தென்கொரிய இசையுலகில் தொடரும் தற்கொலைகள்; இளம் K-pop கலைஞர்களின் சோக முடிவுக்கு என்ன காரணம்?

    • எழுதியவர், ஃபான் வாங், யுனா கு
    • பதவி, சிங்கப்பூர், சோல்

K-pop இசை உலகின் இளவரசனாக வலம் வந்த மூன்பின்னின் மரணம் உலகெங்கிலும் உள்ள கொரிய இசை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவரின் தற்கொலை, தென் கொரிய கலைஞர்கள் எதிர்கொள்ளும் கடுமையான அழுத்தங்களை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது என்று சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஆண்கள் இசைக்குழுவான ஆஸ்ட்ரோவை சேர்ந்த 25 வயதான மூன்பின், நடிகர், பாடகர், மாடல் என பல அவதாரங்களை எடுத்துள்ளார்.

இவரின் இசைக்குழுவுக்கு உலகம் முழுவதும் உள்ள கே-பாப் இசை ரசிகர்கள் சிறப்பான ஆதரவை வழங்கி வந்தனர். தனது இசைக்குழுவின் மற்றொரு உறுப்பினரான சன்ஹாவுடன், கச்சேரிகள் நடத்த உலகச் சுற்றுப்பயணம் செய்த போது இவரின் மரணம் நிகழ்ந்தது.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், "தற்கொலை செய்து உயிரிழந்தார்" என்று போலீசார் தெரிவித்தனர்.

தென் கொரிய பொழுதுபோக்கு துறையை சேர்ந்த இளம் பிரபலங்கள் சிலர் அண்மைக்காலமாக உயிரிழந்து வரும் நிலையில், அந்த பட்டியலில் மூன்பின்னின் பெயரும் சேர்ந்துள்ளது.

26 வயதான நடிகை ஜங் சா யல், ஏப்ரல் மாத தொடக்கத்தில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். 27 வயது நடிகையான யூ ஜூ யுன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறந்தார்.

F(x) என்ற பெண்கள் இசைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான சுல்லி, தன் மீதான ஆன்லைன் கேலிக்கு எதிரான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டு இறந்தார். அப்போது அவரின் வயது 25 மட்டுமே.

மேலும் அவரது நெருங்கிய தோழியான கே-பாப் பாடகி கூ ஹாரா, ஒரு மாதம் கழித்து அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

இப்போது மூன்பின்னின் மரணம், கொரிய பொழுதுபோக்கு துறையின் மீது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நட்சத்திர அந்தஸ்தை பெற நடக்கும் போராட்டம்

போட்டி கலாசாரத்திற்கு பெயர் பெற்ற தென் கொரியா, உலகிலேயே அதிக இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நாடுகளில் ஒன்றாகும். அந்த நாட்டில் பிற வயதினர் மத்தியில் நிகழும் தற்கொலையின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், இளம் வயதினர் இடையே நிகழும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தென் கொரியாவில் பிரபலமாக இருப்பது, அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பாப் நட்சத்திரங்களை விட அதிக அழுத்தம் நிறைந்தது என்று பில்போர்டு பத்திரிகையின் ஆசிய நிருபர் ராப் ஸ்வார்ட்ஸ் கூறுகிறார்.

தென் கொரிய இளைஞர்களிடையே பொழுதுபோக்கு துறையில் பணிபுரிய வேண்டும் என்பது விருப்பமான ஒன்றாக இருக்கிறது. அதனால் அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

2021ஆம் ஆண்டு, தென் கொரிய கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வு, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான முதல் 10 கனவு வேலைகளில் நடிகர், மாடல், பாடகர் ஆகியோர் உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

கே-பாப் நட்சத்திரமாக மாறுவதற்கு, பெரும்பாலான இளைஞர்கள் கடினமான பயிற்சிக் காலத்தை கடக்க வேண்டும் , இதனால் அவர்கள் பல ஆண்டுகளுக்கு தங்கள் நண்பர்கள், அன்புக்கு உரியவர்களின் தொடர்புகளை பெரிதும் இழக்க நேரிடுகிறது.

மூன்பினை பொறுத்தவரை, அவர் தனது 11வது வயதிலே பிரபல கொரிய தொடரான ​​’Boys are better than flowers’ இல் நடிகராக இருந்தபோதிலும், ஆஸ்ட்ரோவில் உறுப்பினராக அறிமுகமாகும் முன் அவருக்கு எட்டு வருட பயிற்சி தேவைப்பட்டது.

அவரது சகோதரி மூன் சுவா, கே-பாப் இசைக்குழுவான பில்லியில் சேர 12 ஆண்டுகள் ஆனது. பல கடினமான சுற்றுகளுக்குப் பிறகு, குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டுமே மேடைக்கு வருகிறார்கள்.

‘அடிமை ஒப்பந்தம்’

தீவிர ரசிகர் கலாசாரம் மற்றும் டேலண்ட் நிறுவனங்கள் ஆகிய இரண்டும் இந்த பாப் பாடகர்களை பெரிதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. இதனால் இந்த பாடகர்கள் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்று ஸ்வார்ட்ஸ் கூறுகிறார்.

சமீபகாலம் வரை, கலைஞர்கள் மத்தியில் ‘அடிமை ஒப்பந்தங்கள்‘ என்று அழைக்கப்படும் ஒப்பந்தங்கள் மூலமாக இந்த பாடகர்கள் சிக்கி சிரமபடுவது தொடர்ந்தது. இந்த ஒப்பந்தங்கள் மூலமாக மிக நீண்ட காலத்திற்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்காக மட்டுமே நீங்கள் வேலை செய்ய வேண்டும், அதுவும் மிகக்குறைவான ஊதியத்துடன். மேலும் உங்களின் தனிப்பட்ட நேரம், தேர்வுகளில் இந்த நிறுவனத்தின் தலையீடு இருக்கும்.

சில K-pop நட்சத்திரங்கள் அண்மையில் நியாயமற்ற அடிமை ஒப்பந்தங்களை மீற அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் வெற்றி பெற்றிருந்தாலும், இரு தரப்பினருக்கும் இடையே இன்னும் முழுமையாக மாற்றம் நடக்கவில்லை என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

"கே-பாப் நட்சத்திரங்கள் அதிக கட்டுப்பாட்டில் உள்ளனர்," என்று ஸ்வார்ட்ஸ் கூறுகிறார்.

" சில விஷயங்கள் மாறி விட்டன, ஆயினும் அவை மேம்பட்டன என்று என்னால் சொல்ல முடியாது."

சமூக ஊடக கண்காணிப்பு

மேலும் நாட்டில் உள்ள தீவிர சமூக ஊடக நடவடிக்கையால், ரசிகர்களின் உற்சாகம் சில சமயங்களில் இரட்டை முனை கொண்ட வாளாக இருக்கலாம்.

"கே-பாப் நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவிலும் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள். சிகை அலங்காரங்கள் குறித்து கருத்து தெரிவிக்கிறார்கள்," என்று ஸ்வார்ட்ஸ் விளக்குகிறார்.

"கலைஞர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் பூதக்கண்ணாடி அணிந்து ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள்."

கே-பாப் கலைஞர்கள் அறிமுகமானவுடன், தங்கள் ரசிகர்களால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகத்தாலும் கண்காணிப்புக்கு உள்ளாகிறார்கள். தென் கொரியாவில், பிரபலமாக இருப்பது என்பது பொது வாழ்வில் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதாகும்.

உதாரணமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, நாட்டில் ஒரு பிரபலம் செய்யக்கூடிய மிக மோசமான குற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஒரு செயல் அந்த கலைஞரின் வாழ்க்கையை எளிதில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.

22 வயதான பிரபல நடிகை கிம் சே-ரோன், தென் கொரிய மக்களால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார். அவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியபோது அந்த கார் விபத்துக்குள்ளானது.

"மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தென் கொரிய பிரபலங்களுக்கு கடுமையான ஒழுக்கம் தரநிலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது," என்று கொரிய பாப் கலாசார விமர்சகர் ஹா ஜே-குன் கூறுகிறார்.

ஒரு பிரபலம் 'கண்ணியம்' என கருதப்படுவதில் இருந்து சற்று விலகி நடந்து கொண்டால், பொதுமக்களால் ஆன்லைன் வசைவுகளுக்கு உள்ளாகின்றனர்.

இது போன்ற வசைவுகளை அவர்களால் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் தென் கொரிய சமூகத்தில் வேரூன்றி இருக்கும் கருத்துருவாக்கமாக இந்த பிரபலங்களின் ஒழுக்கம் என்ற கருத்து இருக்கிறது.

சமூகத்தின் அழுத்தம்

பிரபலமாக இருப்பவருக்கு, மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2017ஆம் ஆண்டு பிபிசியின் கொரிய சேவைக்கு அளித்த பேட்டியில், பல மனநல பிரச்னைகள் உள்ளவராக கண்டறியப்பட்ட ராப் ஸ்டார் ஸ்விங்ஸ், அதனால் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார்.

"இது நிர்வாணமாக நடப்பது போன்றது" என்று அவர் கூறினார்.

"நமக்கு என்ன பிரச்னை என்பது தெரியாத பலர், இவனுக்கு உடல்நிலை சரியில்லாத போது எப்படி மேடையேறி பாட முடியும் என்று விமர்சிப்பார்கள்," என்று ஸ்விங்ஸ் கூறினார்.

கலைஞர்களுக்கு இது போன்ற அழுத்தங்கள் இருக்கும் என கொரிய பொழுதுபோக்கு துறைக்கு நன்றாக தெரியும். இதிலிருந்து விடுபட சில கே-பாப் நட்சத்திரங்கள் மிக நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்டு காணாமல் போய் விடுவார்கள்.

கொரிய பெண் கலைக்குழுவான ட்வைஸின் உறுப்பினரான ஜியோங்யோன், 2020இல் தனக்கு ஏற்பட்ட மனநல பிரச்னை, கழுத்து வலி காரணமாக பல மாத இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் மீண்டும் மேடை ஏறினார்.

2019, 2020 ஆகிய ஆண்டுகளில் உடல்நலத்தை காரணம் காட்டி மூன்பின்னும் சில காலம் இடைவெளி எடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்கும் வழக்கத்தால் மோசமான விளைவுகள் ஏற்படுவதை அறிந்து, தென் கொரியாவின் மிகப்பெரிய தேடுபொறியான நேவர், 2020ஆம் ஆண்டு தனது பொழுதுபோக்கு பக்கத்தில் கமென்ட் செய்யும் வசதியை நிறுத்தியது.

"தென் கொரிய கே-பாப் கலைஞர்கள் மீது அளவு கடந்த அன்பை கொண்டு இருக்கும் இந்த ரசிகர்கள், அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பூதக்கண்ணாடி அணிந்து பார்க்கும் ஒரு தீய சுழற்சி முறையை உருவாக்கி இருக்கின்றனர்," என்கிறார் ஸ்வார்ட்ஸ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: