You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தீபாவளி: சென்னையில் காற்று மாசுபாடு குறைவு, ஒலி மாசு அதிகம் - உடல்நலனுக்கு என்ன பிரச்னை?
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தீபாவளியை ஒட்டி ஏற்படும் காற்று மாசுபாடு கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஒலி மாசுபாடு சில இடங்களில் அதிகரித்திருக்கிறது.
இந்திய உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெருநகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவு, அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறையால் கண்காணிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அதன்படி தீபாவளிக்கு ஏழு நாட்களுக்கு முன்பாகவும் 7 நாட்கள் பின்பாகவும் ஒலி மாசுபாடும் காற்றுத் தர மாசுபாடும் கண்காணிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு கண்காணிக்கப்பட்டு, கிடைத்த முடிவுகளை தற்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளிக்குப் பிந்தைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், முந்தைய ஆண்டைவிட காற்றுத் தர மாசுபாடு சற்றுக் குறைந்துள்ளது. ஒலி மாசுபாடு சில இடங்களில் அதிகரித்துள்ளது. சில இடங்களில் குறைந்துள்ளது.
தீபாவளி நாளான நவம்பர் 12ஆம் தேதியன்று காலை ஆறு மணி முதல் அடுத்த நாள் காலை ஆறு மணிவரை சென்னை நகரின் ஏழு இடங்களில் காற்றுத்தர குறியீட்டு அளவு (AQI) கணக்கிடப்பட்டது. பெசன்ட் நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கணி, சௌகார்பேட்டை, வளசரவாக்கம், திருவொற்றியூர் ஆகிய ஏழு இடங்களில் கணக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
கிடைத்த கணக்கீடுகளின்படி, கடந்த ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கு்மபோது இந்த ஆண்டு பெசன்ட் நகரில் மாசுபாடு (207 AQI) மிகக் குறைவாக இருந்தது. சென்னை நகரிலேயே வளசரவாக்கத்தில்தான் மிக மோசமான (365 AQI) அளவாக இருந்தது. பல இடங்களில் மாசுபாடு பாதி அளவுக்குக் குறைந்திருந்தது.
சௌகார்பேட்டையில் கடந்த ஆண்டு காற்று மாசுபாடு 786 AQIஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது, 336 AQIஆகக் குறைந்திருந்தது. திருவல்லிக்கேணியில் 503 AQIஆக இருந்தது தற்போது 253 AQIஆகக் குறைந்திருந்தது.
"காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரப்பதத்தின் காரணமாகவும் காற்றின் மிகக் குறைந்த வேகத்தாலும் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்ட புகை வான்வெளியில் கலைவதற்கான சூழ்நிலை அமையவில்லை" என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றுத்தர மாசுபாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் நிலைமை மேம்பட்டிருந்தாலும், தீபாவளியன்று ஏற்பட்ட மாசுபாடு தேசிய அளவில் நிர்ணியிக்கப்பட்ட மாசுபாட்டு அளவைவிட மிகமிக அதிகமாகவே இருந்தது. தேசியத் தரக் குறியீடுகள் AQI 50க்குள் இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. தற்போது சென்னையில் நிலவிய அளவுகள், மோசம் அல்லது மிக மோசம் என்ற வகைப்பாட்டிற்குள் வருகின்றன.
ஒலி மாசுபாட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு தீபாவளியோடு ஒப்பிட்டால் சென்னை நகரின் சில இடங்களில் அதிகரித்தே காணப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தியாகராய நகரில் (60.5 டெசிபல்) ஒலி மாசுபாடு குறைவாகவும் வளசரவாக்கத்தில் மிக அதிகமாகவும் (83.6 டெசிபல்) இருந்தது. கடந்த ஆண்டு தீபாவளியோடு ஒப்பிடும்போது பெசன்ட் நகர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, சௌகார்பேட்டை ஆகிய இடங்களில் நிலைமை மோசமாக இருந்தது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது காற்றுத்தர மாசுபாடு குறைவாக இருந்ததற்கு, தமிழ்நாடு அரசும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்தான் காரணம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியிருக்கிறது.
இருந்தபோதும், தற்போது ஏற்பட்டிருக்கும் மாசின் அளவே மிக மோசமானதுதான் என்கிறார்கள் மருத்துவர்கள்.
"கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாசுபாடு குறைவு என்றாலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட இது பல மடங்கு அதிகம். சென்னை நகரம் முழுக்க காற்று மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆறு, ஏழு மடங்கு அதிகமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட 10 - 15 சிகரட் குடிப்பதற்குச் சமமானது. பட்டாசு வெடிப்பதை முழுமையாகக் கைவிட வேண்டும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.
இந்தப் பிரச்சனையை இருவிதமாக அணுக வேண்டும் என்கிறார் நுரையீரல் நோய் நிபுணரான டாக்டர் பிரசன்னகுமார் தாமஸ். "முதல்வகையினர் எந்த வித நோயும் இல்லாத ஆரோக்கியமானவர்கள். இவர்களுக்கு ஒரு நாள் ஏற்படக்கூடிய இந்த மாசுபாடு பெரிதாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாசுபாடு இருக்கும் நாட்களில் இவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும். அப்படி வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
இரண்டாவது வகையினர், ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள் போன்ற பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கான தொடர் மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் வெளியே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும். மீறிச் செல்லும்போது என்95 முகக் கவசம் அணிந்து வெளியில் செல்லவேண்டும்" என்கிறார் பிரசன்ன குமார் தாமஸ்.
சென்னை போன்ற நகரங்களில் ஏற்படும் மாசுபாடு, கடல்காற்றின் வருகையால் ஒன்றிரண்டு நாட்களில் நீங்கிவிடும் என்பதால், இந்த ஒன்றிரண்டு நாட்களுக்குக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)