுத்துகிறது." எனவும் அந்த கட்டுரை விவரிக்கிறது.

கர்னல் பி. சந்தோஷ் பாபு
படக்குறிப்பு, கர்னல் பி. சந்தோஷ் பாபுவுக்கு மரணத்திற்கு பின் 2021 ஆம் ஆண்டில் மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கு குறித்து இரு நாடுகளும் கூறுவது என்ன?

சீனாவின் சர்வதேச ஆய்வு நிறுவனத்தில் (Institute of International Studies) ஆசிய-பசிபிக் ஆய்வுகள் பிரிவின் இயக்குநர் லென் சியான்ஷுவே குளோபல் டைம்ஸிடம் கூறுகையில், "திரைப்படத்தின் கருப்பொருள் மற்றும் வெளியாகும் நேரம் சரியாக இல்லை, ஏனெனில் சமீபகாலமாகச் சீனா-இந்தியா உறவுகளில் இணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், இது ஒருதலைப்பட்சமான கதையைக் காட்டி பகையுணர்வை ஊக்குவிக்கிறது" என்றார்.

குளோபல் டைம்ஸ் கட்டுரை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து இதுவரை எந்தவித எதிர்வினையும் வரவில்லை.

இருப்பினும், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து இரு நாடுகளும் தங்கள் எல்லைக்குள் அத்துமீறல் நடந்ததாகவே கூறுகின்றன.

'ராணுவ வட்டாரங்களை' மேற்கோள் காட்டி இந்தியாவின் அரசுச் செய்திச் சேவையான 'பிரசார் பாரதி நியூஸ் சர்வீசஸ்' ஒரு ட்வீட் செய்திருந்தது: "சீன மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 45-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கல்வானில் நிலைமையைச் சீராக்க மேஜர் ஜெனரல் அளவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தியாவின் எந்த வீரரும் காணாமல் போகவில்லை."

இந்திய அரசு இந்த மோதலில் உயிரிழந்த 16-வது பிகார் ரெஜிமென்ட்டின் கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு ஜனவரி 2021 இல் மரணத்திற்குப் பிந்தைய மகாவீர் சக்ரா விருது வழங்கி கௌரவித்தது.

மகாவீர் சக்ரா விருதுக்கான குறிப்பில் (Citation) கூறப்பட்டதாவது: "கர்னல் சந்தோஷ் பாபுவுக்கு 15 ஜூன் 2020 அன்று தனது 16-வது பிகார் ரெஜிமென்ட் குழுவை வழிநடத்தி, 'ஆபரேஷன் ஸ்னோ லெப்பர்ட்' திட்டத்தின் கீழ் எதிரியின் முன்னால் கண்காணிப்பு நிலையை அமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. தனது படையினருக்குப் உத்தரவு அளித்து அவர்களை ஒருங்கிணைத்து கர்னல் பாபு இந்தப் பணியை முடித்தார்."

"ஆனால் தனது நிலையைப் பாதுகாக்கும்போது அவர் எதிரி தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது. எதிரிகள் உயிருக்கு ஆபத்தான மற்றும் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் உயரமான இடங்களிலிருந்து கற்களை வீசித் தாக்கினர். எதிரி வீரர்களின் வன்முறை மற்றும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளால் தளராமல், கர்னல் பாபு சுயத்துக்கு முன்னால் கடமையை வைக்கும் உண்மையான உணர்வின் உதாரணமாகத் திகழ்ந்து, இந்திய வீரர்களைப் பின்னுக்குத் தள்ளுவதை எதிர்த்துப் போராடினார். அப்போது அவர் படுகாயமடைந்தார், இருப்பினும் தனது கடைசி மூச்சு வரை தனது படையை வழிநடத்தினார்."

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளின் உறவுகளும் மேலும் மோசமடைந்தன. இருப்பினும் மீண்டும் பல நிலைகளில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின, கடந்த ஆண்டிலிருந்து உறவுகள் இயல்பு நிலையை நோக்கித் திரும்புகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியாவில் சமூக ஊடகங்களில் விவாதம் எப்படி உள்ளது?

மறுபுறம், 'பேட்டில் ஆஃப் கல்வான்' டீசர் சனிக்கிழமை வெளியான பிறகு இந்தியாவில் சமூக ஊடகங்களில் விவாதம் சூடுபிடித்தது.

மூன்று நாட்களுக்குள்ளேயே இந்தத் திரைப்படத்தின் டீசரை யூடியூப்பில் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

எக்ஸ் தளத்தில் மதுர் என்ற பயனர், "இந்த முழக்கங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை - 'பிர்சா முண்டாவுக்கு ஜே, பஜ்ரங் பலிக்கு ஜே, பாரத மாதாவுக்கு ஜே'. சல்மான் கையில் வாளுடன் (அது எனக்கு வாளைப் போலவே இருக்கிறது)...மெய்சிலிர்க்க வைக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.

ரோகித் ஜெய்ஸ்வால் என்பவர் எக்ஸ் தளத்தில், "சல்மான் கானின் அடுத்த திரைப்படமான பேட்டில் ஆஃப் கல்வானின் வலிமை. தேசப்பற்று குறித்த புரிதல் குறைவு காரணமாக சில இந்தியர்கள் கேலி செய்யட்டும். எங்கே தேவையோ அங்கே தாக்கம் ஏற்பட்டுள்ளது. சீனா அதிர்ந்து போயுள்ளது" எனப் பதிவிட்டுள்ளார்.

சுனில் யாதவ் என்பவர், "சந்தேகமே இன்றி பேட்டில் ஆஃப் கல்வானின் கருப்பொருள் நெருப்பல்ல, காட்டுத்தீ" என்று எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு