கணொளி: ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 'ஹிட்' அடிக்குமா? கூலி விமர்சனம்

காணொளிக் குறிப்பு, கூலி திரைப்படம்
கணொளி: ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி 'ஹிட்' அடிக்குமா? கூலி விமர்சனம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கூலி திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான கூலியில், நாகார்ஜுனா, சௌபின் சாகிர், உபேந்திரா, சத்தியராஜ், ஸ்ருதிஹாசன், கௌரவ வேடத்தில் ஆமிர்கான் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இடம்பிடித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ளார்.

ரஜினியும், லோகேஷ் கனகராஜும் இணைந்திருக்கும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் இருந்தது. அதனை படம் பூர்த்தி செய்துள்ளதா?

கூலி படம் குறித்து ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன? அதை பார்ப்பதற்கு முன்பாக படத்தின் கதை என்ன என்பதை பார்க்கலாம்.

சென்னையில் மேன்ஷன் நடத்திவருபவர் தேவா. தனது நண்பர் ராஜசேகர் உயிரிழந்த தகவல் அறிந்து அவருக்கு அஞ்சலி செலுத்த செல்கிறார் தேவா. அப்போது, ராஜசேகரின் மரணம் இயற்கையானது அல்ல, அவர் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதை தேவா அறிந்துகொள்கிறார். நண்பரின் மரணத்துக்கு பழிவாங்க தேவா கிளம்ப அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை.

74 வயதிலும் ரஜினியின் Charisma, Screen Presence போன்றவை வலுவாக அப்படியே இருப்பதாக பாராட்டியிருக்கும் இந்தியா டுடே, ரசிகர்களை உற்சாகப்படுத்த ரஜினி கண்ணில் ஒரே ஒரு க்ளோஸ் அப் ஷாட் போதும் எனக் கூறுகிறது.

ஃபிளாஷ்பேக்கில் வரும் இளம்வயது ரஜினியின் காட்சிகள் மாஸாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

படத்தில் ரஜினியைத் தாண்டி அதிகம் கவனம் பெறுவது வில்லன்களாக நடித்திருக்கும் நாகார்ஜுனா மற்றும் சௌபின் தான். அதிலும் நாகார்ஜுனாவின் வில்லத்தனமான நடிப்பு மிரட்டலாக இருப்பதாக தினத்தந்தி பாராட்டியுள்ளது. சைமன் கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா ஸ்டைலிஷாக இருப்பதாக பாராட்டியிருக்கும் இந்தியா டுடே, அவரது கதாபாத்திரம் எளிமையாக இருப்பதாகவும், அவரது Charisma-வை மட்டுமே அதிகம் சார்ந்திருக்க வேண்டி இருப்பதாகவும் கூறியுள்ளது. கடத்தல் கும்பலின் தலைவராக வில்லத்தனத்தை நுணுக்கமாக நாகார்ஜுனா வெளிப்படுத்தியிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

ராஜசேகராக நடித்திருக்கும் சத்தியராஜ் குறைந்த காட்சிகளே வந்துபோகிறார். ஸ்ருதிஹாசன், சமீப காலத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியிருப்பதாக கூறுகிறது இந்தியா டுடே.

ஆமிர்கானின் கேமியோ ரோல் திணிக்கப்பட்ட ஒன்றாக இல்லாமல் இயல்பாக இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. அதேநேரம், அவரை சரியாக பயன்படுத்தவில்லை என இந்தியா டுடே விமர்சனம் குறிப்பிடுகிறது.

உபேந்திரா திரையில் தோன்றும்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறுகிறார்.

அனிரூத் இசை படத்துக்கு ஹைலைட்டாக இருப்பதாக கூறும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பாடல்களும் பிஜிஎமும் சிறப்பாக இருப்பதாக பாராட்டி இருக்கிறது.

வழக்கமான பழிவாங்கல் படலம் என்றாலும் புதுமையான திரைக்கதையில் பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளைக் கொண்டு ரசிக்கக்கூடிய படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி இருப்பதாக தினத்தந்தி கூறுகிறது.

"படத்தின் முதல் பாதி பாடல், நடனம், பன்ச் வசனம் என ரசிகர்களுக்காகவே அமைக்கப்பட்டுள்ளது. இது விறுவிறுப்பாக அமையக்கூடிய படத்தின் வேகத்தை குறைக்கிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக நேரம் எடுத்துக்கொண்டாலும், இரண்டாம் பாதியில் லோகேஷ் உண்மையிலேயே விருந்தை படைத்துவிட்டார்" என டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் பாராட்டியுள்ளது.

"படத்தில் உள்ள பல முரண்பாடுகள், படத்தை ரசிக்க முடியாதபடி மாற்றிவிட்டது. நிறைய இடங்களில் கைத்தட்டல்கள் கிடைத்தாலும் லோகேஷ் கனகராஜின் வழக்கமான, தனித்துவமான காட்சி பாணியுடன் இது வேறுபடுகிறது" என விமர்சித்துள்ள இந்தியா டுடே, ரஜினியின் ஸ்கீரின் பிரசன்ஸ் மற்றும் அனிரூத்தின் இசை படத்தை காப்பாற்றுவதாக சொல்லியிருக்கு.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு