You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் RRR பட 'நாட்டு கூத்து' பாடல் - கொண்டாடும் ரசிகர்கள்
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் RRR திரைப்படத்தின் நாட்டு கூத்து பாடல், சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கு வெளியே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய திரைப்பட பாடல் என்ற வரலாற்றைப் படைத்துள்ளது.
லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்று வரும் 95வது அகாடமி விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்த பிளாக்பஸ்டர் படமான ஆர்ஆர்ஆர் பாடல் பரிந்துரைக்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பிரமாண்ட விழாவில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும் படம் மற்றும் படைப்பாளிகளின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் இந்திய திரை ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட இந்த பரிந்துரை நிஜமான நிலையில், அதை திரையுலக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகிறார்கள்.
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில், இந்திய ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ், சிறந்த ஆவணக் குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. இந்த குறும்படம் முதுமலையில் வாழும் யானை பராமரிப்பு தம்பதியான பொம்மன், பெள்ளி தொடர்பான கதையாகும்.
முன்னதாக, ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.
மகதீரா, நான் ஈ, பாகுபாலி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், ஸ்ரேயா, அஜத் தேவ்கன், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்த திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் வசூலிலும் சாதனை படைத்தது. இப்படத்தின் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
திரைப்படங்களுக்கான உயரிய கௌரவமாக கருதப்படும் ஆஸ்காருக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுகள் விளங்கி வருகின்றன. ஹாலிவுட் ஃபாரின் பிரஸ் அசோசியன் சார்பில் வழங்கப்படும் இந்த விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில், மோஷன் பிக்சர் பிரிவில் சிறந்த பாடலாக நாட்டு நாட்டு பாடல் தேர்வாகியுள்ளதாக கோல்டன் குளோப் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான விருதை படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பெற்றுக்கொண்டார். மேடையில் பேசிய கீரவாணி, “இந்த விருது வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு அமர்ந்துள்ள என் மனைவி உடன் இந்த உற்சாகத்தை பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக விருதுகளை பெறும்போது, இந்த விருது எனக்கு உரியது அல்ல என்று சொல்வதுதான் வழக்கம். நானும் அதைத்தான் சொல்லப்போகிறேன்.
இந்த விருது எனது சகோதரரும் இயக்குநருமான ராஜமவுலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி. நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித்துக்கு நன்றி . அவர் இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது.தங்கள் முழுத் திறனை வெளிப்படுத்திய ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கும் நன்றி” என தெரிவித்தார்
கோல்டன் குளோப் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் இயக்குநர் ராஜமவுலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஏராளமான திரைக்கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்