You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எம்என்சி நிறுவனங்களிடம் கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை கேட்கும் அமைச்சர் – தமிழர்களுக்கு பிரச்னையா?
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கர்நாடகா கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, சமீபத்தில் அம்மாநிலத்தில் அலுவலகங்கள் வைத்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (MNC) அங்கு ‘எத்தனை கன்னட பணியாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும்,’ எனப் பேசியது, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இது உண்மையில் சாத்தியமா?
இதனால் யாருக்கு பாதிப்பு ஏற்படும்?
சமீப காலமாகவே கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற அரசியல் முழக்கங்கள் அதிகரித்து வருகின்றன. கர்நாடகம் முழுவதிலும் திரும்பிய திசையெல்லாம் அம்மாநில கொடியும், மொழிக்கான முக்கியத்துவம் தரப்படுவதையும் மிக எளிதாக பார்க்க முடியும்.
இதன் தாக்கத்தால் கர்நாடகாவின் பல பகுதிகளில், ஆட்டோ ஓட்டுநர்கள், கடை நடத்துபவர்கள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி பேசுவோரிடம், கன்னடத்தில் பேசுமாறு வற்புறுத்தும் சம்பவங்களும், சர்ச்சைகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் மாதம், "அறிவிப்பு, விளம்பரப் பலகைகள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளில், கன்னடம் 60% இருக்க வேண்டும்” என, பெங்களூரு மாநகராட்சி அறிவித்தது.
அதன்பின், கர்நாடகா முழுவதிலும் இதை அமல்படுத்த வேண்டும் எனக்கூறி, கர்நாடகா ரக்ஷனா வேதிகே என்ற கன்னட அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. அதன் உறுப்பினர்கள் பெங்களூர் நகர் முழுவதிலும், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என பிற மொழிகளில் வைக்கப்பட்டிருந்த கடைகளின் பெயர்ப்பலகைகளை அடித்து நொறுக்கினர். இந்த விவகாரம் அப்போது பெரும் பேசுபொருளானது.
பெயர் பலகைகளில் 60% கன்னடம் – மசோதா நிறைவேற்றம்
கன்னட பெயர் பலகைகள் வைக்க வேண்டுமென, தொடர்ந்து கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் தான் கடந்த வாரம், கர்நாடகா சட்டப்பேரவையில், கன்னட மொழி வளர்ச்சி திருத்தம் என்ற மசோதாவை நிறைவேற்றியது.
அந்த மசோதாவில், "அறிவிப்பு, விளம்பர பலகைகள் மற்றும் கடைகளின் பெயர் பலகைகளில், 60% கன்னடத்தில் இருக்குமாறு வைக்க வேண்டும். இல்லையென்றால் தொழில் நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்படும்," என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது வணிக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, கல்வி, மருத்துவம், தொழில்துறை என பலதுறைகளுக்கும் பொருத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மசோதாவை நிறைவேற்றிய போது பேசிய, கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சார அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘‘மாநில அளவில் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டு, கன்னடத்தில் பெயர் பலகைகள் இருப்பது உறுதி செய்யப்படும். அத்துமீறுவோருக்கு அபராதம் விதிப்பதுடன், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும்,’’ எனப்பேசியிருந்தார்.
‘MNC–க்கள் கன்னட பணியாளர்கள் எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும்’
பிப்ரவரி 22-ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, "கர்நாடகத்தில் இருக்கும் MNC நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகைகளில், எத்தனை பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள் என அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் தொழில் உரிமம் திரும்பப்பெறப்படும்," எனப்பேசியிருந்தார்.
இது கர்நாடகத்தில் பணிபுரியம் ஐ.டி மற்றும் இதர துறை MNC நிறுவன பணியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி, அரசியல் களத்தில் பெரும் பேசுபொருளானதுடன், இந்த உத்தரவு கர்நாடகத்தின் தொழில் வளர்ச்சிக்கு எதிராக அமையும் எனக்கூறி பல தரப்பினர் அமைச்சரை கடுமையாக விமர்ச்சித்தனர்.
இந்த விவகாரம் பெரிதான நிலையில், பிப்ரவரி 23-ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு, கலாச்சாரத்துறை அமைச்சர் கூறியதைப்போன்ற எந்த திட்டமும் இல்லை. சில கன்னட அமைப்பினர் கலாச்சாரத்துறை அமைச்சரின் அந்த கோரிக்கையை முன்வைத்ததால் தான் அவர் அப்படி பேசியுள்ளார். அது போன்ற திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது. பெங்களூர் உலகத்தரம் வாய்ந்த நகரம், இங்கு தொழில் செய்ய அனைவரையும் வரவேற்கிறோம். நிறுவனங்கள் கன்னட பணியாளர்கள் எண்ணிக்கையை வெளியிடத்தேவை இல்லை," எனக்கூறி சர்ச்சைக்கு அரசின் விளக்கத்தை தெரிவித்தார்.
‘தேர்தலுக்காக சொல்லப்பட்டது’
பிபிசி தமிழிடம் பேசிய, தமிழகத்தை பூர்விகமாகக்கொண்ட பெங்களூரின் முன்னாள் ஐ.டி நிறுவன ஊழியரும், சமூக செயற்பாட்டாளருமான சம்பத் ராமானுஜன், "நான் பல ஆண்டுகளாக பெங்களூர் ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளேன். கலாச்சாரத்துறை அமைச்சர் பேசியது முற்றிலும் சாத்தியமற்றது என்பதுடன், இதை அமல்படுத்தினால் தொழில்துறைக்கு பேரடியாகத்தான் இருக்கும்," என்றார்.
"மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் தான் அமைச்சர் மொழிக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று பேசி, பாகுபாட்டை உருவாக்கி மொழியை வைத்து அரசியல் செய்கிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வரும் போதெல்லாம் தமிழர்களை சீண்டும் வகையிலும், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், இது போன்று மொழி ரீதியாக மக்கள் பிரதிநிதிகள் பேசுவதும், மொழியை அரசியலுக்காக பயன்படுத்துவது நடக்கிறது. இதுவே கடந்த பா.ஜ.க ஆட்சியில் இங்கு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது," என்கிறார் சம்பத் ராமானுஜன்.
‘இது நடைமுறையில் சாத்தியமற்றது’
பிபிசி தமிழிடம் பேசிய சென்னை ஐ.டி ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த சீதாராமன், "அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் இருக்கும் MNCக்களில் அமெரிக்கர்கள் குறைவு, இதை சரிபடுத்த வேண்டும் எனக்கூறி அதை வைத்து அரசியல் செய்திருந்தார். அதைப்போன்று தான், MNCக்கள் கன்னட பணியாளர்கள் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்ற பேச்சையும் பார்க்க வேண்டியுள்ளது," என்கிறார் அவர்.
மேலும் தொடர்ந்த சீதாராமன், "மாநில வளர்ச்சிக்காக எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என அரசு தெரிந்துகொள்ளலாமே தவிர, நிறுவனங்கள் விபரங்களை காட்சிப்படுத்த வேண்டும், இல்லையென்றால் தொழில் உரிமம் ரத்து எனக்கூறுவது சாத்தியமற்ற ஒன்று. ஒரு வேளை இது அமல்படுத்தினால் பெங்களூரின் தொழில் வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். ஏனெனில் இப்படியான உத்தரவுகளை பின்பற்ற தயங்கி பல நிறுவனங்கள், பெங்களூருக்கு அடுத்த நிலையில் உள்ள புனே, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு தொழில் துவங்க சென்றுவிடுவார்கள்," என்கிறார் அவர்.
அமைச்சரின் விளக்கம் என்ன?
‘கன்னட பணியாளர்களின் எண்ணிக்கை வெளியிட வேண்டுமென்ற உத்தரவு அமலானால், பெங்களூருவின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது,’ என்ற கேள்வியை, கன்னட மொழி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகியிடம் பிபிசி தமிழ் முன்வைத்தது.
பிபிசி தமிழிடம் பேசிய சிவராஜ் தங்கடகி, "கன்னட மொழியை வளர்ப்பதற்காக கன்னட அமைப்புகள் என்னிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். அதில், ஒன்று தான் கன்னட பணியாளர்கள் விபரங்களை அறிவிப்பு பலகையில் காட்சிப்படுத்த வேண்டும் என்பது. அந்த கோரிக்கையைத்தான் பொது வெளியில் தெரிவித்திருந்தேன். இது சாத்தியமா எனஅரசுடன் ஆலோசித்து தான் முடிவெடுக்கப்படும். இதனால் ஒன்றும் தொழில் வளர்ச்சி பாதிக்காது," எனக்கூறி, மேலும் பேச மறுத்துவிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)