துராந்த் கோடு: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு பிறகு இந்த கோடு பற்றி விவாதிக்கப்படுவது ஏன்?

காணொளிக் குறிப்பு, துராந்த் கோடு: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு பிறகு இந்த கோடு பற்றி விவாதிக்கப்படுவது ஏன்?
துராந்த் கோடு: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் மோதலுக்கு பிறகு இந்த கோடு பற்றி விவாதிக்கப்படுவது ஏன்?

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு வாரத்துக்கு மேல் தொடர்ந்த மோதல்கள் கடந்த சனிக்கிழமை கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவுக்கு வந்தது.

ஆனால் அந்த மோதல் நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, கத்தார் வெளியிட்ட அறிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில் இருந்த “எல்லை” என்ற வார்த்தை பின்னர் நீக்கப்பட்டிருந்தது!

இதையடுத்து துராந்த் (Durand) கோடு என்ற வார்த்தையும் விவாதிக்கப்படுகிறது.

சரி, துராந்த் கோடு என்றால் என்ன? இருநாட்டுக்கும் இடையேயான எல்லை பிரச்னையில் இது முக்கியமாக இருப்பது ஏன்?

1893-ல் இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் அரசு, வடமேற்கு பகுதிகளில் ஆட்சியை வலுபடுத்த, 2640 கிலோமீட்டர் நீளமுடைய எல்லையை வரைந்தது.

இதற்கான ஒப்பந்தம் காபூலில், அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவு செயலாளராக இருந்த சர். மோர்டிமர் துராந்துக்கும், ஆப்கானிஸ்தானின் அமீராக இருந்த அப்துர் ரஹ்மான் கானுக்கும் இடையில் கையெழுத்தானது.

அப்போதிலிருந்து இப்போது வரை, காபூலில் ஆட்சி செய்த எந்தவொரு அரசும் அதனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.

1947-ல் பாகிஸ்தான் தனிநாடாக பிரிக்கப்பட்ட பின், சில ஆப்கனிய ஆட்சியாளர்கள் துராந்த் கோட்டின் சட்டபூர்வ தன்மை பற்றி கேள்வி எழுப்பினர்.

மறுபுறம் பாகிஸ்தான் இதனை துராந்த் கோடு என அழைக்காமல், சர்வதேச எல்லை என குறிப்பிடுகிறது, அது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தான் கூறுகிறது.

சமீப காலமாக பாகிஸ்தான் தனது எல்லை மற்றும் வான்வெளியை மீறியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. இதில் சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட போதிலும், சிலவற்றை மறுத்தது.

அக்டோபர் 7-க்கும் 8-க்கும் இடைப்பட்ட இரவில் ஒராக்ஸாயில் (Orakzai) உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை அறிக்கை வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு