'6 முறை ஹைதராபாத் வருகை' - ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகிக்கப்படும் சஜித் அக்ரமின் இந்திய பின்னணி

சஜித் அக்ரம், இந்தியர், ஹைதராபாத், ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் டிசம்பர் 14-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனை தெலங்கானா டிஜிபி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்ததாக ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாண காவல்துறை கூறுகிறது. பதில் தாக்குதலில் சஜித் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த அவரது மகன் நவீத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, சஜித்திடம் இந்திய பாஸ்போர்ட் இருந்ததை ஆஸ்திரேலிய காவல்துறை கண்டறிந்துள்ளது. நவீத் தன்னுடைய ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டையும் சஜித் தன்னுடைய இந்திய பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தி கடந்த நவம்பர் மாதம் பிலிப்பைன்ஸ் சென்றதாக ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்தது.

'ஹைதராபாத்தில் படிப்பு - வேலை தேடி ஆஸ்திரேலியா பயணம்'

'ஹைதராபாத்தில் பி.காம் முடித்த பின்னர் வேலை தேடி 27 ஆண்டுகளுக்கு முன்பு சஜித் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஐரோப்பாவை பூர்வீகமாகக் கொண்ட ஒருவரை திருமணம் செய்த சஜித், ஆஸ்திரேலியாவிலேயே வாழ்ந்தார். அவர்களுக்கு நவீத் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்' என தெலங்கானா டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டை தொடர்ந்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ள தெலங்கானா டிஜிபி அலுவலகம், அவருடைய மகன் நவீத் மற்றும் மகள் ஆஸ்திரேலியாவில் பிறந்தனர் என்றும் அவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை இருப்பதாகவும் கூறியுள்ளது.

சஜித் அக்ரம், இந்தியர், ஹைதராபாத், ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Telangana police

படக்குறிப்பு, தெலங்கானா காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு

'27 ஆண்டுகளில் ஆறு முறை ஹைதராபாத் வந்த சஜித்'

ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய குடும்பத்துடன் சஜித் தொடர்பு கொண்டிருக்கவில்லை என தங்களிடம் தகவல் உள்ளதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த பின்னர் 27 ஆண்டுகளில் சஜித் ஆறு முறை ஹைதராபாத் வந்துள்ளதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தன் பெற்றோரை பார்க்கவும் சொத்து சம்பந்தமான விவகாரங்களுக்காகவும் அவர் ஹைதராபாத் வந்துள்ளார்.

தன்னுடைய தந்தை இறந்தபோது கூட சஜித் ஹைதராபாத்திற்கு வரவில்லை என, டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித் அக்ரம், இந்தியர், ஹைதராபாத், ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு

பட மூலாதாரம், Getty Images

'சஜித் நடவடிக்கைகள் குறித்து தெரியாது' - குடும்பத்தினர்

சஜித்தின் நடவடிக்கைகள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று சஜித்தின் உறவினர்கள் கூறியுள்ளதாக தெலங்கானா டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.

1998-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பாக ஹைதராபாத்தில் இருந்த காலகட்டத்திலும் சஜித்திற்கு எதிராக தெலங்கானா காவல்துறையிடம் எந்த பதிவுகளும் இல்லை என, டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடந்தது என்ன?

  • ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) உள்ளூர் நேரப்படி மாலை 6:47 மணிக்கு யூத சமூகத்தின் ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தை குறி வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இந்தத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
  • துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டப்படும் இருவர், தந்தை- மகன் என்றும், சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் (24) என்றும் உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டுள்ளன.
  • சஜித் காவல்துறையின் பதில் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், காயமடைந்த நவீத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • இது ஒரு 'யூத எதிர்ப்பு பயங்கரவாதச் சம்பவம்' என்று ஆஸ்திரேலியப் பிரதமர் விவரித்துள்ளார். அத்துடன், துப்பாக்கி வைத்திருப்பது தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
  • சம்பவ இடத்தில் இருந்த 43 வயதான அகமது அல் அகமது என்பவர், துப்பாக்கிச்சூடு நடத்திய இரு நபர்களில், ஒருவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த ஆயுதத்தைப் பறித்தார். அவரது செயலுக்காகப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அவருக்காக 10 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது.
  • இந்தச் சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இருவரும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குச் சென்றது குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • சஜித் அக்ரம் இந்திய பாஸ்போர்ட்டையும், அவரது மகன் நவீத் ஆஸ்திரேலிய பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தி பிலிப்பின்ஸ் நாட்டிற்குப் பயணம் செய்ததாக மணிலாவில் உள்ள குடிவரவு அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
  • துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்படும் சஜித் அக்ரம் (50) இந்தியாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்று தெலங்கானா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
  • இந்தத் தாக்குதல் "இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) அமைப்பின் சித்தாந்தத்தால் தூண்டப்பட்டதாகத் தெரிகிறது" என ஆஸ்திரேலியப் பிரதமர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு