'கலகத் தலைவன்' சினிமா விமர்சனம்: மு.க.ஸ்டாலின் சொன்னது போல இது ‘நேர்த்தியான’ படமா?

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”. 

நித்தி அகர்வால் கதா நாயகியாகவும், பிக்பாஸில் பங்குபெற்ற ஆரவ் வில்லனாகவும் நடித்திருக்கிறார்கள்.

தடம், தடையறத் தாக்க, மீகான் போன்ற திரைப்படங்களை இயக்கியவரின் படம் என்பதாலும் உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

திரையரங்கில் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே படத்தை குடும்பத்துடன் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக அக்கறையுடன் நேரத்தியான படைப்பை உருவாக்கி இருப்பதாக படக்குழுவினரை பாராட்டியிருந்தார்.

இப்போது படம் வெளியாகி ஊடகங்கள் தங்களுடைய விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.அவற்றின் பார்வையில் இந்தத் படக்குழுவினர் நேர்த்தியான படைப்பை வழங்கியிருக்கிறார்களா என்பதைப் பார்ப்போம்.

‘கலகத் தலைவன்’ கதை என்ன?

பூமி எதிர்நோக்கியிருக்கும் காற்று மாசு என்கிற மிக முக்கியமான பிரச்னையுடன் பெருநிறுவன அரசியலை இந்தப் படத்தின் கருவாக எடுத்திருக்கிறார்கள். விஷில் புளோயர்ஸ் எனப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவோருக்கு ஏற்படும் நெருக்கடிகளைக் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கிறது.

குறைந்த எரிபொருளில் அதிகத் தொலைவு செல்லும் ஒரு வாகனத்தை தயாரிக்கிறது ஒரு பெரு நிறுவனம். அப்படித் தயாரிக்கும்போது ஏற்படும் புகை சுற்றுச் சூழலில் அதிக மாசை உமிழ்கிறது. 

இந்த ரகசியம் செய்திகளில் கசிந்ததும் நிறுவனத்தின் பெயர் கெட்டு, பங்குச் சந்தையில் வீழ்ச்சியடைகிறது. இதை யார் செய்தார்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதுதான் படத்தின் கதை.

வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்யும் திருவாக நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ரகசியம் எப்படி வெளியே தெரிந்தது என்பதை நிறுவனத்தின் சார்பில் கண்டறிந்து அழிக்க முயற்சிக்கும் அர்ஜூன் பாத்திரத்தில் ஆரவ் நடித்திருக்கிறார்.

அர்ஜுனின் விசாரணை முறைகளும் அப்போது கதையில் வெளிப்படும் முடிச்சுகளும் கதையை நகர்த்துகின்றன.

திருவுக்கும் அர்ஜூனுக்கும் இடையே நடக்கும் ஒரு பூனை-எலி ஆட்டமாக இதைக் கருதலாம்.

திரைக்கதை எப்படி இருக்கிறது?

கலகத் தலைவன் திரைக்கதை ஊடகங்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. 

“வெறும் பிரசார பாணியில் இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் திருப்பங்களுடன் கதையைக் கொண்டு சென்ற விதத்தில் படம் கவனம் பெறுகிறது.” என்று கூறியிருக்கிறது இந்து தமிழ் திசை.

சில காட்சிகளில் இயக்குநர் மகிழ் திருமேனியின் சிந்தனை வியக்க வைப்பதாகவும் தினமணி பாராட்டியிருக்கிறது. 

டைம்ஸ் ஆப் இந்தியா - மகிழ் திருமேனியின் எழுத்தைப் பாராட்டியதுடன், “நேர் வரிசையில் கதையைச் சொல்லாமல் நிகழ் காலத்துக்கும் கடந்த காலத்துக்கும் இடையே பயணித்து நாயகனைப் பற்றியும் அவரது நோக்கம் பற்றியும் பார்வையாளர்களை ஊகிக்கும்படி விட்டுவிடுகிறார்” என்று கூறியிருக்கிறது.

வில்லனாக வரும் ஆரவ் சித்திரவதை செய்யும் காட்சிகளில் கண்களை மூடிக் கொள்ளும் அளவுக்கு மிரட்டியிருக்கிறார் என்றும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்துக்கு பலமாக இருப்பதாகவும் தினமணி கூறியிருக்கிறது.

உதயநிதியின் நடிப்பு எப்படி?

நாயகன் உதயநிதி ஸ்டாலின், வில்லன் ஆரவ் ஆகியோரின் நடிப்பு பரவலாக ஊடகங்களில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. 

“மிகைத்தும்போகாமல், வறட்சியுமில்லாமல் கதாபாத்திரத்துக்கு தேவையான மீட்டரில் கச்சிதமாக அமர்கிறது உதயநிதியின் நடிப்பு. பெரிதாக அலட்டிக்கொள்ளாத உடல்மொழி, அளந்து பேசும் வார்த்தைகள் என திருமாறனாக தனது பணியை செவ்வனே செய்திருக்கிறார். அவரைவிட கூடுதல் வெயிட்டை ஏற்றி எதிர்மறை கதாபாத்திரத்தை எழுதியிருக்கும் விதம்தான் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. அந்த வகையில் கட்டுடல், கூரிய பார்வை, கருணையில்லா கண்கள் என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஆரவ்.” என்கிறது இந்து தமிழ் திசை.

“அமைதியான அதேநேரம் மிகவும் இறுக்கமான கதாபாத்திரத்தில் உதயநிதியும், கொலை செய்யவே பிறந்ததை ப்போல கொடூர வில்லனாக பிக்பாஸ் புகழ் ஆரவ்வும் திரையை ஆக்கிரமித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறது தினமணி.

படத்தில் என்ன குறை?

“படத்தின் முதல்பாதி தொய்வாக இருக்கிறது, காட்சிகளை ஊகிக்க முடிகிறது, பாடல்கள் மனதில் நிற்கவில்லை” என விமர்சித்திருக்கிறது தினமணி.

இதே குறையை இந்து தமிழ்திசையும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

“படத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் பயணிக்க, அதன் வேகத்தை காதல் காட்சிகளும், பாடல்களும் வேண்டுமென்றே தணிக்கிறது. மொத்த காதல் சீக்வன்சுகளை நீக்கியிருந்தால் இன்னும் அடர்த்தி கூடியிருக்கும். நாயகியிடம் உதயநிதி சொல்லும் ஹெண்ட்பேக் சைக்காலஜி மட்டும் பார்வையாளர்களிடையே எடுபடுகிறது. மற்றபடி காதல் காட்சிகளும், பாடல்களும் திணிப்பேயன்றி கதையோட்டத்திற்கு பலனிக்கவில்லை.” என்று இந்து தமிழ் திசை தனது விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

“அனைத்து சிசிடிவி காட்சிகளையும் அசால்ட்டாக கைப்பற்றுவது, போன் நம்பர்களை ஹேக் செய்வது, தகவல்களை பிங்கர் டிப்பில் வைத்திருப்பது போன்ற காட்சிகள் செயற்கைத்தனத்துடன் துருத்தி நிற்கின்றன.” என்கிறது இந்து தமிழ்.

“நாயகன் நாயகி காதல் காட்சிகளில் மையக் கதையை விட்டு படம் நழுவிச் செல்வது போல உணவைக்கிறது” என்று டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: