கன்வார் யாத்திரை: உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு
ஒவ்வொரு ஆண்டும் நடப்பது போல இந்த ஆண்டும் கன்வார் யாத்திரைக்கு செல்பவர்கள் உத்தரப் பிரேதசத்தின் முசாபர்நகரை கடந்து செல்வார்கள். ஆனால் இம்முறை ஒரு விஷயம் வித்தியாசமாக இருக்கும்.
உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் தாபாக்கள், உணவு விடுதிகள், இனிப்பு கடைகள், பழக்கடைகள் போன்றவை, தங்கள் கடையின் பெயர் மற்றும் அதில் பணிபுரிபவர்கள் பெயரை தெளிவாகவும் பெரியதாகவும் எழுதி வைத்திருக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையின் விளைவை கண்கூடாக பார்க்க முடிகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஷ்ரவன் மாதத்தின் போது லட்சக்கணக்கான கன்வாரியர்கள் ஹரித்வாரில் இருந்து புனித நீருடன் முசாபர்நகர் வழியே செல்கின்றனர்.
இந்த சமயத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க உணவுக் கடை உரிமையாளர்கள் அவர்கள் கடைகளில் பணிபுரியும் வேலையாட்களின் பெயர்களை கடைக்கு வெளியே எழுதிவைக்க காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறை உத்தரவுக்கு பிறகு, பெரும்பாலான இஸ்லாம் கடைகளில், உரிமையாளர் மற்றும் வேலையாட்களின் பெயர்கள் பெரிய எழுத்துகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
சிலர் அவர்களாக முன்வந்து எழுதி வைத்ததாக கூறினாலும், சிலர் காவல்துறையின் கட்டாயத்தின் பேரில் இதனை செய்ததாக கூறுகிறார்கள்.
ஹரித்வாரில் இருந்து வரும் பிரதான சாலை மதீனா சவுக் (Madina Chowk) வழியாக முசாபர்நகருக்குள் நுழைகிறது.
இப்போது, கடைகளின் வெளியே வெள்ளைப் பலகைகளில் சிவப்பு நிறத்தில் பெரிய எழுத்துகளில் இஸ்லாமிய உரிமையாளர்களின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
டெல்லி - ஹரித்வார் நெடுஞ்சாலை மற்றும் பிற பகுதிகள் மற்றும் நகர்ப்புற சாலைகளிலும் இதே சூழல் தான் நிலவுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் முசாபர்நகரில் கன்வார் யாத்திரைக்காக என்னென்ன மாற்றங்கள் செய்ய கடை உரிமையாளர்கள் வற்புறுத்தப்பட்டனர் என்பதை அறிய பிபிசி கள ஆய்வு செய்தது.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், SHAD MIDHAT/BBC
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



