You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து எம்.பி.க்கள் மீது மர்மப் பொருளை வீசிய இளைஞர்கள்- 4 பேர் கைது -என்ன நடந்தது?
இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் நடந்து 22 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அதேநாளில் மற்றுமொரு அசம்பாவிதம் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. அத்துமீறி உள்ளே நுழைந்தவர்கள், மற்றும் வெளியே இருந்தவர்கள் இரண்டு பேர் என இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவையில் இன்று அலுவல்கள் நடந்து கொண்டிருந்த போது பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அவைக்குள் குதித்தனர்.
எம்.பி.க்கள் அமர்ந்திருந்த சேர் மற்றும் டேபிள்கள் மீது தாவிச் சென்ற அவர்கள் மர்மப் பொருட்களை வீசியெறிந்தனர். அதில் இருந்து வாயு வெளியேறியது. அந்த இளைஞர்கள் இருவரையும் எம்.பி.க்களே சுற்றி வளைத்துப் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டு நின்றதை பார்க்க முடிந்தது. மக்களவை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
2 பேரும் உள்ளே நுழைந்தது எப்படி?
மக்களவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "பார்வையாளர் பகுதியில் இருந்து 2 இளைஞர்கள் திடீரென குதித்து உள்ளே வந்தனர். அவர்கள் ஏதோ ஒன்றை வீசினர். அதில் இருந்து வாயு வெளியேறியது.
அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். சபை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு அத்துமீறலாகும், ஏனென்றால் 2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட நாடாமன்றத் தாக்குதலில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரிக்கிறோம்" என்று அவர் கூறினார்.
என்ன நடந்தது? - சு.வெங்கடேசன் விளக்கம்
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து முதலில் ஒருவர் தாவினார். அவர் தவறி விழுந்துவிட்டதாகதான் முதலில் நினைத்தோம்.
ஆனால், அவர் எழுந்து வேகமாக நாற்காலிகளுக்கு நடுவில் ஏறி குதித்து ஓடினார். மற்றொரு நபர் அவையில் குதித்த பிறகுதான், இரண்டு பேர் குதித்து உள்ளே வந்திருக்கின்றனர் என்பது புரிந்தது.
அவர்களை பிடிப்பதற்கு முன்பாக ஷூவில் இருந்து கேஸை எடுத்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அவையில் காவலர்கள் யாரும் இல்லை. ஊழியர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் அச்சத்தில்தான் இருந்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு காவலர்கள் உள்ளே வந்தனர். பாதுகாப்பு குறைபாடுதான் இதற்கு முழுக் காரணம்," என்றார்.
உள்ளே குதித்த நபர்கள் கோஷம் எழுப்பினர் என்றும் உள்ளே நடந்த களேபரத்தில் அவை தமக்குச் சரியாகக் கேட்கவில்லை என்றும் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.
நான்கு பேர் கைது
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
உள்ளே நுழைந்த “இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பொருட்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
மேலும், “மக்களவை இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் தொடர்பாக காவல்துறைக்குத் தேவையான தகவல், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. முதல் கட்ட விசாரணையில், சாதாரண புகைதான் என்பது தெரிய வந்துள்ளது. இது கவலைக்குரிய விஷயமில்லை,” என்றார்.
கைதானவர்கள் யார்?
மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த இருவரும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ‘சர்வதிகாரம் கூடாது’ என மக்களவைக்குள் நுழைந்த இருவரும் கோஷமிட்டதாகக் கூறப்படுகிறது.
அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதில் ஒருவரது பெயர் நீலம் கவுர் (42 வயது) மற்றும் இன்னொருவர் பெயர் அமோல் ஷிண்டே (25 வயது) எனத் தெரியவந்துள்ளது.
நீலம் கவுர் அரியானா மாநிலத்தில், ஜிந்த் மாவட்டத்தில் உச்சனா கலன் பகுதியில் உள்ள காசோ குர்த் கிராமத்தை சேர்ந்தவர். அவரது தந்தை உச்சனா கலனில் இனிப்புகள் விற்கும் கடை நடத்தி வருகிறார். அவர் தொழிலாளர் சங்கங்களில் தொடர்பு உடையவர்.
இரண்டு பேரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே, ட்ரான்ஸ்போர்ட் பவன் அருகே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வழிமுறைகள் என்ன?
- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு 4 கட்ட பாதுகாப்பு சோதனைகளை கடந்துதான் உள்ளே செல்ல முடியும்.
- பாதுகாப்பு படையினரின் 3 கட்ட சோதனைக்கு பிறகே ஒருவர் பார்வையாளர்கள் அரங்கிற்குள் நுழைய முடியும்.
- ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்கேனர் மற்றும் மெடல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்யப்படும்.
- பார்வையாளர்கள் அரங்கில் நுழைவதற்கு எம்.பி ஒருவரின் பரிந்துரை கடிதம் தேவை.
- நுழைவாயில் சோதனை செய்யப்பட்டு, வரவேற்பறையில் புகைப்படம் எடுக்கப்படும்.
இந்திய நாடாளுமன்ற தாக்குதலின் 22வது நினைவு தினம்
2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் நடந்து 22வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்த 9 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோதியும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரும் இந்த தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த தாக்குதலில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 8 வீரர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)