சீனா, பாகிஸ்தான், தாலிபன் இடையே வளரும் 'நட்பால்' இந்தியாவுக்கு நெருக்கடியா?

காணொளிக் குறிப்பு, சீனா, பாகிஸ்தான், தாலிபன் இடையே வளரும் 'நட்பு'
சீனா, பாகிஸ்தான், தாலிபன் இடையே வளரும் 'நட்பால்' இந்தியாவுக்கு நெருக்கடியா?

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தனது சீனப் பயணத்தை முடித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரை இஷாக் தார் புதன்கிழமையன்று பீஜிங்கில் சந்தித்தார். அதனையடுத்து, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க மூன்று நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

பிராந்தியத்தில் சீனா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைவது இந்தியாவுக்கு கவலை அளிக்கும் விஷயம் என நிபுணர்கள் கூறுகின்றனர். என்ன நடக்கிறது?

அண்மையில் நடந்த சந்திப்புக்குப் பிறகு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் , "சீனாவும் பாகிஸ்தானும் பெல்ட் அண்ட் initiatives ஒத்துழைப்பின் பரந்த கட்டமைப்பின் கீழ் ஆப்கானிஸ்தானுக்கு சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளித்துள்ளன.

மேலும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் தேசிய மரியாதையைப் பாதுகாப்பதற்கும் சீனா ஆதரவளித்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் செல்வதால், இந்தியா அதை விமர்சித்து வருகிறது.

இந்த முத்தரப்பு சந்திப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமீர் கான் முத்தாகியுடன் பேச்சுவார்த்தை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு நடந்தது.

வியாழக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் இது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

"சில அறிக்கைகளைப் பார்த்தோம். இதைத் தவிர இதைப் பற்றி நாங்கள் வேறு எதுவும் சொல்ல முடியாது" என்று அவர் பதில் அளித்தார்.

சரி, இதனால் இந்தியாவின் கவலைகள் அதிகரிக்குமா?

பீஜிங்கில் நடைபெற்ற இந்த சந்திப்பை அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா வெளியிட்ட அறிக்கையில், "ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் ராஜீய உறவுகளை மேம்படுத்துவதற்கான தெளிவான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் விரைவில் தூதர்களைப் பரிமாறிக்கொள்வது குறித்து கொள்கையளவில் ஒப்புக் கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் மறுகட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு சீனாவும் பாகிஸ்தானும் ஆதரவளிக்கின்றன.

2021 ஆம் ஆண்டு தாலிபன் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதனுடன் ராஜ்ஜீய உறவுகளைப் பேணிய முதல் நாடுகளில் சீனாவும் ஒன்று.

இந்த சந்திப்பு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் ராஜ்ஜீய உத்தியாகவும், பிராந்திய ஆதரவைப் பெறும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் தாலிபன் ஆட்சிக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த சீனா உதவி செய்கிறது எனவும், இது இந்தியாவின் கவலைகளை நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் புது டெல்லியைச் சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சியாளரும் வெளியுறவு விவகார நிபுணருமான ருஷாலி சஹா கருதுகிறார்.

தி டிப்ளமட் இதழில் ருஷாலி சஹா எழுதிய கட்டுரையில், சமீபத்தில், தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முக்கியப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் ஆப்கானிஸ்தான் அகதிகள் பெருமளவில் நாடு கடத்தப்பட்டதாலும், எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ராணுவ மோதல்களாலும் இரு நாட்டு உறவுகளில் ஏற்பட்டிருந்த பதற்றம் மெல்லக் குறைந்து, மீண்டும் நெருக்கம் வளரத் தொடங்குவதற்கான அறிகுறி இது. பாகிஸ்தானுக்கும் தாலிபன்களுக்கும் இடையிலான உறவுகளை சீனா எளிதாக்குகிறது.

இது வளர்ந்து வரும் சீனா - பாகிஸ்தான் - தாலிபன் கூட்டணியைக் குறிக்கிறது. இது இந்தியாவில் கவலைகளை எழுப்புவது உறுதி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் ஹர்ஷ் வி பண்ட் மற்றும் சிவம் ஷெகாவத் என்டிடிவிக்காக எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்

"அறிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார உறுதிமொழிகள் நடைமுறையில் உருவாக்கப்பட இன்னும் நீண்ட காலம் உள்ளது. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் கிடையாது, மேலும் விரைவாக அது நடைபெறுவதற்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் மீண்டும் தனது பிரதேசத்தில் சேர்க்க சீனா முயற்சிப்பது இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்" என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சரி, சீனா தலையீட்டால் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் முடிவுக்கு வருமா?

2021ம் ஆண்டில் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்துள்ளன.

அந்த நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது குறித்து, "அடிமைத்தனத்தின் சங்கிலிகளை ஆப்கானிஸ்தான் உடைத்துவிட்டது" என்று கூறினார்.

ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்களின் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தன.

பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான ஆப்கானிய அகதிகள் வசித்து வருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.

தெற்காசியாவில் மாறிவரும் சமன்பாடுகளுக்கு மத்தியில் தாலிபனும் பாகிஸ்தானும் நெருங்கி வர முடியுமா என்ற கேள்விக்கு சர்வதேச விவகார நிபுணராக உள்ள ஸ்வஸ்தி ராவ் பிபிசியிடம் பதிலளித்தார்.

"பாகிஸ்தானும் தாலிபனும் நெருங்கி வரவில்லை, இவை அனைத்தும் சீனாவின் தலைமையின் கீழ் நடக்கிறது. இந்த நாடுகளில் தனது பொருளாதார நலன்கள் முடிவுக்கு வருவதை சீனா விரும்பவில்லை.'' என்று கூறினார்.

சரி, தாலிபன்களுடனான இந்திய உறவு என்ன?

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், தாலிபன்களின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகியுடன் அண்மையில் தொலைபேசியில் பேசினார்.

மே 6 7 ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவு தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு இந்த உரையாடல் நடந்தது.

ஜெய்சங்கரின் பேச்சுவார்த்தைக்கு முன், இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்த ஆண்டு தொடக்கத்தில் துபையில் சந்தித்தனர்.

இது இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டது.

இருபது ஆண்டு கால ஜனநாயக ஆட்சியின் போது இந்தியா ஆப்கானிஸ்தானில் பெருமளவில் முதலீடு செய்திருந்தது. அந்தக் காலத்தில், பல ஆப்கானிய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பயிற்சிக்காக இந்தியா வந்தனர். ஆப்கானிஸ்தானின் புதிய நாடாளுமன்றக் கட்டடமும் இந்தியாவால் கட்டப்பட்டது. ஆனால், தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறியது.

கடந்த ஆண்டு, இந்திய தூதர் ஜே.பி. சிங், தாலிபனின் பாதுகாப்பு அமைச்சர் முல்லா யாகூப்பை சந்தித்தார்.

பேச்சுவார்த்தையின் போது, இரானின் சபாஹர் துறைமுகம் வழியாக இந்தியாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு ஒரு வாய்ப்பை முன்மொழிந்தது.

"இந்தியாவில் தாலிபன்கள் எங்களுடன் நிற்கிறார்கள் என்று கூறப்படுகிறது, ஆனால் இது பாதி உண்மைதான். உண்மையில், சீனா ஆப்கானிஸ்தானில் ஒரு பெரிய பங்கு வகிக்கிறது, அங்கு பெரிய முதலீடுகளைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பிராந்தியத்தில் இந்தியாவை விட சீனா பெரிய பங்கு வகிக்கிறது என்பதை தாலிபன்கள் அறிவார்கள், எனவே, தாலிபன்கள் சமநிலையைப் பேணி வருகின்றனர்" என்று ஸ்வஸ்தி ராவ் கூறுகிறார்.

ஒருபுறம் தாலிபன்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, மறுபுறம் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வருகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு