பிறந்தது முதல் 20 ஆண்டுகளாக பால் மட்டுமே குடித்து வரும் திருப்பூர் இளைஞர் - ஏன் தெரியுமா?

பிறந்தது முதல் 20 ஆண்டுகளாக பால் மட்டுமே குடித்து வரும் திருப்பூர் இளைஞர் - ஏன் தெரியுமா?

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த 20 வயது இளைஞருக்கு பிறக்கும் போதே தாடையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவரால் உணவு ஏதும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தது முதலே பால் மட்டுமே குடித்து உயிர் வாழ்கிறார் அவர்.

பிறந்தவுடன் அவரைப் பார்த்த மருத்துவர்கள், அவர் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறியிருந்தனர். ஆனால், இரவும் பகலும் தூக்கமில்லாமல் தன் குழந்தைக்கு பால் கொடுத்து வளர்த்து வந்துள்ளார் அவரது தாய் தேவி. அவரால் 100 மில்லி லிட்டர் குடிக்கவே இரண்டு முதல் மூன்று மணி நேரங்கள் ஆகும் என்கிறார் தேவி. ஐந்து வயதில் அவருக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகே, அவரால் தானாக பால் குடிக்க முடிந்தது.

அவரது முக அமைப்பை பார்த்து அக்கம் பக்கத்தினர் எரிச்சலையும் பயத்தையும் வெளிப்படுத்தினர். ஆனால் இத்தனை ஆண்டுகளில் அவரை புரிந்து கொண்ட சமூகம், அவருடன் உரையாடி நட்பு பாராட்டுவதாக அவரது தந்தை கூறுகிறார்.

9 மணி நேர அறுவை சிகிச்சை

அபினேஷ் 5 மாத குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட பிரசனையின் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

9 மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்கு பிறகே அவருக்கு மீண்டும் உணவை எடுத்துக்கொள்ளும் திறன் வந்துள்ளது. அதுவும் அவருக்கு கதகதப்பான பால் மட்டுமே வழங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அன்றிலிருந்து இன்று வரை பால் மட்டுமே குடித்து வாழ்ந்து வருகிறார் அபினேஷ்.

இதுகுறித்து பேசிய அபினேஷின் தாய் தேவி, "ஒரு 100 மி.லி. பாலை அவருக்கு குடிக்க செய்வதற்குள் பெரும்பாடாகிவிடும். இதற்காக நான் 2 முதல் 3 மணி நேரம் கண்விழித்தாக வேண்டும். அதுவும் காகிதங்களை கொளுத்தி அடுப்பு மூட்டி (அந்த சமயத்தில் அவர்களிடம் கேஸ் அல்லது மண்ணெண்ணெய் அடுப்பு கிடையாது) கதகதப்பான பாலை அவருக்கு புரை ஏறாமல் கொடுப்பது மிகவும் சவாலாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “3 மணி நேரம் பால் கொடுத்த பின்னும் குழந்தைக்கு பசி ஓய்ந்து இருக்காது. எனவே இரவு முழுக்க கண்விழித்து பால் காய்ச்சி குழந்தைக்கு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். பகல் பொழுதும் இப்படித்தான் எனக்கு கழியும். அபினேஷுக்கு 5 வயது ஆகும் வரை எனக்கு தூக்கம் என்பது பெரும்பாலும் கிடைக்காது. " என்கிறார் அபினேஷின் தாய்.

பள்ளிக்கு போவதே கடினம்

இன்று வரையிலும் அபினேஷால் வெறும் பால் மட்டுமே குடிக்க முடியும். ஜூஸ் அல்லது வேறு எந்த உணவையும் அவர் உட்கொள்ள முடியாது. அவரது உணவு மட்டுமின்றி அவருக்கு கல்வி கிடைப்பதுமே பெரும் சிரமமாக இருந்ததாக தெரிவிக்கிறார் அவரது தந்தை.

இதுகுறித்து பேசிய அவர், “முதலில் என் மகனை பார்த்து அனைவரும் பயந்தனர். பள்ளியில் கூட சேர்க்க மறுத்துவிட்டனர். பிற குழந்தைகள் மிரண்டு விடும் அல்லது அபினேஷ் பிற மாணவர்களால் தாக்கப்படக்கூடும். இது அவருக்கு ஆபத்தாக முடியலாம் என்றும் கூறினர். ஆனால் ஒரு வழியாக அவரைப் பள்ளியில் சேர்த்து பத்தாம் வகுப்பு வரை வெற்றிகரமாக படிக்க வைத்து விட்டேன்" என்றார்.

அரசின் உதவி

டீ மாஸ்டராக இருந்த வசந்தகுமாரும் விபத்தில் ஒருமுறை அடிபட்டு காலில் பிளேட் வைத்து ஆபரேஷன் செய்ததில் படுத்த படுக்கையாகிவிட்டார். தன்னந்தனியாக குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு தேவியின் தலையில் விழுந்தது.

வீட்டு வேலை செய்து வரும் தேவிக்கு தினம்தோறும் சம்பளமே ரூ.250 தான். ஆனால் அபினேஷுக்கு ஒரு நாள் ஆகும் பால் செலவு மட்டுமே ரூ.300. அதுபோக வீட்டு வாடகை, வீட்டில் இருக்கும் பிற குழந்தைகளுக்கான உணவு உள்ளிட்டவைக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் வந்துவிட்டதாக கூறினார் தேவி. இருந்த போதும் அபினேஷ்-ஐ பார்க்கும் நல்ல உள்ளங்கள் சிலர் 50, 100 என்று கொடுப்பது உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.

இதனால் திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தபோது, இவர்களது கோரிக்கையை பரிசீலித்து திருப்பூர் பல்லடம் பேருந்து நிலையத்தில் இவர்களுக்கு ஆவின் பாலகம் வைத்துக்கொள்ளும் உரிமையும், சிறிது பணமும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது அரசு.

மருத்துவர்கள் கூறுவது என்ன?

அபினேஷுக்கு ட்ரீசர்ஸ் காலின்ஸ் சின்ட்ரோம் என்ற முக உறுப்புகள் பாதிக்கப்பட்ட பல பிரச்சனைகள் ஒன்று சேர்ந்த ஒரு குறைபாடு இருப்பதாக கூறும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜன் சுஜா, சிறு வயதிலேயே தாடையை நீட்டிக்கும் அறுவை சிகிச்சை செய்திருந்தால் உணவு பிரச்னையை போக்கியிருக்கலாம் என்று கூறுகிறார்.

இது போன்ற பிரச்னைகளை கருவில் கண்டறிவது சற்று கடினம் என்று கூறும் அவர், மரபணு ரீதியாக இந்த பிரச்னைகள் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்பட 50% வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் அபினேஷ் பிரச்னைக்கு என்ன தீர்வு என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மருத்துவர் சுஜா, “பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அபினேஷின் தாடையை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. முகத்தில் மென்திசுக்கள் குறைவாக இருக்கும் இடத்தில், கொழுப்பு ஊசி போட்டு முகத்தை சற்று அழகாகலாம். தாடையை சரி செய்தால் அவர் பிற உணவுகளையும் சாப்பிடுவதற்கான வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

இயல்பு வாழ்க்கை

தன் மகனை தற்போது சமூகம் ஏற்றுக் கொண்டதாகவும், தங்களிடம் பேசாதவர்கள் கூட தெருவில் செல்லும்போது அபினேஷை பார்த்து பேசி செல்வதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார் வசந்தகுமார். அபினேஷின் குறைகளை கடந்து அவர் அனைவரிடமும் அன்பாக பழகும் குணாதிசயத்தை பலரும் பார்த்திருப்பதால் அவருக்கு நட்பு வட்டம் பெருகிக் கொண்டே இருப்பதாகவும் கூறுகிறார்.

அதில் தற்போது ஆட்சியர், காவல்துறையினர், மருத்துவர்கள் முதற்கொண்டு அனைவரும் இணைந்து வருவதாகவும் பெருமிதத்தோடு கூறியுள்ளார். அபினேஷிடம் நட்போடு பழகுவதை பார்க்கும் போது தாங்கள் இத்தனை நாட்கள் பட்ட கஷ்டங்கள் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை என்றும் பெருமிதத்துடன் கூறுகிறார் வசந்தகுமார்.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)