செளதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேச இளைஞர் பற்றி இதுவரை தெரிந்தது என்ன?

பட மூலாதாரம், Family handout
- எழுதியவர், ரகிப் ஹஸ்னத்
- பதவி, பிபிசி வங்க சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
சௌதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இரண்டு பேர், 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பின் நகலுக்காக அரசு தற்போது காத்திருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரண்டு வங்கதேசக் குடிமக்களில் ஒருவரின் குடும்பத்தினர், அவர் ஒரு வாரத்துக்கு முன்புகூட சிறையிலிருந்து தங்களுடன் தொலைபேசியில் பேசியதாக பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தனர். அப்போது, தனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்பதற்கான எந்த அறிகுறியையும் அவர் வெளிப்படுத்தவில்லை என கூறினர்.
கடந்த புதன்கிழமை, வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஓர் ஆணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக செளதி அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இருப்பினும், சௌதி அரேபிய அரசோ வங்கதேச அரசோ இதுவரை அவர்களின் அடையாளங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இளைஞரின் தாயார் ரஹிமா பேகம், கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது மகன் செளதி அரேபியச் சிறையிலிருந்து குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாக பிபிசி வங்கதேச சேவையிடம் தெரிவித்தார்.
"அவன் சிறையில் இருப்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், இப்படியொரு சம்பவம் நடக்கப்போகிறது என்று என் மகன்கூட எங்களிடம் சொல்லவில்லை" என்று கண்ணீருடன் அவர் கூறினார்.
"புதன்கிழமை மாலை செய்தி வெளியான உடனேயே, மற்றவர்கள் மூலமாகத்தான் இதைப் பற்றித் தெரிந்துகொண்டோம். இந்தச் செய்தியைக் கேட்ட என் மகனின் அத்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்" என்றும் அவர் தெரிவித்தார்.
தனது மகனின் உடலை விரைவாகத் தாயகத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், இந்தச் சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிராமன்பரியா துணை ஆணையர் முகமது அபுசைத், சௌதி அரேபியாவில் மரண தண்டனைநிறைவேற்றப்பட்ட இருவரில் அந்த இளைஞரும் ஒருவர் என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வத் தகவல் இதுவரை அரசுக்குக் கிடைக்கவில்லை என்று பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.
மெக்காவில் உள்ள மசூதியில் 'தகாத செயல்களில்' ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு வங்கதேசக் குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து விளக்கம் பெறுவதற்காக, டாக்காவில் உள்ள செளதி அரேபியத் தூதர் அப்துல்லா பின் ஜாஃபர் எச். பின் அபியாவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்துப் பேசியது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் அந்த நபரின் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவரிடமிருந்து பிபிசி வங்க சேவைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் குடும்பத்தினரை பிபிசி தொடர்புகொண்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நபர் தனது மகன்தான் என்பதை அவரது தாயார் உறுதிப்படுத்தினார். மகனின் உடலை வங்கதேசத்துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
"சுமார் மூன்று ஆண்டுகளாக என் மகனின் முகத்தை நான் பார்க்கவில்லை. கடைசியாக ஒருமுறையாவது அவனது முகத்தைப் பார்க்க விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், HASSAN AMMAR/AFP via Getty Images
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நபரை பற்றி என்னென்ன தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன?
அந்த நபரின் தாயார் அளித்த தகவலின்படி, அவரது மகன் மதரஸாவில் படிப்பை முடித்துவிட்டு, இடைத்தரகர் மூலம் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி சௌதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார்.
இரண்டு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான அவர், ரியாத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தார்.
தகாத செயல்களில்' ஈடுபட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட மசூதியிலும் அவர் துப்புரவுப் பணியாளராக வேலை செய்ததாகத் தெரிகிறது.
"அவர் அங்கு சென்ற ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு, என் மகன் எங்களைத் தொடர்புகொண்டார். 'என்னைச் சிறையில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்துவிடுவார்கள்' என்று நினைப்பதாக கூறினார். கடந்த ஞாயிற்றுக்கிழமைகூட நாங்கள் பேசினோம். இந்தச் சம்பவம் குறித்த தகவலை புதன்கிழமை அறிந்தேன்" என்று அந்த நபரின் தாயார் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.
அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்று அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்தாரா என்று கேட்கப்பட்டபோது, "இல்லை, அவர் எதுவும் சொல்லவில்லை" என்று அவரது தாயார் கூறினார்.
இருப்பினும், மற்றொரு குடும்ப உறுப்பினர், அந்த நபர் இறுதியில் அந்தப் பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாகத் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததாகக் கூறினார்.
ஒருநாள் வேலைக்குச் சென்ற பிறகு, காவல்துறை வாகனம் ஒன்று வந்து தன்னை அழைத்துச் சென்றதாக மகன் தன்னிடம் கூறியதாக அவரது தாயார் தெரிவித்தார்.

சிறைக்குச் சென்ற பிறகு, கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் அவர் சிறிது நேரம் தொலைபேசியில் பேசுவார். அப்போது, அந்தப் பெண்ணுடன் காதல் உறவில் இருப்பதாகக் கூறினார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு, ஞாயிற்றுக்கிழமைதான் அவர் குடும்பத்தினருடன் கடைசியாகப் பேசினார்.
"ஆரம்பத்தில் மொழிப் பிரச்னை காரணமாக என் மகனால் எதையும் யாரிடமும் தெளிவாக விளக்க முடியவில்லை. நாங்கள் இடைத்தரகரை அணுகினோம். செளதி அரேபியாவுக்குச் சென்றுவிட்ட பிறகு, அவரைப் பற்றிய எந்த விவகாரத்துக்கும் தான் பொறுப்பல்ல என்று அந்த இடைத்தரகர் கூறினார்" என்றார் அந்த நபரின் தாயார்.
சௌதி அரேபியாவில் தனது மகன் சிறைக்குச் சென்ற பிறகு, உள்ளூர் நிர்வாகத்தினரைத் தாங்கள் தொடர்புகொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், அந்த நபருக்கு சுமார் 22 வயது இருக்கும் என்று உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அவரது தந்தை பிறருக்குச் சொந்தமான நிலங்களில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தற்போது வயது முதிர்வு காரணமாக அவரால் வேலை செய்ய முடியவில்லை.
குடும்பத்தின் பொருளாதாரச் சிரமங்கள் காரணமாக, ஓர் இடைத்தரகர் மூலம் அந்த இளைஞர் வெளிநாட்டுக்கு சென்றார். ஆனால், செளதி அரேபியாவுக்குச் சென்ற ஆறு மாதங்களிலேயே, 2023-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், AFP
டாக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் ஷமா ஒபைத், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆண் மற்றும் பெண் இருவரும் 2023-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள் என்ற தகவல் அரசுக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
"கூடுதல் தகவல்களைப் பெறுவதற்காகக் கடிதம் எழுதியுள்ளோம். நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு விரிவான தகவல்களை வழங்குவோம். செளதி அரேபியாதான் நமது புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் செல்லும் முக்கிய நாடாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாதகமற்ற சூழ்நிலைகளையும் தாண்டி, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத் தொழிலாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அங்கு சென்றுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதும் நமது பொறுப்பாகும்" என்று அவர் கூறினார்.
மேலும், "செளதி அரேபியாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சிறைகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். செளதி அரேபிய அரசு அவ்வப்போது அவர்களின் அடையாள விவரங்கள் அடங்கிய பட்டியல்களை அனுப்புகிறது. யார், எப்போது, எந்தச் சூழலில் கைது செய்யப்பட்டார்கள், தற்போது சிறையில் உள்ளார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதன் மூலம் எங்களுக்குக் கிடைக்கின்றன.
இந்த இருவரின் பெயர்களும் அந்தப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்து வருகிறோம். அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சம்பவம் 2023-ஆம் ஆண்டு நடந்தது என்பதும், அவர்கள் அதே ஆண்டில் கைது செய்யப்பட்டார்கள் என்பதும்தான் எங்களுக்குத் தெரியும்" என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும், பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேசச் சட்ட நிபுணர் ரெஹான் ரஷீத், வெளியுறவுத் துறை இணையமைச்சரின் இந்தக் கருத்துகளே, அந்த இருவரும் கைது செய்யப்பட்டதைப் பற்றி வங்கதேச வெளியுறவு அமைச்சகத்துக்கு கடந்த மூன்று ஆண்டுகளாகத் தெரிந்திருந்ததைத் தெளிவுபடுத்துவதாகக் கூறுகிறார்.
இதுகுறித்து பிபிசி வங்க சேவையிடம் பேசிய அவர், "ஒருவர் கைது செய்யப்பட்டவுடன், அதுகுறித்த தகவல்களைச் சேகரித்து உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது தூதரகத்தின் பொறுப்பாகும். மூன்று ஆண்டுகளாக அந்த நபரின் குடும்பத்தினரைத் தொழிலாளர் நல அமைச்சகம் தொடர்புகொள்ளவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் குறித்த பட்டியல் கிடைத்தும் தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்படும் தருணத்திலிருந்தே அவருக்குத் தூதரக உதவியைப் பெறுவதற்கான உரிமை தொடங்குகிறது. அவருக்கும் தூதரக உதவியைப் பெறும் உரிமை இருந்தது. அங்கு வங்கதேசக் குடிமக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது. அவர்கள் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்குச் சட்ட உதவி தேவைப்பட்டது" என்றார்.
1963-ஆம் ஆண்டின் தூதரக உறவுகள் தொடர்பான வியன்னா உடன்படிக்கையின் 36-ஆவது பிரிவின்படி, வெளிநாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டாலோ, சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டாலோ, தனது நாட்டுத் தூதரகத்தின் உதவியைக் கோர அவருக்கு உரிமை உண்டு என்று ரஷீத் கூறினார்.
"சில தொழிலாளர்களுக்குத் தங்களுக்குள்ள உரிமைகள் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அவர்களுக்கு அந்த உரிமைகள் குறித்துத் தெரிவிக்க வேண்டியது செளதி அரேபியாவின் பொறுப்பு. அதே நேரத்தில், வங்கதேசத் தூதரகமும் இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

































