சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" எனக் கூறினார்.

உள்ளூர் நிர்வாகம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்களை Gen Z தலைமுறை என குறிப்பிடும் போராட்டக்காரர்கள் ஊழல் குறித்தும் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர்.

இளைஞர்களின் போராட்டம்

காத்மாண்டுவில் உள்ள சிங்கா துர்பாரில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். பின் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர்.

"சில போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முயன்றதாகவும், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்" என பிபிசி செய்தியாளர் கேஷவ் கொய்ரலா கூறுகிறார்.

ராஷ்டிரபதி பவன், ஷீதல் நிவாஸ், நாராயண் தர்பார் அருங்காட்சியகம், பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காமல், தடை உத்தரவுகளை மீறுவதாக செய்தித்தொடர்பாளர் கூறுகிறார்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதும், தெருக்களில் நேபாள ராணுவம் குவிக்கப்பட்டது. நேபாள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான துணை ஜெனரல் ராஜாராம் பேட்னெட், "எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், அமைதியை நிலைநாட்டுவதற்காக சிறிய ராணுவ படை அனுப்பப்பட்டது." எனக் கூறினார்.

சில போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டதாகவும் அதில் காயமடைந்த பலரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

நேபாளத்தில் இருந்து கிடைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் திரளான போராட்டக்காரர்கள் காணப்படுகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஒருவர், "இங்கு நிலநடுக்கத்திற்கான அவசியம் இல்லை. தினமும் ஊழலால் நேபாளம் நடுங்கிக்கொண்டுதான் உள்ளது" என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தியிருந்தார்.

இளைஞர்கள் பலரும் ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் அரசாட்சியை நிலைநாட்ட ஓர் போராட்டம் நடந்தது. அப்போதும் போராட்டக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.

சமூக வலைதளம் மீதான தடை

கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களும் இதில் அடங்கும்.

நாட்டின் சட்டத்திற்கு இணங்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.

சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நிபந்தனைகளை பூர்த்தி செய்துகொண்டதால் அதற்கு தடை விதிக்கப்படவில்லை.

நேபாளத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அளவிலான மக்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த சமூக வலைதளங்களின் தடையால் வெளிநாட்டில் வசிக்கும் நேபாள குடிமக்கள் தங்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிக் டாக் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள்

சமூக வலைதளங்களின் தடைக்குப் பிறகு இளைஞர்கள் போராட்டத்திற்கு ஒன்று திரண்டுள்ளனர்.

தற்போது நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் டிக் டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்களை போராட்டத்திற்கு அழைத்துள்ளனர்.

டிக் டாக்கில் 'நெப்போ பேபி' என்ற வார்தையும் ட்ரண்டில் உள்ளது. அதில் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் அரசியல்வாதிகளால் அவர்களின் குழந்தைகள்தான் பயனடைகிறார்கள் ஆனால் நாட்டிற்கு அவர்கள் வேலை செய்வதில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது.

பல வீடியோக்களில் நோபாளத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வசதியாக வாழும் தலைவர்களையும் ஒப்பிட்டுள்ளனர்.

கடந்த வியாழன் அன்று நேபாள அரசு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. அப்போதில் இருந்து இளைஞர்கள் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு

காத்மாண்டு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை முதலே காத்மாண்டு மற்றும் பல்வேறு நகரில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக போலீசாரின் செய்தித் தொடர்பாளர் பினோத் கிமிரே தெரிவித்தார்.

"காத்மாண்டு மட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் போராடி வருகின்றனர். காவல்துறை இவர்களை கண்காணித்து வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திட்டமிட்டு அனைத்து இடங்களிலும் படைகளை குவித்துள்ளோம்" என கிமிரே பிபிசி நேபாளத்திடம் கூறியுள்ளார்.

போராட்டம் ஏன்?

அந்நாட்டு அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் பதிவு செய்யாததால் X, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து டிக் டாக் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் ஒன்று திரண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனால் இதனை Gen-Z போராட்டம் எனக் குறிப்பிடுகின்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு