You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் ரூ.2,800 கோடி ஜாக்பாட் 'வென்ற' நபருக்கு பரிசு தர மறுத்த லாட்டரி நிறுவனம் - என்ன காரணம்?
அமெரிக்காவில் ஒருவருக்கு 2,800 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை லாட்டரியில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லாட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது.
இதனால், லாட்டரியில் ‘வென்ற’ நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அந்த லாட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 2023 இல், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லாட்டரியை வாங்கி வைத்திருந்தார். அந்த லாட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது.
அந்தத் தருணம் குறித்து விவரித்த ஜான் சீக்ஸ்,“பவர்பாலின் வெற்றி எண்களுடன் நான் வைத்திருந்த டிக்கெட் எண்கள் பொருந்தியதை முதன் முதலில் பார்த்த போது நான் உணர்ச்சியற்றுப் போனேன்,” என்றார்.
லாட்டரி நிறுவன முகவர் என்ன சொன்னார்?
ஆனால், அவர் அந்த லாட்டரியை அமெரிக்காவில் லாட்டரி மற்றும் கேமிங் அலுவலகத்தில் கொடுத்தபோது, அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.
“பணத்தைப் பெற்றுத் தரும் முகவர்களில் ஒருவர், என்னுடைய லாட்டரியால் எந்த நன்மையும் இல்லை என்றும், அதனை குப்பையில் வீசுமாறும் என்னிடம் சொன்னார்” என்றார் ஜான் சீக்ஸ்.
ஆனால், ஜான் சீக்ஸ் அந்த லாட்டரியை பத்திரமாக வைத்துக்கொண்டு, ஒரு வழக்கறிஞரை நாடியுள்ளார்.
ஆம், அவர் தற்போது தனக்கு ஏற்பட்ட பாதிப்புற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கில் தான் வெற்றி பெற்ற 2,800 கோடி ரூபாயுடன், அதனை தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டியுடன் தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் லாட்டரி நிறுவனம் என்ன சொன்னது?
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின்படி, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பவர்பால் மற்றும் லாட்டரி ஒப்பந்ததாரரான டெளடி என்டர்பிரைஸஸ்(Taoti Enterprises), தொழில்நுட்ப பிழையால் இந்தக் குழப்பம் நடந்ததாக் கூறியுள்ளனர்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணம் ஒன்றில், டெளடி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஜான் லாட்டரி வாங்கிய தினமான ஜனவரி 6. 2023 அன்று, தங்களின் நிறுவனத்தின் இணையதள தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்து கொண்டிருந்ததாக அந்த ஆவணத்தில் கூறியுள்ளனர்.
அன்று, ஜான் வாங்கிய லாட்டரி எண்களுடன் பொருந்திய எண்கள், நீதிமன்றத்தின் ஆவணத்தின்படி, பவர்பால் எண்களின் தொகுப்பில் இருந்து பரிசோதனைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட எண்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த எண்கள் ஜனவரி 9 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் இருந்தன.
பவர்பால் நிறுவனமோ அந்த நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அந்த நிறுவனத்தின் ஊழியர் தாவோட்டியோ, பிபிசியின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
ஒப்பந்த மீறல், அலட்சியம், மன உளைச்சலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட எட்டு தனித்தனி பிரிவுகளில் ஜான் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஜானின் வழக்கறிஞர் ரிச்சர்ட் எவன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில், வெற்றி பெற்ற எண்கள் ஜான் எண்களுடன் பொருந்தியதால், அவருக்கு முழு பரிசுத் தொகையும் பெறுவதற்கான உரிமை உண்டு என்று கூறினார். இல்லையெனில், தவறான லாட்டரி எண்களை வெளியிட்டதற்காக லாட்டரி நிறுவனத்தின் அலட்சியத்தால், ஜான் பாதிக்கப்பட்டுள்ளார்.
"இந்த வழக்கு லாட்டரி நடவடிக்கைகளின் நேர்மை மற்றும் பொறுப்பின்மை பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது." என எவன்ஸ் பிபிசியிடம் கூறினார்.
"இது ஒரு வலைத்தளத்தில் உள்ள எண்களைப் பற்றியது அல்ல; இது வாழ்க்கையை மாற்றும் வாய்ப்புகளை உறுதியளிக்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையைப் பற்றியது. அதேநேரத்தில் இந்த நிறுவனங்களும் அதிக லாபம் ஈட்டுகின்றன," என்று அவர் கூறினார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசுகையில், “நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. லாட்டரியில் வெற்றி பெற்றதால், பரிசுத் தொகை கிடைத்திருந்தால், அது என் வாழ்கையையும், எனது குடும்பத்தின் வாழ்கையையும் மாற்றியிருக்கும்,”என்றார்.
வெற்றி பெற்ற பிறகு, ஒரு ஹோம் டிரஸ்ட் வங்கியைத் திறக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறினார் ஜான்.
ஜான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது மின்னல் தாக்கும் வாய்ப்புள்ளவர்களை விட குறைவு. அதாவது, ஒரு ஆண்டுக்கு 1.22 மில்லியன் மக்களில் ஒருவர் மீது மின்னல் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை மையம் கூறியுள்ளது. ஆனால், சுமார் 292.2 மில்லியன் பேரில் தான் ஜான் சீக்ஸோ அல்லது வேறு யாரோ ஒருவருக்கோ இப்படியான ஜாக்பாட் பரிசை வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)