You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹமாஸ் இஸ்ரேலுக்குள் புகுந்து 100 பேரை பணயக் கைதிகளாக பிடித்தது எப்படி? அவர்களின் கதி என்ன?
- எழுதியவர், ஆலிஸ் டேவிஸ்
- பதவி, பிபிசி நியூஸ்
காசா பகுதியில் பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸால் "கணிசமான எண்ணிக்கையிலான" இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் வீரர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
அவர்களில் சிலர் உயிருடன் உள்ளனர் என்றும் சிலர் இறந்துவிட்டதாகவும் கருதப்படுவதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவித்தார்.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ஹமாஸ் குழுவினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்களில் அடங்குவர்.
"இதுவரை கற்பனை செய்ய முடியாத எண்கள் இவை" என்று அவர் கூறினார். "இது இந்தப் போரின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகிறது." என்றும் அவர் தெரிவித்தார்.
ஹமாஸின் கூற்றுப்படி, பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை டஜன் கணக்கு என்பதை விட "பல மடங்கு அதிகம்", அவர்கள் காசா பகுதி முழுவதும் உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, சுமார் 100 இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்துள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிடித்துச் செல்லப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு ஹமாஸ் தான் பொறுப்பு என்றும், "அவர்களுக்கு தீங்கு விளைவித்தால் அதற்கான விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்" என்றும் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலியர்கள் வீடுகளில் இருந்து பிடித்துச் செல்லப்பட்ட காட்சிகள்
ஹமாஸ் குழுவினரின் கைகளில் இஸ்ரேலியர்கள் இருப்பதைக் காட்டும் வகையில் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
பிபிசியால் சரிபார்க்கப்பட்ட ஒரு வீடியோ, காசா பகுதியில் கூட்ட நெரிசலில் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஒரு டிரக் வண்டியில் ஏற்றிச் சென்ற காட்சிகளைக் காட்டுகிறது.
காசா பகுதிக்கு புவியியல் ரீதியாக அமைந்துள்ள இடத்தைக் காட்டும் மற்றொரு வீடியோ, வெறுங்காலுடன் ஒரு பெண் டிரக்கின் பின்புறத்திலிருந்து இரத்தம் தோய்ந்த கைகளுடன் பின்னால் இழுக்கப்படுவதைக் காட்டுகிறது.
சில பணயக்கைதிகள் இஸ்ரேலின் தெற்கில் காஸாவுக்கு அருகில் உள்ள ஒபாகிம் நகரின் புறநகர்ப் பகுதியான கிப்புட்ஸ் ரெய்மில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்குதல் நடத்தியவர்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அவர்களில் பலரை இன்னும் காணவில்லை என்றும் அங்கு இருந்தவர்கள் இஸ்ரேலிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
பிபிசியால் உறுதிப்படுத்தப்படாத சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்கள், விருந்தில் கலந்து கொண்ட ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் கடத்தி மோட்டார் சைக்கிளில் வைத்திருப்பதைக் காட்டுகின்றன.
அவர் ஓர் இஸ்ரேலிய பெண்ணான நோவா அர்கமணி என அவரது கணவரின் சகோதரரான மோஷே அடையாளம் காட்டினார்.
அவர் காணாமல் போனது பற்றி அவரது கணவரின் சகோதரர் புகார் தெரிவித்துள்ளார். சகோதரரையும், அவருடைய மனைவியையும் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில் பார்ப்பதற்கு முன்பே அவர் புகார் அளித்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
"நான் நோவாவை வீடியோவில் பயந்து பயந்து பார்த்தேன். அவர் மனது எவ்வளவு துடித்திருக்கும் என என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஒரு மோட்டார் சைக்கிளில் பிடித்துச் செல்லப்பட்ட அவர் பீதியில் அலறினார்," என்று அவர் இஸ்ரேலிய ஒளிபரப்பு சேனல் 12 க்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பிபிசியால் சரிபார்க்கப்படாத பிந்தைய வீடியோ - காஸாவில் உள்ள ஒரு அறையில் அவர் தண்ணீர் பருகுவதைக் காட்டுகிறது.
இஸ்ரேலிய நகரங்களில் பணயக்கைதிகளின் நிலை என்ன?
காசா பகுதிக்கு வெளியே, தெற்கில் இரண்டு இடங்களில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேலிய பொதுமக்களை இஸ்ரேலிய இராணுவப் படைகள் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிப்புட்ஸ் பீரியில், சாப்பாட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பணயக்கைதிகள் 18 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டதாக இஸ்ரேலின் தொலைக்காட்சி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
50 பேர் வரை அங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், எலா என அடையாளம் காணப்பட்ட ஒரு பெண், தான் நகரத்தில் பல மணி நேரம் வெடிகுண்டு காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறினார்.
"நாங்கள் நிறைய துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்கிறோம். பயங்கரவாதிகள் டைனிங் ஹாலில் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நிறைய துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது," என்று அவர் கூறினார்.
"நான் எனது குடும்பத்துடனான தொடர்பை முழுமையாக இழந்துவிட்டேன். என் தந்தை கடத்தப்பட்டுள்ளார் என்பது எனக்குத் தெரியும். என்ன நடக்கிறது என்று யாரும் எங்களுக்குச் சொல்லவில்லை. என் அம்மா உயிருடன் இருக்கிறாரா என்று எனக்குத் தெரியவில்லை."
பிபிசியால் சரிபார்க்கப்பட்ட ஒரு வீடியோ, பீரியில் தீவிரவாதிகள் வெறுங்காலுடன் ஒரு தெருவில் மக்களை கடத்திச் செல்வதைக் காட்டுகிறது. சாப்பாட்டு கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த அதே பணயக்கைதிகளா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், ஒபாகிம் நகரின் புறநகர்ப் பகுதியான கிபுட்ஸ் யூரிமில், ஹமாஸ் போராளிகளால் சனிக்கிழமை ஒரு வீட்டில் மணிக்கணக்கில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இரண்டு இஸ்ரேலியர்கள் மீட்கப்பட்டதாக இஸ்ரேலின் பொது ஒலிபரப்பு நிறுவனமான 'கான்' தெரிவித்துள்ளது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் நகருக்குள் நுழைந்து குடியிருப்புவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதால், அந்நகரில் ராக்கெட் எச்சரிக்கை சைரன்கள் அமைக்கப்பட்டதையடுத்து, அவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு தப்பிச் சென்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இரண்டு இஸ்ரேலியர்கள் அவர்களது குடியிருப்பில் தங்கியிருந்தனர். அங்கு ஆயுதக் குழுவைச் சேர்ந்த நான்கு பேர் அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்தனர். பின்னர் இஸ்ரேலிய படைகள் அவர்களைக் கொன்று இரண்டு பேரையும் மீட்டுள்ளனர்.
மீட்புப் பணியின் போது மூன்று இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்ததாக 'கான்' தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)