You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன?
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் இருக்கும் பாதுகாப்பு படையின் தலைமையகங்களில் இரண்டு முக்கிய தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒரு பகுதி வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மற்றொன்று யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கரா என்பவர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் விக்ரமசிங்கே யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதியாகவும் உள்ளனர்.
போர்ச்சூழல் காரணமாக 40 வருடங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான ராணுவ மற்றும் காவல்துறை முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
பாதுகாப்புப் படையினரின் முகாம்களினால் பூர்வீக நிலங்களை இழந்த பெருமளவிலான மக்கள் இன்னமும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து அல்லது வெவ்வேறு இடங்களில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பலாலி, காங்கேசன்துறை, பெதுருதுடுவ, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மக்கள் பலரும் தமது நிலங்களை இழந்துள்ளனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வடக்கு மாகாணத்தில் ராணுவத்திடம் எவ்வளவு நிலம் உள்ளது?
போர்ச் சூழலின் போது ராணுவம் வட மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான முகாம்களை நிறுவியது. 2009 ஆம் ஆண்டளவில், வடக்கு மாகாணத்தில் 73,016.50 ஏக்கர் நிலமும், கிழக்கு மாகாணத்தில் 12,236.69 ஏக்கர் நிலமும் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இந்த தகவல்களை ராணுவ பத்திரிகை அலுவலகம் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ராணுவத்தினர் வசம் இருந்த நிலப்பகுதியில் இருந்து தற்போது 63,187.91 ஏக்கர் விடுவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டு 9,828.67 ஏக்கர் நிலம் ராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக மேஜர் ஜெனரல் ரசிக குமாரா பிபிசி சிங்களத்திடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் ராணுவத்தினர் வசமுள்ள நிலங்களில் இருந்து 8772.62 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கொண்டு 3464.07 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவத் தளங்களை அமைப்பதற்காக 2009 ஆம் ஆண்டளவில் வட மாகாணத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களில் 86.54% விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 13.46% விடுவிக்கப்படவுள்ளது.
அதே போன்று கிழக்கு மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு ராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 71.70% விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மேலும் 28.30% நிலம் விடுவிக்கப்பட உள்ளதாக ராணுவச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆயுதப்படைகள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள்
கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் கர்னல் நளீன் ஹேரத் மற்றும் மேலும் சில அதிகாரிகளிடம் பிபிசி சிங்களம் கேள்வி எழுப்பியது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படை செயல்பாடுகளுக்காகவும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கும் நிலம் குறித்து அவர்களிடம் பிபிசி கேட்டது.
"போரின் தொடக்கத்தில் இருந்து முப்படையினருக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இதுவரை பெருமளவிலான நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27,496.72 ஏக்கர் நிலம் ஆயுதப்படைகள் வசம் இருக்கிறது” என்று நளீன் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதப்படை வசம் இருக்கும் நிலங்கள் படிப்படியாக மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வடக்கு மாகாணத்தில் எத்தனை முகாம்கள் அகற்றம்?
கடந்த ஓராண்டில் வடக்கு மாகாணத்தில் இருந்து எத்தனை பாதுகாப்பு படை முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன என வடக்கு மாகாண ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் பிபிசி சிங்களம் கேட்டது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் இருந்து இரண்டு பிரதான பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் நடந்த போது வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதான பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் இயங்கின.
இதுவரை இரண்டு முக்கிய பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. அதன்படி, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகம் என்ற பெயர் நீக்கப்பட்டு, முக்கியமான முகாம்கள் தற்போது வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக எல்லை தம்புள்ளாவில் இருந்து கிளிநொச்சி வழியாக வடக்கே தலைமன்னாரிலிருந்து புல்முடே வரை நீண்டுள்ளது.
இதன் கீழ், வடக்கு மாகாணத்தில் இருந்த தலைமை பாதுகாப்பு படைத் தளபதியின் இரண்டு பதவிகள் நீக்கப்பட்டுள்ளன. போர் காலத்தில் பொதுமக்களின் நிலங்களில் பாதுகாப்புக் காரணங்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பல முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.
"கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் அமைந்திருந்த சிறிய முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.” என்று பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
"யாழ் பலாலி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சொந்தமான சிறிய முகாம்கள் அகற்றப்பட்டு, பொதுமக்களின் நிலங்கள் தற்போது திரும்ப வழங்கப்படுகின்றன.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முகாம்கள் அகற்றப்படுவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறுமா?
பாதுகாப்புப் படையினர் கைவசப்படுத்திய பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்காக ராணுவத்தின் சிறிய முகாம்கள் அகற்றப்பட்டு, அதில் இருந்த பாதுகாப்பு படையினர் பிரதான முகாம்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
"சிறிய முகாம்கள் அகற்றப்பட்டாலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைக்கப்படவில்லை. எந்த ஒரு தீவிரவாத தாக்குதலையும் எதிர்கொள்ள பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தயார் நிலையில் இருக்கின்றனர்.
பாதுகாப்பு பிரச்னையை ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படை முகாம்களை அகற்றுவது நல்லதா?
வட மாகாணத்தில் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான முகாம்களை அகற்றி, ராணுவத்தினரை வெளியேற்றுவது சரி வருமா என்று வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த என்.மனோகரன் என்பவரிடம் பிபிசி சிங்களம் கேள்வி எழுப்பியது.
"இப்போது போர் இல்லை. போர் நிறைவடைந்து சுமார் 15 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே தேவையற்ற பாதுகாப்பு முகாம்களை அகற்றுவது நல்லது. ஏனெனில் அந்த ராணுவ முகாம்களில் பெரும்பாலானவை பொதுமக்களின் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த நிலங்களின் உரிமையாளர்கள் தற்போது வேறு இடங்களில் வசிக்கின்றனர். போர் இல்லாத காரணத்தினால் பொதுமக்களின் நிலங்களில் உள்ள முகாம்களை அகற்றி அவற்றை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்கினால் நல்லது.” என்று என்.மனோகரன் விவரித்தார்.
"நிலங்களை ஒப்படைக்க அரசு முயற்சி செய்யவில்லை"
வடக்கு மாகாணத்தில் பொதுமக்களின் நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாதது குறித்து மாற்றுக் கொள்கை மையத்தின் வழக்கறிஞர் பவானி பொன்சேகாவிடம் பிபிசி சிங்களம் கேட்டது.
"இப்போது போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிக அளவிலான பொதுமக்களின் நிலங்களை பாதுகாப்பு படையினர் இன்னமும் வைத்துள்ளனர்.
பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட சில பொதுமக்களின் நிலங்களில் பாதுகாப்புப் படையினர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் அதன் விளைச்சல் நிலத்தின் உரிமையாளர்களுக்கு போய்ச் சேரவில்லை.” என்று அவர் சொன்னார்.
"பொதுமக்களின் நிலங்கள் விடுவிக்கப்படாமல் இருப்பது தவறு. பொதுமக்களுக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும், நிலங்களை மக்களிடம் ஒப்படைப்பதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார் பவானி பொன்சேகா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)