திண்டுக்கல் தீ விபத்து: 'புகைசூழ்ந்து கண்ணே தெரியவில்லை' - உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து
படக்குறிப்பு, மருத்துவமனை புகை சூழ்ந்து இருந்ததால், தட்டுத் தடுமாறி தானும் தனது மனைவியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியில் வந்ததாகக் கூறுகிறார் சுருளி மஸ்தான்.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 வயது பெண் குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தீ தடுப்பு நடவடிக்கைகள் இல்லாததே உயிரிழப்புக்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சுமத்துகின்றனர்.

மருத்துவமனையில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்து காவல்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறுகிறார், அமைச்சர் மா.சுப்ரமணியன்.

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி? சம்பவம் நடந்தபோது நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன?

திண்டுக்கல்-திருச்சி பிரதான சாலையில் உள்ள காந்திஜி நகரில் அமைந்துள்ளது, சிட்டி மருத்துவமனை. மருத்துவர் முரளிதரன் என்பவருக்குச் சொந்தமான இந்த மருத்துவமனையில், எலும்பியல் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த வியாழன் அன்று (டிசம்பர் 12) இரவு 9.45 மணியளவில் மருத்துவமனையின் வரவேற்புப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட புகை, மருத்துவமனையில் உள்ள நான்கு தளங்களுக்கும் வேகமாகப் பரவியதாகக் கூறுகிறார் தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுருளி மஸ்தான்.

இவர் தனது மனைவிக்கு தொடைப் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த ஐந்து நாட்களுக்கு முன் மனைவியை அழைத்து வந்துள்ளார்.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து
படக்குறிப்பு, கண்ணே தெரியாத அளவுக்குப் புகை சூழ்ந்திருந்ததாகக் கூறுகிறார் விவசாயி கருப்பசாமி

தீ விபத்து நடந்த சிட்டி மருத்துவமனைக்கு பிபிசி தமிழ் சென்றபோது, அங்கு வந்திருந்த சுருளி மஸ்தான் பிபிசி தமிழிடம் பேசினார்.

அப்போது அவர், "இரவு 9:30 மணியளவில் மருத்துவர் ஒருவர் ஓடி வந்து, 'மருத்துவமனையில் தீ பிடித்துவிட்டது. வெளியே ஓடி வாருங்கள்' என்று கத்தினார். புகைமூட்டம் அதிகமாக இருந்தது. எங்களால் வெளிய வர முடியவில்லை. இரண்டு மருத்துவர்கள் வந்து எங்களைக் காப்பாற்றினார்கள்" என்றார்.

தரைத்தளத்தில் பரவிய தீயின் தாக்கம் பெருமளவு புகையை வெளிப்படுத்தியதால், தட்டுத் தடுமாறி தானும் தனது மனைவியும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வெளியில் வந்ததாகக் கூறுகிறார் சுருளி மஸ்தான்.

காணொளிக் குறிப்பு, தனியார் மருத்துவமனை தீ விபத்து நடந்த இடத்தில் பிபிசி செய்தியாளர் நேரில் கண்டவை

இதே கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்த தேனி மாவட்டம் வருசநாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி கருப்பசாமி, "என் மனைவிக்கு முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்து, நேற்றுதான் படுக்கைக்கு கொண்டு வந்தார்கள். இரவு நேரத்தில் திடீரென புகை அதிகமானது.

எல்லோரும் கத்திக்கொண்டே ஓடியதால் நானும் என் மனைவியை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன். முன்னால் சென்ற நபர் யாரென்றுகூடத் தெரியாத அளவுக்கு, புகை முகத்திலேயே அடித்தது, கண்ணே தெரியவில்லை.

ஒருவழியாக வெளியே வந்ததும், அங்கிருந்து ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்கள் " என்று விவரித்தார்.

இவர்கள் இருவரும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனர். ஆனால், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் உள்நோயாளிகளாக சுமார் 30க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களைப் பார்ப்பதற்காக வந்த ஒன்பது பேர் மருத்துவமனை லிஃப்ட்டில் சிக்கியுள்ளனர்.

லிஃப்ட்டில் சிக்கிய ஒன்பது பேர்

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

தீ வேகமாகப் பரவிய நேரத்தில் மின் இணைப்பை மருத்துவமனை ஊழியர் ஒருவர் துண்டித்துவிட, லிஃப்ட்டில் எந்த உதவியும் கிடைக்காமல் நீண்டநேரம் புகைக்கு நடுவில் அந்த ஒன்பது பேரும் தவித்துள்ளனர்.

தீயணைப்புத் துறை வீரர்கள் வந்த பிறகு லிஃப்ட்டின் கதவை உடைத்துப் பார்த்தபோது, அதில் ஒன்பது பேரும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். அதில், ஆறு பேர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"தீயணைப்புத் துறை வந்த பிறகும் மற்றவர்களைக் காப்பாற்றுவதில் தீவிரமாக இருந்துவிட்டார்கள். ஆரம்பத்திலேயே கவனித்திருந்தால், அதில் சிலரையாவது காப்பாற்றியிருக்கலாம்," என்கிறார் திண்டுக்கல் மாவட்டம் என்.ஜி.ஜி.ஓ காலனியை சேர்ந்த ராஜா.

இவரது தம்பி ராஜசேகர், தனது நான்கு வயது மகள் கோபிகா மற்றும் மனைவியுடன் சிட்டி மருத்துவமனைக்குச் சென்றபோது லிஃப்ட்டில் சிக்கியுள்ளனர். இதில் ராஜசேகரும் அவரது மகளும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக, அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"என் தம்பி ராஜசேகரின் மனைவியும் அதே லிஃப்ட்டில வந்துள்ளார். அவர்கள் இப்போது வரைக்கும் மயக்க நிலையில் இருக்கிறார். எப்போது கண் விழிப்பார் என்று தெரியவில்லை " என்று கவலையுடன் தெரிவித்தார் ராஜா.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து
படக்குறிப்பு, ராஜா கூறுவது போல, தனியார் மருத்துவமனையில் தரைத்தளம் முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்ததை நேரில் பார்க்க முடிந்தது.

விபத்தில் இறந்துபோன ராஜசேகரின் மாமனார் மணிராஜ், சிட்டி மருத்துவமனையில் மூட்டு வலி பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமனாரைப் பார்த்துவிட்டு லிஃப்ட் வழியாக இறங்கும்போது அவர்கள் விபத்தில் சிக்கியதாகக் கூறுகிறார், ராஜா.

"மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால், தண்ணீர் ஊற்றக்கூட எந்த வசதியும் இல்லை. முறையான பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. எதாவது விபத்து ஏற்பட்டால் வெளியேறுவதற்கு மாற்றுப் பாதையும் இல்லை. முதல் தளம் முழுக்கவே எரிந்து போயுள்ளது" என்கிறார் அவர்.

ராஜா கூறுவது போல, தனியார் மருத்துவமனையில் தரைத்தளம் முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்ததை நேரில் பார்க்க முடிந்தது. அந்தத் தளம் முழுக்கவே தீயில் கருகிக் கிடந்தது.

அதையொட்டி இருந்த மருந்தகம் உள்பட சில அறைகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. நோயாளிகளை வெளியேற்றுவதற்காக மருத்துவமனை ஊழியர்களால் அவை உடைக்கப்பட்டதாக, அங்கிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணங்களை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

காவல்துறை கூறுவது என்ன?

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

அங்கிருந்த திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளர் சிபி சாய் சௌந்தர்யனிடம் பிபிசி தமிழ் பேசியது. "மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 33 பேருக்கும் மேல் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.

இந்த விபத்தில், மருத்துவமனையின் லிஃப்ட்டில் சிக்கியவர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் டி.எஸ்.பி சிபி சாய் சௌந்தர்யன் தெரிவித்தார்.

"லிஃப்ட்டில் சிக்கிய ஒன்பது பேரும் நோயாளிகளைப் பார்ப்பதற்காகச் சென்றவர்கள்தான்" எனக் கூறும் ராஜா, அவர்களில் சிலர் தனது உறவினர்கள் என்றும், விபத்திற்குப் பிறகு தனது தம்பியின் செல்போன் காணவில்லை எனவும் அது அணைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "இப்படியொரு சூழலிலும் செல்போனை திருடுவோரை என்னவென்று சொல்வது?" என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

"தீ விபத்து நடந்த சில மணிநேரத்திலேயே மருத்துவமனை நிர்வாகிகளும் ஊழியர்களும் தலைமறைவாகிவிட்டதாக" சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பெயர் குறிப்பிட விரும்பாத போலீசார் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் உள்பட மருத்துவமனை நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்த விபத்தில் மணிமுருகன், மாரியம்மாள், சுருளி, சுப்புலட்சுமி, ராஜசேகர், கோபிகா ஆகியோர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்குத் தலா 3 லட்ச ரூபாயும் படுகாயம் அடைந்த நான்கு பேருக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும் லேசான காயம் அடைந்த 31 பேருக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.

விதிமீறல் புகார் - அமைச்சரின் பதில் என்ன?

திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து

மின் கசிவு ஏற்பட்டு சிட்டி மருத்துவமனையில் விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

மருத்துவமனையில் தீ தடுப்பு கருவிகள் இல்லாதது தொடர்பான குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், "இதுதொடர்பாக, காவல்துறை ஆய்வு நடத்தி வருகிறது. சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு நடத்தி வருகின்றனர். காவல்துறை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

'சுகாதாரத்துறை முன்பே ஆய்வு நடத்தியிருந்தால் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்த்திருக்கலாமே?' என செய்தியாளர்கள் கேட்டபோது, "இதுபோன்ற விபத்துகள் சொல்லிக் கொண்டு வருவதில்லை. மின் கசிவு எங்கு வேண்டுமானாலும் நடக்கும்" என்றார்.

மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் உரிமம் வழங்கும்போது, விதிமுறைகளைச் சரிபார்த்த பின்னரே உரிமம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

"உரிமம் வாங்கிய பிறகுகூட மருத்துவமனை கட்டுமானத்தில் மாற்றங்களைச் செய்திருக்கலாம். இருப்பினும், காவல்துறையின் அறிக்கைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)