மணிப்பூர் வன்முறை, ஜம்மு காஷ்மீர் நிலவரம் பற்றிய அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு ஏன்?

காணொளிக் குறிப்பு, 'மணிப்பூர் வன்முறையின்போது மீறப்பட்ட மனித உரிமைகள்'
மணிப்பூர் வன்முறை, ஜம்மு காஷ்மீர் நிலவரம் பற்றிய அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு ஏன்?

மணிப்பூர் வன்முறையின்போது மனித உரிமை மீறல்கள் நடந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது.

வியாழன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்த அறிக்கை முற்றிலும் பாரபட்சமானது. இந்தியாவின் நிலையை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இந்த அறிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை, நீங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்," என்றார்.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் சிறுபான்மை குக்கி சமூகத்தினரிடையே கடுமையான வன்முறை வெடித்தது.

மெய்தேய் சமூகத்தினருக்கு சிறுபான்மை சமூகத்தினருக்கான சலுகைகளை வழங்கவேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் பரிந்துரைத்ததால் இந்த வன்முறை ஏற்பட்டது. பல வாரங்களாகத் தொடர்ந்த வன்முறையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது தொடர்பான '2023 மனித உரிமைகள் அறிக்கை' என்னும் அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையை 'ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகம்’ உருவாக்கியுள்ளது.

இந்த அறிக்கையில் சுமார் 200 நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த உண்மையான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பிளிங்கன் கூறினார். அந்த அறிக்கையில் இந்தியா தொடர்பான பல விஷயங்கள் விவரிக்கப்பட்டிருந்தன.

அதில், 'இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தேய் இனக் குழுக்களுக்கு இடையில் இன மோதல் வெடித்ததன் விளைவாகக் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் ஏற்பட்டன. மே 3 மற்றும் நவம்பர் 15 ஆகிய தேதிகளுக்கு இடையே குறைந்தது 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்ததாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறையைத் தடுத்து நிறுத்துவதில் மத்திய அரசும் மணிப்பூர் மாநில அரசும் தோல்வியடைந்ததை உச்சநீதிமன்றம் விமர்சித்தது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கை கூறுகிறது.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்குவதற்கு மிகக் குறைந்த அளவிலேயே முயற்சிகளை அல்லது நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்தது என்றும் மனித உரிமைகள் நடைமுறைகள் தொடர்பான அந்த அறிக்கை கூறுகிறது.

”பாஜக தலைமையிலான அரசாங்கம், மத சிறுபான்மையினர் மற்றும் பிற சிறுபான்மை சமூகத்துக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்ட பாகுபாடுகளைக் கட்டவிழ்த்து விடுகிறது. பாஜகவை ஆதரிப்பவர்கள் குறிப்பிட்ட சமூக மக்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை நடத்தினர்.

பொதுமக்களில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் நபர்களை மௌனமாக்குவதற்கும், சுதந்திரமாகச் செயல்படும் ஊடகவியலாளர்களை மௌனமாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது தீவிரவாதம் உட்பட அரசியல் உள்நோக்கம் கொண்ட பிற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களைச் சிறைக்கு அனுப்புவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மணிப்பூர் வன்முறை

பட மூலாதாரம், DILIP KUMAR SHARMA

இதுதவிர, ஜம்மு-காஷ்மீரில் கருத்து சுதந்திரத்திற்கும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக அமெரிக்காவின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான முதன்மைத் துணைச் செயலாளர் ராபர்ட் எஸ். கில்கிறிஸ்ட் கடந்த செவ்வாயன்று பேசும்போது, “இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விஷயங்களில் உயர் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

மனித உரிமைகள் தொடர்பான தனது முயற்சிகளை இந்தியா முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். இந்திய அரசு அந்நாட்டின் உறுதிமொழிகளைப் பின்பற்ற வேண்டும். பலதரப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளுடன் இந்திய அரசு தொடர்ந்து பேச வேண்டும்` என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்த அறிக்கையை நிராகரித்துள்ள இந்தியா, இது பாரபட்சமானது என்றும் தெரிவித்துள்ளது. கடந்த வியாழன்று செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், 'இந்தியாவின் நிலை குறித்து அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் இந்த அறிக்கைக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை, நீங்களும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்' என்று தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)