'சில மாதங்களில் நிச்சயதார்த்தம்' – ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த 27 வயது விமானப் பணிப்பெண்

காணொளிக் குறிப்பு, "ரோஷ்னியை ஒருபோதும் மறக்க முடியாது" - ஆமதாபாத் விபத்தில் உயிரிழந்த பனிப்பெண்
'சில மாதங்களில் நிச்சயதார்த்தம்' – ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த 27 வயது விமானப் பணிப்பெண்

ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க மீதமிருந்த 241 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில், மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள டோம்பிவிலி (Dombivli) நகரில் வசித்து வந்த ஏர் ஹோஸ்டஸ் ரோஷ்னியும் ஒருவர்.

ரோஷ்னிக்கு திருமணம் முடிவாகி இருந்தது. அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்துகொண்டிருந்தன. ஆனால் திடீரென எல்லாம் ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரோஷ்னி சோங்ஹருக்கு, ஏர் ஹோஸ்டஸாக வேண்டும் என்ற கனவு இருந்தது.

ரோஷ்னி உறுதியுடன் கடுமையாக உழைத்து அந்த கனவை நனவாக்கினார். அவரது இன்ஸ்கிராம் கணக்கே அதைப் பிரதிபலிக்கிறது. ஆனால், ஆமதாபாத் விமான விபத்தில் ரோஷ்னி உயிரிழந்தார். விபத்து பற்றிய செய்தி வந்தவுடன் அவரது தாயார் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

"ரோஷ்னியின் அம்மாவிடம் முழு உண்மையையும் இதுவரை சொல்லவில்லை. அவர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார். சிலவற்றை இப்போதும் மறைத்துக்கொண்டு இருக்கிறோம். தேடுதல் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ரோஷ்னி கிடைத்துவிடுவாள் என்று கூறி சமாதானப்படுத்த முயற்சி செய்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, அவரிடம் பொய் சொல்ல வேண்டியிருக்கிறது." என்கிறார் ரோஷ்னியின் மாமாவான தத்தா சோங்ஹரே.

"வியாழக்கிழமை மதியம் 3:30 மணி முதல், ரோஷ்னியுடன் கழித்த ஒவ்வொரு தருணத்தையும் திரும்ப நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அவரைப் பற்றிப் பேசும்போதே உடலெல்லாம் சிலிர்க்கிறது. அவர் அப்படிப்பட்ட ஒரு நபர். அவருடன் யாரேனும் பழகியிருந்தால், அவர்களால் ரோஷ்னியை ஒருபோதும் மறக்க முடியாது. அவரிடம் தனித்துவமான ஒரு இயல்பு இருந்தது. இனி அதை மிஸ் செய்வோம்." என்று தெரிவித்தார் ரோஷ்னியின் மாமா பிரவின்.

மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால், 27 வயதான ரோஷ்னிக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணம் முடிவாகி நிச்சயதார்த்தத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

"ரோஷ்னிக்கு திருமணம் முடிவாகி இருந்தது.. அதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்துகொண்டிருந்தன. மாப்பிள்ளையையும் எங்களுக்குப் பிடித்திருந்தது. அவரின் குடும்பமும் நல்ல குடும்பமாக இருந்தது. அவர் வெளிநாட்டில் இருந்தார். தீபாவளிக்குப் பிறகு இங்கு வருவதாக இருந்தது. அப்போது திருமணம் நிச்சயம் செய்துவிட்டு, தொடர்ந்து பிப்ரவரி அல்லது மார்ச்சில் திருமணம் செய்யத் திட்டமிட்டு இருந்தோம். எதிர்பாராத விதமாக இது நடந்துவிட்டது." என்றார் தத்தா சோங்ஹரே,

ரோஷ்னியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பெயர் 'Sky Loves Her' என்பதாகும். வானில் உயரப் பறந்து உலகம் முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்ற அவரின் கனவு, இப்போது அவர் உயிரிழந்ததால் முடிவுக்கு வந்துள்ளது.

Reporter – Dipali Jagtap

Camera – Shahid Shaikh

Edit – Arvind Parekar

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு