You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரஷ்யாவை குறிவைத்து சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை நகர்த்துகிறதா அமெரிக்கா?
- எழுதியவர், மாட் பிரேசி
- பதவி, பிபிசி நியூஸ், சஃபோல்க்
பிரிட்டனின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 15 ஆண்டுகளுக்குப் முன் சஃபோல்க் தளத்தில் இருந்து அனைத்து அணு ஆயுதங்களையும் திரும்பப் பெற்றுக் கொண்டது அமெரிக்கா.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை விட பன்மடங்கு சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கான வசதிகள் சஃபோல்க்கின் ஆர்ஏஎப் லேகன்ஹீத் (RAF Lakenheath) தளத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவின் திட்டங்கள்
ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்தில் தற்போது 48வது ஃபைட்டர் விங் எனும் அமெரிக்க விமானப்படைப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவு லிபர்ட்டி விங் என்றும் அழைக்கப்படுகிறது. F-35A லைட்னிங் II எனும் அதிநவீன போர் விமானங்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
ஐக்கிய அமெரிக்க விமானப்படை (United States Air Force- யுஎஸ்ஏஎப்) அறிக்கைப்படி, போர்க்களத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறுகிய தூர இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட ஆயுதமான B61-12 தெர்மோநியூக்ளியர் குண்டை இந்த போர் விமானங்கள் மூலம் எடுத்துச் செல்ல வெற்றிகரமாக சோதனைகள் செய்யப்பட்டன.
ஆர்ஏஎப் லேகன்ஹீத்தின் 'எதிர்கால அணுசக்தி திட்டத்திற்கு' தேவையான பாதுகாப்பான தங்குமிடங்களை கட்டுவதற்கான ஒப்பந்தம் குறித்து விவரிக்கும் ஆவணங்கள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் வெளியிடப்பட்டன. பின்னர் அவை திரும்பப் பெறப்பட்டன .
இந்த விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் அவை.
கூடுதலாக, அமெரிக்க இராணுவத் துறை பட்ஜெட் ஆவணத்தின்படி , இந்த சஃபோல்க் தளத்தின் அடித்தளத்தில் 'ஷுரிட்டி டார்மிட்டரி' (surety dormitory) எனப்படும் வசதியை உருவாக்க லட்சக்கணக்கான டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அணு ஆயுதங்களுக்கான சேமிப்பு வசதிகள் என கூறப்படுகிறது.
ஆர்ஏஎப் தளம் 1941இல் லேகன்ஹீத்தில் திறக்கப்பட்டு, இரண்டாம் உலகப் போரின் போது செயல்பட்டது.
நேட்டோவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போர் தீவிரமடைந்ததால், அமெரிக்க விமானப்படை 1951இல் தளத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது .
தளத்தில் 4,000 அமெரிக்க இராணுவ வீரர்களும் மேலும் 1,500 பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க சிவிலியன் ஊழியர்களும் உள்ளனர்.
அமெரிக்க அணு ஆயுதங்கள் மீண்டும் பிரிட்டனில் நிலைநிறுத்தப்படுமா?
லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுகள் துறையின் பேராசிரியரான சர் லாரன்ஸ் ஃப்ரீட்மேன், "இந்த திட்டங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கலாம்" என கூறினார்.
"ஒருவேளை ஐரோப்பாவில் உள்ள தளங்களில் இருந்து மற்ற ஆயுதங்கள் அகற்றப்பட்டால், தங்குமிடங்கள் கூடுதல் திறன் கொண்டதாக இருக்கலாம்" என்கிறார் அவர்.
"சேமிப்பு வசதியை உருவாக்குவது ஒரு விஷயம் என்றால், அமெரிக்க ஆயுதங்கள் பிரிட்டனில் இருக்கப் போகிறது என்ற உண்மையை மறைப்பது மற்றொரு விஷயம். எனவே இந்த நடவடிக்கை என்பது நாடுகளுக்கிடையேயான ஆயுதப் போட்டியில் ஏதோ ஒரு பெரிய மாற்றமாக இல்லாமல், ஒரு சாதாரணமான நடவடிக்கையாகவும் கூட இருக்கலாம்" என அவர் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ கூடாது என்ற கொள்கையை நீண்ட காலமாக பிரிட்டன் மற்றும் நேட்டோ கடைபிடித்து வருகிறது.
ரஷ்யாவுக்கு எதிராக பிரிட்டனில் அமெரிக்க அணு ஆயுதங்களா?
"இந்த திட்டங்கள் யுக்ரேனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையவை என்று நான் நினைக்கவில்லை" என்கிறார் சர் லாரன்ஸ்.
"ரஷ்யாவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தின் காரணமாக இது இருக்கலாம்," என்று அவர் கூறினார்.
ஆனால் நேட்டோவின் முன்னாள் மூத்த அதிகாரியான வில்லியம் அல்பர்கி கூறுகையில், "ரஷ்யாவின் நடவடிக்கைகளால் ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வரும் ஆபத்தான அச்சுறுத்தல் சூழலுக்கு இது ஒரு பதிலடி" என்கிறார். இவர் இப்போது சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பெலாரஸில் ரஷ்ய அணு ஆயுத படைகள் நிலைநிறுத்தப்பட்டது, உக்ரைன் மீதான படையெடுப்பு மற்றும் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்கள் பெருமளவில் அதிகரித்தது போன்றவற்றை அவர் மேற்கோள் காட்டினார்.
'இந்த தளம் ரஷ்யாவின் இலக்காக மாறும்'
அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன். அணு ஆயுதங்கள் ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுவதற்கான சாத்தியங்கள் குறித்து குரல் எழுப்பிய முதல் நபர்களில் இவரும ஒருவர்.
"ஒரு தளத்தில் அணு ஆயுதங்கள் இருந்தால், அந்த தளம் ரஷ்யாவுடனான அணுசக்தி மோதலில் இலக்காகக் கூடும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.
"ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருந்தால், பின் அது ஒரு வித்தியாசமான போர் விளையாட்டாக மாறும் என்பதில் சந்தேகமில்லை" என்றும் கிறிஸ்டென்சன் கூறுகிறார்.
ஆனால், "இந்த தளம் இப்போதே ரஷ்யாவின் இலக்காக மாறியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன" என்று அல்பர்கி கூறினார்.
"நான் ஒரு ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த திட்டமிடும் நிபுணராக இருந்தால், இந்த தளத்தை தாக்க முன்பே முடிவு செய்திருப்பேன். நீங்கள் ரஷ்ய தொலைக்காட்சிகளைப் பார்த்தால், பிரிட்டனை பற்றியும் பிரிட்டனைத் தாக்குவது பற்றியும் அதிகம் பேசுகிறார்கள்" என்கிறார் அவர்.
பிரிட்டனுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அங்கீகாரம் அளிப்பார் என்று அல்பர்கி நம்புகிறார்.
மேலும், "அவர் திறமையானவர் என்று சொல்வது மிகையாக இருக்கும். பிரச்னைக்கான தீர்வு இல்லை என்றோ அல்லது பின்விளைவுகள் வராது என நினைத்தாலோ, அவர் இதைச் செய்வார் என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.
அடுத்து என்ன நடக்கும்?
அணு ஆயுதக் குறைப்புக்கான பிரசார அமைப்பு (Campaign for Nuclear Disarmament- சிஎன்டி) ஆர்ஏஎப் லேகன்ஹீத் தளத்திற்கு வெளியே போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தது.
சிஎன்டி பொதுச் செயலாளர் கேட் ஹட்சன் பேசுகையில், "இங்கே அணு ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டால், நாங்கள் அதை அகற்ற வலியுறுத்துவோம்." என்றார்.
'ஷுரிட்டி டார்மிட்டரி' தங்குமிடத்தை கட்டுவது சட்டப்பூர்வமானதா என்பதை ஆராய சட்ட நிறுவனமான லீ டேக்கு (Leigh Day) இந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
வழக்கறிஞர் ரிக்கார்டோ காமா இதுகுறித்து பேசுகையில், "லேகன்ஹீத் தளத்தில் அணுகுண்டுகளை சேமிப்பது குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் விளைவுகளை ஏற்படுத்தாது என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது. ஆனால், அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் விமானப்படை தளத்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதன் சாத்தியமான சுற்றுச்சூழல் விளைவுகளை அவர்கள் புறக்கணித்ததாக வாதிடுகின்றனர் சிஎன்டி அமைப்பினர். அணுசக்தி விபத்து ஏற்படுவதற்கான சாத்தியம் உட்பட" என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)