தனுஷ்க குணதிலக்க: ஆணுறையின்றி வல்லுறவு குற்றச்சாட்டு - பாதிக்கப்பட்ட பெண் கூறுவது என்ன?

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள், சிட்னி டவுனின் சென்டர் நீதிமன்றத்தில் நிறைவு பெற்றுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 28ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணைகள், செப்டம்பர் 21ஆம் தேதி இடம்பெற்றன.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணை, தனுஷ்க குணதிலக்க, சம்பவத்திற்கு முன்னரும் டிண்டர் சமூக ஊடக வாயிலாகத் தொடர்ந்தும் பின்தொடர்ந்திருந்ததாக அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், உறுதிப்படுத்த முடியாத ''கதையொன்றை" உருவாக்கியுள்ளதாக பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

வழக்கு விசாரணையில் என்ன தெரிய வந்தது?

இந்த பாலியல் உறவு, சம்ந்தப்பட்ட பெண் எதிர்பார்த்ததை விடவும் அல்லது அவரது தேவையை விடவும் வித்தியாசமானது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கேப்ரியல் ஸ்டீட்மேன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையானது மிகவும் கடினமானது எனக் கூறிய வழக்கறிஞர், பெண்ணின் கோரிக்கைகள் அல்லது கட்டுப்பாடுகள் எதையும் அவர் மதிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக ஆணுறையை அகற்றிய நபரின் நடத்தையானது, அவர் அந்தப் பெண்ணின் கோரிக்கைகளை மதிக்கவில்லை என்பதற்கேற்ப அமைந்துள்ளது எனவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கும் குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே இணையத்தளத்தின் ஊடாக உருவான உறவு குறித்தும் வழக்கறிஞர் தெளிவூட்டியுள்ளார்.

அந்தப் பெண் பிரிஸ்பேன் நகருக்கு வருகை தருவதற்கான விமான டிக்கெட் செலவீனத்தை தனுஷ்க குணதிலக்க செலுத்த முயன்றுள்ள போதிலும், அதை அவர் நிராகரித்துள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படுக்கையறையில், உடலுறவு கொள்வதற்கு முன்பாக, பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும், அப்போது ஆணுறையைப் பயன்படுத்த விருப்பம் இல்லை என தனுஷ்க குணதிலக்க கூறியுள்ளதாகவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர், தனது ஆணுறையை அகற்றியதை அவதானிக்காத பெண், உடலுறவின் பின்னரே ஆணுறை கீழே வீசப்பட்டிருந்ததை கவனித்ததாகவும் நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்தப் பெண்ணை திருப்திப்படுத்துவதற்காக ஆணுறையை பயன்படுத்தியுள்ளதாகவும், அதை அகற்றுவதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடலுறவானது விரும்பத்தகாதவாறு இருந்தமையாலேயே, அவர் ஆணுறையை அகற்றியதை அவதானிக்கவில்லை எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆணுறை பயன்படுத்தியதாக விளக்கம்

போலீஸ் விசாரணைகளின்போது, பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனுஷ்க குணதிலக்க நிராகரித்துள்ளார். தான் உடலுறவின்போது இரண்டு ஆணுறைகளை பயன்படுத்தியிருந்ததாகவும், அதில் முதலாவதை சரியாகப் பயன்படுத்த முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது ஆணுறை விவகாரமானது, வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட போலித் தகவல் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதேவேளை, அந்தப் பெண்ணின் நடத்தையானது காலத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெற்றுள்ளதாகவும், பலவேறு காரணங்களால் அவர் போலியான மற்றும் அவருக்குச் சாதகமாகும் விதமான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதிவாதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முருகன் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஆணுறை கழன்றதாகவும், ஏனையோரிடம் அதைச் சந்தேகமாக கூறுவதும் சம்பந்தப்பட்ட பெண்ணின் பரஸ்பர கருத்துகள் என பிரதிவாதி சார்பிலான வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யுவதி தனது நண்பர்களுடன் நடத்திய உரையாடலில் அது தெளிவாகின்றது எனவும் அவர் கூறுகின்றார்.

யுவதி கூறும் கதைக்குப் பொருத்தமான விடயங்களை வெளிப்படுத்த முடியாதுள்ளதாகவும் வழக்கறிஞர் தங்கராஜ் குறிப்பிடுகின்றார்.

வேறாரு இரவு ஒன்றின்போது தனுஷ்க குணதிலக்க போட்டிகளின் பின்னர் சோர்வடைந்து இருந்ததாகவும், அந்தப்பெண்ணை குறித்த இரவில் சந்திக்க முடியாது என ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளதாகவும் பிரதிவாதி சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியுள்ளார். அப்படியிருக்க, அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறுவது முரண்பாடாகக் காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிவாதி, சர்வதேச கிரிக்கெட் வீரர் என்பதை வலியுறுத்திய வழக்கறிஞர் தங்கராஜ், தனக்கு பிரச்னையை உண்டாக்கவல்ல மூச்சுத்திணறல் போன்ற கண்ணுக்குத் தெரியாத காயங்களை ஏற்படுத்தும் இதுபோன்ற நடத்தைகளை நிகழ்த்துவதன் ஊடாக அவர் அபாயகர செயல்களைச் செய்வாரா எனவும் நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகள் நேற்றைய தினத்துடன் முடிவுக்கு வந்த நிலையில், வழக்கு மீதான தீர்ப்பு எதிர்வரும் 28ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

"வலுக்கட்டாயமாக கட்டி அணைத்துக்கொண்டார்"

வீட்டிற்கு வருகை தந்ததன் பின்னர் இருவரும் பானம் அருந்திக் கொண்டிருந்த தருணத்தில், தனுஷ்க குணதிலக்க, வலுக்கட்டாயமாக தன்னைக் கட்டியணைத்துக்கொண்டதாக பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

''அனைத்தும் மிக வேகமாக நடந்தமையால், அது எனக்கு அவ்வளவு இலகுவான சூழ்நிலையாக அமையவில்லை," எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் முன்புறத்திலேயே தனது ஆடைகளை தனுஷ்க குணதிலக்க கழற்றியதாகவும், அது பொது இடம் என்பதால், படுக்கையறைக்கு செல்வதற்குப் பரிந்துரை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது விருப்பம் இல்லாது தனுஷ்க குணதிலக்க வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், அது தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆணுறையைப் பயன்படுத்துமாறு அவர் கூறியதற்கு அது தேவையில்லை எனவும் அதைப் பயன்படுத்த விருப்பமில்லை எனவும் தனுஷ்க குணதிலக்க கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆணுறையை வழங்கியவுடன், விருப்பமின்றி அதை தனுஷ்க குணதிலக்க அணிந்துகொண்டு, உடலுறவில் ஈடுபட்டதாகவும் அவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார்.

''எனக்கு உயிர் பயம் ஏற்பட்டது"

ஆணுறையை அணிந்துகொண்ட தனுஷ்க குணதிலக்க தன்னுடன் வலுக்கட்டாயமாக 15 நிமிடங்கள் வரை பாலியல் உறவில் ஈடுபட்டதாகவும், இதன்போது 20 முதல் 30 விநாடிகள் தனது மூச்சு நின்றதாகவும் யுவதி நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியுள்ளார்.

''எனது கழுத்திலிருந்த அவருடைய கையை எடுப்பதற்கு நான் முயற்சி செய்தமை எனக்கு நினைவில் வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு உயிர் பயம் ஏற்பட்டது," என அவர் கூறியுள்ளார்.

''வேகத்தை குறைத்துக் கொள்ளுமாறு நான் அவரிடம் கோரினேன். எனினும், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை," என பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

உடலுறவு முடிவடைந்த சில நிமிடங்களின் பின்னர் ஆணுறை கீழே வீழ்ந்து கிடப்பதை, தான் அவதானித்ததாக யுவதி நீதிமன்றத்தில் சாட்சி வழங்கியுள்ளார்.

''பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடவே விருப்பம் கொண்டார்"

தனுஷ்க குணதிலக்க, முறைப்பாட்டாளரின் தெளிவின்றி, ஆணுறையை அகற்றினாரா என்பதே வழக்கு விசாரணைகளின் பிரதான பிரச்னையாகக் காணப்படுகின்றது என முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளர் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுவதற்கே தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

அச்சத்தின் காரணமாக ஆணுறை தொடர்பில் எதுவும் கூறுவது பாதுகாப்பற்றது என, குறித்த பெண் உணர்ந்துள்ளதாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

''முறைப்பாட்டாளர் அதை உறுதிப்படுத்த வேண்டும்"

தனது தரப்பு பிரதிவாதியான தனுஷ்க குணதிலக்க, ''வேண்டுமென்றே சம்பந்தப்பட்ட பெண்ணின் தெளிவில்லாமல் ஆணுறையை அகற்றியமை தொடர்பில், முறைப்பாட்டாளர் அதை உறுதிப்படுத்த வேண்டும்" என தனுஷ்க குணதிலக்க சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் முருகன் தங்கராஜ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க, தனது கையடக்கத் தொலைபேசியின் ரகசிய பூட்டை திறப்பதற்கும் (அன்லாக் செய்வதற்கும்), பிடியாணையின்றி தனது ஹோட்டல் அறைக்கு வருகை தந்து, தனது பொருட்களை சோதனையிடுவதற்கும் போலீசாருக்கு இடமளித்ததாகவும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இடைநடுவில், இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய தனுஷ்க குணதிலக்க, சமூக ஊடகத்தின் ஊடாக அறிமுகமான 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்த நாட்டு போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் யுவதியால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டிடிருந்தது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிட்னி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தனுஷ்க குணதிலக்க, அந்த நாட்டு போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சிட்னி நகரிலுள்ள தடுப்பு முகாமொன்றில் 11 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க, கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், தனுஷ்க குணதிலக்க அந்த நாட்டிலேயே தங்கியிருந்து வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இந்த மாதம் 28ஆம் தேதி வழங்கப்பட உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: