You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட்டில் இந்தியாவுடனான மோதல் போக்கு பற்றி வங்கதேச ஊடகங்கள் கூறியது என்ன?
ஐபிஎல் போட்டியிலிருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்கியது, டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வேண்டாம் என வங்கதேச அணி முடிவெடுத்தது, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்ப தடை விதித்தது ஆகியவை இந்தியா மற்றும் வங்கதேசம் என இரு நாடுகளிலும் விவாதிக்கப்படுகிறது.
வங்கதேச ஊடகங்களும் அதன் பல பத்திரிகையாளர்களும் இந்த முடிவுகள் குறித்து பல்வேறு விஷயங்களை கூறியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடந்த வெள்ளிக்கிழமை வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கேட்டுக்கொண்டது.
ஐபிஎல் போட்டியில் விளையாட முஸ்தஃபிசுர் ரஹ்மானை சுமார் ரூ.9 கோடி மதிப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. பாலிவுட் பிரபல நடிகர் ஷாருக்கான் இந்த அணியின் உரிமையாளர்களுள் ஒருவராவார்.
இந்தியாவில் உள்ள வலதுசாரி அமைப்புகள் மற்றும் பாஜக தலைவர்கள் சிலர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் சேர்த்ததற்காக ஷாருக்கான் மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனிடையே, பிபிசி வங்கமொழி சேவையின்படி, வங்கதேசத்தின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், அடுத்த உத்தரவு வரும் வரை ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த முடிவு, முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து நீக்கியதற்கு பிறகு வந்துள்ளது.
முன்னதாக, விளையாட்டு ஆலோசகரான பேராசிரியர் ஆசிஃப் நஸ்ருல், முஸ்தஃபிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
பத்திரிகையாளர்கள் கூறுவது என்ன?
வங்கதேசத்தின் பிரபல செய்தி இணையதளமான BD நியூஸ் 24-யின் விளையாட்டுப் பிரிவு ஆசிரியர் ஆரிஃபுல் இஸ்லாம் ரோனி, "இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளும் சிறந்த நாடுகள் அல்ல," என குற்றம் சாட்டினார்.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோரை அவர் குறிப்பிட்டார். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு பின், ஷகிப் அல் ஹசன் வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
அவாமி லீக் கட்சியின் முன்னாள் எம்.பியான ஷகிப் அல் ஹசன், ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 150க்கும் மேற்பட்டோரில் ஒருவராவார்.
ஆரிஃபுல் இஸ்லாம் ரோனி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவுக்கு பதிலாக இலங்கையில் நடத்த வேண்டும் என ஐசிசியிடம் வங்கதேசம் வலியுறுத்த வேண்டும். வங்கதேசத்தின் தலைசிறந்த மற்றும் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக உள்ள ஷகிப் அல் ஹசன், மக்கள் கூட்டம் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தாய்நாடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை." என எழுதியுள்ளார்.
"மக்கள் கூட்டத்திற்காக நாட்டின் சிறந்த ஒருவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு அரசு இயந்திரமும் தோல்வியடைந்துள்ளது. மக்கள் கூட்டம் கூடுவது ஆபத்தானது என கருதினால், கூட்டம் இவ்வளவு ஆபத்தானது என்றால், இந்தியா முஸ்தஃபிசுருக்காக தனது உள்நாட்டு லீக் தொடரில் ஏன் சிரமங்களை எதிர்கொள்ள விரும்பப் போகிறது?."
"முஸ்தஃபிசுர் விவகாரத்தில் கொல்கத்தாவிலோ அல்லது இந்தியாவின் வேறு எந்த இடத்திலோ ஒரு கும்பல் கூடி, அவர்கள் மீது பாட்டில்களோ அல்லது கற்களோ வீசப்பட்டால், நாம் இந்திய அரசாங்கத்தின் மீது விரல் நீட்ட மாட்டோமா?"
ரோனி கூறுகையில், "ஆனால், நாம் அடிப்படைவாதிகளுக்கு அடிபணியக் கூடாது. அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதென்பது அரசு சரணடைவது போன்றது. இந்தியா எப்படி ஒரு சிறந்த நாடு இல்லையோ, அதேபோன்று ஒட்டுமொத்த உலகமும் வங்கதேசமும் கூட சிறந்தவை அல்ல." என தெரிவித்துள்ளார்.
ரோனி கூறுகையில், "ஷகிப் ஓர் உதாரணம் தான். ஒட்டுமொத்த நாடும் கும்பல் அதிகாரத்தில் தான் இயங்குகிறது. பார்வையற்றவர்களை போல இந்தியாவுக்கு எதிரான பாடல்களை இரவும் பகலும் கூச்சலிட்டு தங்களை வீரர்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே நாட்டுக்கு மிக ஆபத்தானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, டாக்காவின் டிரிப்யூன் குரூப் முதன்மை ஆசிரியர் ஸுல்ஃபிகர் ரசலும் ஷகிப் அல் ஹசன் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், "விளையாட்டை அரசியலில் இருந்து விலக்கி வைத்திருக்க வேண்டும் என்று முஸ்தஃபிசுர் பற்றி எழுதுபவர்கள், ஷகிப் அல் ஹசன் தனது நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதையும் நினைவில் கொள்கிறார்களா?" என எழுதியுள்ளார்.
"முஸ்தஃபிசுரை நீக்கியதை நான் ஆதரிக்க மாட்டேன். அதேபோன்று, வங்கதேசத்திற்காக ஷகிப் விளையாடாததையும் ஆதரிக்க மாட்டேன்."
'இந்தியாவுக்கு எதிராக ஆதாயம் பெற வாய்ப்புகளே இல்லை'
டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு இந்தியா செல்லக் கூடாது என்ற வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பிரபல பத்திரிகையாளர் நௌஷத் ஜமீல், "இது உண்மையிலேயே ஒரு முடிவா அல்லது அரசியல் சூழலை இன்னும் சூடாக்குவதற்கான 'இந்தியாவுக்கு எதிரான' கருத்தா?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
"ஐசிசி ஒப்புதலையும் தாண்டி, போட்டி நடைபெறும் இடத்தை மாற்ற சம்பந்தப்பட்ட இரு அணிகளின் ஒப்புதலும் தேவை, இதில் தான் வங்கதேசத்தின் நிலைமை பலவீனமாக உள்ளது" என்றார் அவர்.
"ஐசிசியில் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் பொருளாதார சக்தி கொண்ட நாடாக பிசிசிஐ உள்ளது என்பதுதான் யதார்த்தம். ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர ஆதரவு, சந்தை போன்றவற்றுக்கு ஐசிசி இந்தியாவை சார்ந்துள்ளது. அதன் விளைவாக, இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் ஆதாயம் பெறும் சூழல் துளியும் இல்லை." என்று அவர் கூறினார்.
பத்திரிகையாளர் நௌஷத் ஜமீல் கூறுகையில், உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதே வங்கதேசத்திற்கு இருக்கும் ஒரு வாய்ப்பு என்றும், ஆனால் அது மிகவும் ஆபத்தான முடிவு என்றும் கூறுகிறார். இதனால் சர்வதேச அழுத்தம், பொருளாதார இழப்புகள் மற்றும் ராஜீய ரீதியிலான சிக்கல்களை வங்கதேசம் சந்திக்கக் கூடும் என்றார் அவர்.
அவர் கூறுகையில், "இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டும் அல்ல. அதன் கலாசாரம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சம். இதன் விளைவாக, இந்தியா கிரிக்கெட்டைச் சுற்றி எப்போதும் வியூக அரசியல் செய்து வருகிறது." என்றார்.
"அரசியல் அல்லது விளையாட்டு என எதுவாக இருந்தாலும், இந்தியாவின் ஆதரவில் வங்கதேசம் எப்போதும் மிக ஆர்வமாக இருந்துள்ளது. கிரிக்கெட் தொடர்பாக கடுமையான நிலைப்பாடு குறித்து பேசுவது எளிது, ஆனால் அதை செயல்படுத்துவது கடினம். அதுதான் தெற்காசிய கிரிக்கெட் அரசியலின் கசப்பான யதார்த்தம்."
"ஒட்டுமொத்தமாக, வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாடு திட்டமிட்ட நாடகமாக தோன்றுகிறது. சிலர் இந்த நாடகத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஆதரவளிப்பார்கள், சமூக ஊடகங்களில் பாராட்டுவார்கள். ஆனால், உண்மையில் இதற்கு எந்த அடிப்படையும் இல்லை."
வங்கதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
வங்கதேசத்தின் முன்னணி ஊடகமான தி டெய்லி ஸ்டார், டி20 உலகக் கோப்பை விளையாட இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்ற வங்கதேச கிரிக்கெட் அணியின் முடிவு குறித்து தன்னுடைய இணையதளத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.
'அணி தயார், சேருமிடம் தெரியவில்லை, நிச்சயமற்ற நிலையில் உலகக் கோப்பையின் எதிர்காலம்' எனும் தலைப்பில் ('Team ready, destination unknown, future of World Cup in limbo') எழுதப்பட்டுள்ள கட்டுரையில், டி20 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்ட சில மணிநேரத்தில், இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் என அந்த அணி அறிவித்துள்ளது.
வங்கதேச அணி வீரர்களை செய்தியாளர் சந்திப்பு வாயிலாக அல்லாமல் அறிக்கை வாயிலாக தேர்வாளர்கள் அறிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புரோதம் ஆலோ ஆங்கில இணையதளத்தில், 'முஸ்தஃபிசுர் விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட்டை தனக்கு எதிரியாக்கிக் கொள்ளும் இந்தியா' ('India is also making Bangladesh cricket its enemy on the Mustafizur issue') எனும் தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதில், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்களைத் தணிப்பதற்காக 'கிரிக்கெட் ராஜதந்திரம்' பயன்படுத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால், மேலும் மேலும் பந்துகள் வீசப்படத் தொடங்கியதால், புவிசார் அரசியல் ரீதியான முரண்பாடுகளுக்கு மத்தியில், கிரிக்கெட் அந்தப் பிராந்தியத்தில் ஒரு அரசியல் ஆயுதமாக மாறி வருகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில், இந்தியா மற்றும் பாகிஸ்தானை தொடர்ந்து, இந்த பட்டியலில் வங்கதேசத்தின் பெயரும் இடம்பெறுமா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
மேலும், "விளையாட்டுடன் அரசியலை கலக்காதீர்கள்' என்ற வாதம் சமீப ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், விளையாட்டை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே நாம் பார்க்க விரும்பினாலும், அதை அரசியலில் இருந்து முற்றிலும் பிரித்து வைப்பது உண்மையில் சாத்தியமா?" என எழுதப்பட்டுள்ளது.
"இந்தியாவில் கிரிக்கெட் என்பது இந்துத்துவ அரசியலின் ஓர் ஊடகமாக மாறியுள்ளது. எனவே பாகிஸ்தானை நோக்கிய இந்துத்துவ அரசியல் குழுக்களின் அணுகுமுறை தற்போது முஸ்தஃபிசுர் ரஹ்மான் விவகாரத்திலும் தெரிகிறது."
வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சய்கியா ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறுகையில், சமீபத்திய சூழல்களை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்குப் பதிலாக மற்றொரு வீரரை சேர்க்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிசிசிஐ அனுமதியளிக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு