You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செய்தியாளரின் கேள்வியால் நடிகை கௌரி கிஷன் கோபம்: அதர்ஸ் பட ஊடக சந்திப்பில் என்ன நடந்தது?
ஒரு திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது, அந்தப் படத்தின் கதாநாயகியான கௌரி கிஷன் தனது எடை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு கோபமாக பதிலளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, "அந்த செய்தியாளர் சந்திப்பில் அவருக்கு ஆதரவாக வெளிப்படையாக யாரும் குரல் கொடுக்காத போதும், அவர் துணிச்சலாக அந்த நிலைமையைக் கையாண்டார்" என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை கௌரி கிஷன், புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் 'அதர்ஸ்' (others) என்ற திரைப்படம் இன்று (நவம்பர் 7) வெளியானது.
இந்தத் திரைப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்தச் சந்திப்பின்போது பத்திரிகையாளர் கார்த்திக்கும் நடிகை கௌரி கிஷனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த சந்திப்புக்கு முன்பாக இந்த திரைப்படம் குறித்த மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, "கதாநாயகியின் எடை எவ்வளவு?" என்று கதாநாயகனிடம் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் கேட்டுள்ளார்.
அதே நபர், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குநரிடம் அதேபோன்ற மற்றொரு கேள்வியை எழுப்பினார்.
அப்போது உடனிருந்த நடிகை கௌரி கிஷன், "நீங்கள் தானே எனது எடை என்ன என்று கேட்டது?" என்றார்.
அதற்கு முதல் வரிசையில் இருந்த அந்த பத்திரிகையாளர், "ஆமாம். நான் கேட்டதில் என்ன தவறு" என்று பதிலளித்தார்.
"என்ன தவறா? நீங்கள் என் எடையை கேட்டுள்ளீர்கள், உங்கள் எடை என்ன? கூறுகிறீர்களா?" என்று கௌரி கிஷன் கேள்வி எழுப்பினார்
இதற்கு மீண்டும் பதிலளித்த அந்த பத்திரிக்கையாளர் தான் கேட்ட கேள்வியில் தவறு இல்லை என்று கூறி குரலை உயர்த்திக் கோபமாகப் பேசினார்.
'என்ன சம்பந்தம் உள்ளது?'
அப்போது கௌரி கிஷன், "கதாநாயகியின் எடை என்ன என்று கேட்பது மரியாதைக் குறைவான கேள்வி" என்றார்.
"இந்தக் கேள்விக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது? எனது கதாபாத்திரத்தைப் பற்றியோ, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதைப் பற்றியோ ஒரு கேள்வியும் கேட்கப்படவில்லை. எனது எடை என்னவென்று தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? இதே கேள்வியை ஒரு கதாநாயகனிடம் கேட்பீர்களா?" என்று காட்டமாகப் பேசினார் கௌரி கிஷன்.
"ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உடல்வாகு உள்ளது. நான் எனது திறமை பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நான் இதுவரை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களிலேயே நடித்து வந்துள்ளேன்" என்று பதிலளித்தார்.
அந்தச் சந்திப்பில் இருந்த மற்றொருவர் அந்த கேள்வி சாதாரணமாகக் கேட்கப்பட்டது என்ற தொனியில் பேச, கௌரி கிஷன், "எனக்கு அதில் எந்த நகைச்சுவையும் தெரியவில்லை, உருவ கேலியை (body shaming) இயல்பான செயலாக மாற்றாதீர்கள்" என்று கண்டித்தார்.
மேலும் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அந்த அரங்கில் தான் ஒருவர் மட்டுமே பெண் என்றும், தன்னை அவர் குறிவைத்துப் பேசுகிறார் என்றும் கௌரி கிஷன் குற்றம் சாட்டினார்.
கௌரி கிஷன் மற்றும் பத்திரிகையாளருக்கு இடையிலான வாக்குவாதம் குறித்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதும், அது குறித்த கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
சினிமாவில் பெண்கள் எப்படி சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும், சினிமா துறையில் பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்தும் விவாதங்கள் ஆன்லைனில் நடைபெற்றன.
"கௌரி சிறந்த செயலைச் செய்துள்ளார். மரியாதையற்ற, தேவையற்ற கேள்வியைச் சுட்டிக்காட்டியதும், உடனே கத்தலும் கூச்சலும் எழும். அவரைப் போன்ற இளம் வயதிலான ஒருவர் தாம் சொல்ல வந்த கருத்தில் நிலையாக இருந்து பேசினார் என்பது பெருமையாக உள்ளது. எந்த ஆண் நடிகரிடமும் அவரது எடை என்ன என்ற கேள்வி கேட்கப்படுவதில்லை" என்று பாடகி சின்மயி பதிவிட்டுள்ளார்.
மன்னிப்பு கேட்ட கதாநாயகன்
பத்திரிகையாளர் சந்திப்பின்போது அதே மேடையில் அருகில் அமர்ந்திருந்த படத்தின் கதாநாயகனும், இயக்குநரும் அமைதியாக இருந்தது குறித்தும் ஆன்லைனில் விமர்சிக்கப்பட்டது.
படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவன் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தனது எக்ஸ் பக்கத்தில், "நான் அமைதியாக இருந்ததால், யாருடைய உடலையும் கேலி செய்வதை நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. எதிர்பாராமல் நடந்ததால் நான் உறைந்துவிட்டேன் – இது எனது முதல் படம். நான் இன்னும் விரைவாகத் தலையிட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.
அவர் அதை எதிர்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. யாருமே எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யாராக இருந்தாலும், மரியாதை கொடுக்கப்பட வேண்டும். நான் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
கௌரி கிஷன் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர். தமிழில் '96' திரைப்படத்தில் இளம் வயது ஜானுவின் (த்ரிஷா) கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார்.
பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
அந்த பத்திரிக்கையாளர் & யூட்யூபரின் செயல்பாட்டைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "உடல் எடையை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு கேள்வி கேட்பது அநாகரிகமானது, அருவருக்கத்தக்கது. கௌரி கிஷன் தனது எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும் கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக்கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூட்யூபரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்." என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கூறியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு