பஹல்காம், டிரம்ப் 'தலையீடு' பற்றி ஐநாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் - இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம், UN
பஹல்காம் தாக்குதலை இந்தியா அரசியல் ரீதியாக பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால், இரு நாடுகளுக்கு இடையிலான மோதலின் விளைவு பேரழிவாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
"ஒசாமா பின்லேடனை ஒரு தசாப்தம் முழுவதும் மறைத்து வைத்தது பாகிஸ்தான்தான்" என்று தனது உரையின்போது இந்திய தூதர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் உண்மையிலேயே அமைதியை விரும்பினால், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பஹல்காம் தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் பேசியது என்ன?

பட மூலாதாரம், Getty Images/UNTV
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐநா பொது அவையில் உரையாற்றும் போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தைக் குறிப்பிட்டு, "பாகிஸ்தான் அதன் கிழக்கு எல்லையில் எதிரிகளின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பதிலளித்தது" என்று கூறினார்.
"பஹல்காம் தாக்குதலைப் பற்றி பாரபட்சமற்ற விசாரணை நடத்த இந்தியாவிடம் நாங்கள் கேட்டிருந்தோம்," என்ற அவர், "எங்கள் நிறுவனர் காயிதே ஆசம் முகமது அலி ஜின்னாவின் நோக்கத்தின்படி, ஒவ்வொரு பிரச்னையையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க பாகிஸ்தான் விரும்புகிறது," என்றும் தெரிவித்தார்.
பஹல்காம் சம்பவத்தை, இந்தியா அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சாட்டிய அவர், "வெளிப்புற ஆக்கிரமிப்புகளில் இருந்து பாகிஸ்தான் தன்னை முழுமையாக தற்காத்துக் கொள்ளும்," என்று தெரிவித்தார்.
'எந்த நாடகமும் பொய்யும் உண்மையை மறைக்க முடியாது' - இந்தியாவின் பதில்

பட மூலாதாரம், ANI
ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டுக்கு இந்தியா தனது உரையில் பதிலளித்தது.
ஐநா பொதுச்சபையில் பேசிய இந்திய பிரதிநிதியான படேல் கெலாட், "ஒசாமா பின்லேடனை ஒரு தசாப்த காலமாக மறைத்து வைத்தது பாகிஸ்தான் தான்" என்று குறிப்பிட்டார்.
"இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நடத்தை வெளிப்பட்டது. அவர் மீண்டும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்தினார்; அது அவரின் வெளியுறவுக் கொள்கையின் மையக்கூறாக உள்ளது," என்று கெலாட் தெரிவித்தார்.
எந்த நாடகமும் பொய்யும் உண்மையை மறைக்க முடியாது என்றும் படேல் கெலாட் கூறினார்.
பஹல்காம் தாக்குதலைப் பற்றிக் குறிப்பிட்ட கெலாட், "ஏப்ரல் 25, 2025 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகப் படுகொலை செய்த எதிர்ப்பு முன்னணி (Resistance Front) என்ற பயங்கரவாத அமைப்புக்கு அரணாக நின்ற அதே பாகிஸ்தான் இது தான்" என்றார்.
"பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒரு பங்காளியாக நடித்து, ஒசாமா பின்லேடனுக்கு ஒரு தசாப்த காலமாக அடைக்கலம் கொடுத்ததும் பாகிஸ்தான்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய கெலாட்,"இந்தியாவில் அப்பாவி மக்கள் மீது நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்பதே உண்மை" என்றும் கூறினார்.
'இப்போது எங்களுக்கு அமைதி வேண்டும்' - ஷாபாஸ் ஷெரீப்
"இந்தியாவுடனான சண்டையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம். இப்போது நாங்கள் அமைதியை விரும்புகிறோம், மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளிலும் இந்தியாவுடன் விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது" என்று ஷாபாஸ் ஷெரீப் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை பரஸ்பர மரியாதை மற்றும் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வை விரும்புகிறோம்" என்றார்.

'பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்' - கெலாட்
இந்தியாவுடனான அமைதி குறித்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் பேச்சு குறித்து கெலாட் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவுடனான அமைதி குறித்துப் பேசியுள்ளார். அவர் உண்மையிலேயே நேர்மையானவராக இருந்தால் அவர் முன்னே பாதை தெளிவாக உள்ளது." என்றார்.
"பாகிஸ்தான் உடனடியாக அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூடிவிட்டு, இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்"என்று படேல் கெலாட் தெரிவித்தார்.
டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் ஆதரவு

பட மூலாதாரம், Getty Images
ஐநா பொதுச் சபையில் உரையாற்றிய போது, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தடுத்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பாராட்டுவதாக குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டிரம்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிடாமல் இருந்திருந்தால், சண்டையின் விளைவு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்" என்று கூறினார்.
மேலும் "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதலைத் தடுத்ததற்காக டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர்" என்றும் குறிப்பிட்டார் ஷாபாஸ் ஷெரீப்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களை முடிவுக்குக் கொண்டுவருவதில், தான் முக்கியப் பங்கு வகித்ததாக டிரம்ப் ஏற்கனவே பலமுறை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பதில் என்ன?

பட மூலாதாரம், EPA
இந்தியா-பாகிஸ்தான் மோதலைத் தடுப்பதில் எந்த மூன்றாம் தரப்பினரும் பங்கு வகித்ததில்லை என்பதை இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
சமீபத்திய நேர்காணலில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம், இது தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதற்குப் பதில் அளித்த அவர், "பாகிஸ்தானுடனான நமது அனைத்து பிரச்னைகளும் பரஸ்பரமானவை, அதாவது இருதரப்பையும் சார்ந்தவை என்பதில் பல ஆண்டுகளாக தேசிய அளவில் ஒருமித்த கருத்து உள்ளது" என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், இந்திய ராணுவத்தின் "ஆபரேஷன் சிந்தூர்" நடவடிக்கையின் கீழ் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இந்தியா கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












