You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனுஷ்க குணத்திலக்க: ஆணுறையின்றி வல்லுறவு, கழுத்தை நெரித்ததாக குற்றச்சாட்டு
- எழுதியவர், டிஃபனி டர்ன்புல்
- பதவி, பிபிசி நியூஸ், சிட்னி
டி20 உலகக் கோப்பைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு ஆளான தனுஷ்க குணதிலக்க, பாலுறவின்போது ஆணுறையை கழற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
காவல்துறை விசாரணையில், வன்முறை மற்றும் ஒப்புதல் இல்லாமல் உறவு கொண்டதாக இருக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் வாதிட்டத்தைத் தொடர்ந்து அவருக்கு திங்கட்கிழமை ஜாமீன் மறுக்கப்பட்டது.
அவரது ஜாமீனை எதிர்த்து வாதிடுவதற்கு போலீசார் சார்ந்திருந்த ஆவணங்களைப் பற்றி செய்தியிடுவதற்கு இருந்த தடை உத்தரவை புதன்கிழமையன்று நீதிமன்றம் நீக்கியது.
நீதிமன்றத்திற்கு போலீஸ் தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, குணதிலக்க மற்றும் அவர்மீது குற்றம் சாட்டிய 29 வயதான பெண், அக்டோபர் 29ஆம் தேதியன்று டிண்டரில் அறிமுகமாகினர்.
அவர்கள் நவம்பர் 2ஆம் தேதியன்று சிட்னியில் சந்திக்க ஒப்புக்கொண்டனர். புகார் அளித்தவரின் வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பாக மது அருந்தவும் இரவு உணவுக்கும் வெளியே செல்லவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.
அவருடைய வீட்டில், குணதிலக்க அந்தப் பெண்ணுடன் “பலவந்தமாக” பாலுறவில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மூன்று முறை அவருடைய கழுத்தை நெரித்தார். அதில் ஒருமுறை 30 விநாடிகள் வரை நெரித்தார்.
“புகார் அளித்தவர் தனது உயிருக்கு அஞ்சினார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை” என்று நீதிமன்ற ஆவணங்களில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
குணதிலக்கவிடம் ஆணுறையை அணியுமாறு கூறியபோதிலும், பாலுறவு கொள்ளும்போது தரையில் ஆணுறை இருந்ததை அந்தப் பெண் கவனித்ததாக ஆவணங்கள் கூறுகின்றன.
ஆணுறை இல்லாமல் பாலுறவு கொள்வதற்கோ அல்லது மூச்சுத் திணறலுடன் பாலுறவு கொள்வதற்கோ தான் சம்மதிக்கவில்லை என்று அந்தப் பெண் “தெளிவாக” இருந்ததாக காவல்துறை கூறுகிறது.
அடுத்த நாள், புகார் அளித்தவர் நடந்ததை இரண்டு நண்பர்களிடம் கூறினார், ஒரு மனநல ஆலோசகருடன் பேசினார். அதோடு காவல்துறையைத் தொடர்புகொள்வதற்கு முன்பாகத் தனது மருத்துவரைச் சந்தித்தார்.
பிறகு அவர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர் மூச்சுத் திணறல் காரணமாக ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க மூளை ஸ்கேன் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள்.
நீதிமன்ற ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ள போலீசாரிடம் பேசிய தனுஷ்க குணதிலக்க, வன்முறை குற்றச்சாட்டை மறுத்து, உடலுறவுக்கு அவர் ஒப்புதல் அளித்ததாகக் கூறினார். ஆனால், துப்பறிவாளர்கள் விசாரித்தபோது ஒப்புதல் பற்றி புகார் அளித்தவருடன் உரையாடியதை அவர் நினைவுபடுத்த முடியவில்லை.
ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்த சீர்திருத்தங்கள், “அனுமதியின்றி ஆணுறையை அகற்றுவது” பாலியல் வன்கொடுமை குற்றமாக ஆக்கப்பட்டது.
குணதிலக்கவை அனைத்து வகையான விளையாட்டுகளில் இருந்தும் இலங்கை கிரிக்கெட் இடைநிறுத்தியுள்ளது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதன் சொந்த குழுவையும் நியமித்துள்ளது.
டேட்டிங் செயலி மூலம் அறிமுகம்
டி20 உலகக் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, டேட்டிங் செயலியான டிண்டரில் அறிமுகமான தன்னிடம் முதலாவது சந்திப்பில் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் தனுஷ்க குணதிலக்க ஈடுபட்டதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் அவர் நவம்பர் 6ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, நவம்பர் 2ஆம் தேதியன்று தன்னை ரோஸ் பேயிலுள்ள வீடொன்றில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த தனுஷ்க குணதிலக்க முயன்றதாக சம்பந்தப்பட்ட பெண் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நியூ சௌத் வேல்ஸ் காவல்துறை, இலங்கை நாட்டவர் ஒருவரை கைது செய்துள்ளதாக அதன் இணையதளத்தில் கூறியது. ஆனால், அப்போத் அதில் கைதானவரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
"கடந்த வாரம் சிட்னியின் கிழக்கில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் விசாரணையைத் தொடர்ந்து பாலியல் குற்றப்பிரிவு புலனாய்வுப் பிரிவினர் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமை 5 நவம்பர் 2022, 29 வயதான பெண் ஒருவர் ரோஸ் பேயில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநில குற்றப்பிரிவின் பாலியல் குற்றப்பிரிவு மற்றும் கிழக்கு புறநகர் போலீஸ் ஆகியவற்றின் துப்பறியும் அதிகாரிகள் கூட்டு விசாரணையைத் தொடங்கினர்," என்று அதில் கூறப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்