கனமழை, மண்சரிவு பேரிடர்களால் தவிக்கும் இலங்கை மக்கள் - இதுவரை எவ்வளவு பாதிப்பு?
இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை புயலாக மாறியது. இதற்கு திட்வா (Ditwah) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளவும், மீட்பு பணிகளில் ஈடுபடவும் இலங்கை வந்துள்ள போர்க்கப்பல்களில் உள்ள விமானங்களை பயன்படுத்த இந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் சம்பத் துயகோந்த கூறினார்.
மேலும், வாகனம், சான்றிதழ் ஆகியவற்றை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
உமா ஓயா நீர்த்தேக்கத்தில் மதகுகள் திறக்கப்பட்டதையடுத்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கொலும்புவில் 2016-ஆம் ஆண்டு ஏற்பட்டதை விட மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என இலங்கை நீர்ப்பாசனத் துறையின் இயக்குநர் ஜெனரல் அஜித் குணசேகர தெரிவித்தார்.
கலாவாவி பகுதிக்குட்பட்ட நெல்லியாகம கிராமத்திலிருந்து மேய்ச்சலுக்காக விட்ட கால்நடைகளை வியாழன்று அழைத்துவரச் சென்றவ ஒருவர் திடீரென வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்த தென்னை மரத்தில் அவர் ஏறி மரத்தில் சிக்கித் தவித்த அவரை இலங்கை விமானப் படை வெள்ளியன்று மீட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



