உலகக்கோப்பை: தென் ஆப்ரிக்கா வெற்றியை உறுதி செய்த அந்த '10 ஓவர்கள்' - இங்கிலாந்துக்கு சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், எதிரணியான நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்க வீரர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் இங்கிலாந்து மீது ஆதிக்கம் செலுத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்திவிட்டார்கள்.
தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து பலப்பரீட்சை
மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற உலகக்கோப்பையின் 20-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அந்த தோல்வி இருந்து மீள 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வதம் செய்தது. எனினும், முந்தைய ஆட்டத்தில் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டிருந்தது.
அதேநேரத்தில், முதலிரு ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை எளிதில் வீழ்த்தி கம்பீரமாக வலம் வந்த தென் ஆப்ரிக்கா அணி கடந்த போட்டியில் நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியுற்றது. இதனால், இரு அணிகளுமே வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கின.
இங்கிலாந்து அணியில் மீண்டும் பென் ஸ்டோக்ஸ்
தென் ஆப்ரிக்க அணியில் உடல்நலக்குறைவு காரணமாக கேப்டன் பவுமா விளையாடததால், மார்க்ரம் கேப்டன் பொறுப்பை கவனித்தார். இங்கிலாந்து அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம் பெற்றார்.
கடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வெல்ல பேருதவி புரிந்த அவர், பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் கைகொடுத்து, இங்கிலாந்து அணிக்கு ஆபாத்பாந்தவனாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சாம் கரண் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக டேவிட் வில்லி மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
ஹென்ரிக்ஸ் - வான் டெர் டுஸென் ஜோடி அபாரம்
பேட்டிங்கிற்கு சாதகமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களாக குயின்டன் டி காக் - ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி களமிறங்கினர்.
முதலிரு போட்டிகளில் அடுத்தடுத்து சதம் அடித்து கலக்கிய குயின்டன் டி காக் முதல் ஓவரிலேயே ஒரு பவுண்டரி அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலே ரீஸ் டாப்லே பந்தில் இங்கிலாந்து கேப்டனும் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லரிடம் அவர் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் களத்தில் இருந்த ஹென்ட்ரிக்ஸ் உடன் சிறப்பான ஜோடியை அமைத்தார்.
இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். ஹென்ரிக்ஸ் தான் எதிர்கொண்ட 13-வது ஓவரில்தான் ரன் கணக்கையே தொடங்கினார். களத்தில் நிலைத்துவிட்ட பிறகும் இருவருமே அதிரடி காட்டி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ரஷித் வீசிய கூக்ளியில் வீழ்ந்த ஹென்ரிக்ஸ்
வான்டெர் டுசென் 61 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 60 ரன்கள் சேர்த்த நிலையில் அடில் ரஷித் பந்து வீச்சில் ஜானி பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2ஆவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் குவித்தது.
சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுட்டானார். 75 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்தார். அடில் ரஷித் வீசிய கூக்ளியை சரியாக கணிக்கத் தவறிய ஹென்ட்ரிக்ஸ் தனது ஸ்டம்புகளை சிதறவிட்டார்.
அடுத்து வந்த கேப்டன் மார்க் ரம் 4 பவுண்டரிகளை விரட்டி 42 ரன் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் டேவிட் மில்லர் 4 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசெனுடன் மார்கோ ஜான்சன் ஜோடி சேர்ந்தார். 40 ஓவர்கள் வரை அதிரடி கலந்த நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோடி அதற்கு பிறகு மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images
கடைசி 10 ஓவர்களில் 143 ரன்கள்
பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் இருவருமே மாறிமாறி சிக்ஸர் மழை பொழிந்தனர். ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். 67 பந்துகளில் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் கிளாசென் 109 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த ஜெரால்ட் கோட்ஸி 3 ரன்னுக்கு அவுட் ஆனார். கடைசி வரை களத்தில் இருந்த மார்கோ ஜான்சன் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் எடுத்திருந்தார். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்க அணி 399 ரன்கள் சேர்த்தது.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 40 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பிறகு கடைசி 10 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 143 ரன்கள் குவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்துக்கு தொடக்கமே தடுமாற்றம்
இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இமாலய இலக்கை நோக்கி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டேவிட் மலான் 6 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் ஜோ ரூட் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 24 ரன்களுக்குள் முதல் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி அதன்பிறகு சரிவில் இருந்து மீளவே இல்லை. அந்த அணி வீரர்கள் வருவதும், ஆட்டமிழந்து வெளியேறுவதுமாகவே இருந்தனர்.
ஆபாத்பாந்தவனாக கருதப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 5 ரன்களிலும், சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹாரி புரூக் 17 ரன்களும், கேப்டன் பட்லர் 15 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி 12 ஓவர்களில் 68 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.
அடுத்தபடியாக டேவிட் வில்லி 12 ரன்களிலும், ஆடல் ரஷித் 10 ரன்களிலும் அவுட்டாயினர். இங்கிலாந்து அணி 100 ரன்களை எட்டும் போதே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
கடைசிக் கட்டத்தில் 9-வது விக்கெட் ஜோடி போராட்டம்
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக 9-வது விக்கெட்டுக்கு இணைந்த அட்கின்சன் - மார்க் வுட் ஜோடி கடைசிகட்டத்தில் போராடியது. இருவரும் வந்தவரை லாபம் என்கிற ரீதியில் அதிரடியில் இறங்கியதால், இங்கிலாந்து அணி சற்று நிமிர்ந்தது. இதில குறிப்பாக ரபாடா வீசிய 21 ஓவரின் முதல் பந்தில் மார்க் வுட் 2 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 பந்துகளை சந்தித்த அட்கின்சன் 4 பவுண்டரிகள் விளாசி அசத்தினார். இதனால் இஙிலாந்து அணியின் ரன் வேகம் அதிகரித்தது.
இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 33 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில், அட்கின்சன் 21 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டுக்கு காயம் காரணமாக ரிசி டோப்ளி களமிறங்காததால், 9-வது விக்கெட் வீழந்தவுடன் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி 22 ஓவர்களில் 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டிருந்தது. இதன் மூலம் தென் ஆப்ரிக்க அணி 229 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்கா சாதனை துளிகள்
- இந்த போட்டியில் 300 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலமாக தென் ஆப்ரிக்கா தொடர்ந்து 6ஆவது முறையாக முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது.
- இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா குவித்த 399 ரன்களே, இங்கிலாந்திற்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் எடுத்திருந்தது.
- கிளாசென் 61 பந்துகளில் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தனது முதல் சதம் விளாசினார். இதன் மூலமாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் ஹெண்ட்ரிச் கிளாசென் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
புள்ளிப் பட்டியலில் மாற்றம் என்ன?
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூலம் புள்ளி பட்டியலில் தென் ஆப்ரிக்க அணியின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தலா 4 வெற்றிகளுடன் முதலிரு இடங்களில் நியூசிலாந்து, இந்தியா ஆகிய அணிகள் தொடர தென் ஆப்ரிக்க அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகள், ஒரே ஒரு வெற்றியுடன் 9-வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட்டும் மிக மோசமாக இருப்பதால் நடப்புச் சாம்பியனான அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுமா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












