You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நஸ்ரல்லாவின் வாரிசையும் கொலை செய்த இஸ்ரேல், உறுதி செய்த ஹெஸ்பொலா - என்ன நடந்தது?
- எழுதியவர், பாட்ரிக் ஜான்சன்
- பதவி, பிபிசி நியூஸ்
ஹெஸ்பொலாவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருந்த ஹஷேம் சஃபியத்தீன் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார் என்று ஹெஸ்பொலா உறுதி செய்துள்ளது.
ஹெஸ்பொலாவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருந்தவரை கொன்றுவிட்டதாக செவ்வாய்கிழமை இரவு இஸ்ரேல் கூறியிருந்தது. ஹெஸ்பொலா அதனை தற்போது உறுதி செய்துள்ளது.
“ஒரு மகத்தான தலைவர் மற்றும் மகத்தான தியாகியின்” இறப்பை அனுசரிப்பதாக ஹெஸ்பொலா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹெஸ்பொலாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் செப்டம்பர் 27ம் தேதி கொல்லப்பட்டார். அதை அடுத்து ஹெஸ்பொலாவை வழிநடத்தி வந்தவர் ஹஷேம் சஃபியத்தீன். ஹெஸ்பொலாவின் தலைவராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்க இருந்தார் சஃபியத்தீன்.
அவரை மூன்று வாரங்களுக்கு முன் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகரின் தெற்கில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் ஹஷேம் சஃபியத்தீன் உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
பெய்ரூட்டின் விமான நிலையத்திற்கு அருகில் அக்டோபர் 4ஆம் தேதி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன் பிறகு, சஃபியத்தின் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்று ஹெஸ்பொலா அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் தங்கள் குண்டுவெடிப்பின் இலக்காக இருந்ததாக இஸ்ரேல் அதிகாரிகள் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பலத்த குண்டுவெடிப்புகள் நகரத்தையே உலுக்கிவிட்டன. அதனால் ஏற்பட்ட புகை மூட்டம் மறுநாள் காலை வரை நீங்கவில்லை.
ஹெஸ்பொலாவின் உளவுத்துறை தலைமையகத்தின் படைத் தலைவர் அலி ஹுசைன் ஹசிமாவுடன் ஹஷேம் சஃபியத்தீனும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தது. ஹெஸ்பொலாவின் உளவுத்துறை தலைமையகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளது.
“இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதல்களை” பல ஆண்டுகளாக ஏவியதாக ஹஷேம் சஃபியத்தீன் மீது இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியது. ஹெஸ்பொலாவின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஹெஸ்பொலா, லெபனானில் அதிகாரம் செலுத்தும் ராணுவ, அரசியல் மற்றும் சமூக அமைப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஹெஸ்பொலாவை தீவிரவாத அமைப்பு என்று இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன.
ஹஷேம் சஃபியத்தீன் யார்?
நஸ்ரல்லாவின் உறவினரான ஹஷேம் சஃபியத்தீன் இரானில் மத பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது மகன், இரானின் சக்தி வாய்ந்த ராணுவ படைத்தலைவர் ஜெனரல் கசெம் சுலைமானியின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். ஜெனரல் கசெம் சுலைமானி 2020ஆம் ஆண்டு இராக்கில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.
ஹஷேம் சஃபியத்தீனை சர்வதேச தீவிரவாதி என்று அமெரிக்காவும் சௌதி அரேபியாவும் 2017ஆம் ஆண்டு அறிவித்திருந்தன. அவருக்கு 60 வயது இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கோடைக் காலத்தில் பெய்ரூட்டில் ஆற்றிய உரை ஒன்றில், ஹெஸ்பொலாவில் ஒரு தலைவர் மறைந்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்று ஹஷேம் சஃபியத்தீன் பேசியிருந்தார்.
“நமது இயக்கத்தில் ஒரு தலைவர் கொல்லப்பட்டால், மற்றொருவர் புதிய, தீர்க்கமான, உறுதியுடன் கொடியைக் கையில் ஏந்திக்கொண்டு வழிநடத்துவார்” என்று அவர் பேசியதாக ஏ.எஃப்.பி செய்தி முகமை குறிப்பிட்டிருந்தது.
காஸாவில் நடைபெறும் போரின் விளைவாக ஏற்பட்ட எல்லை தாண்டிய மோதல்கள் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, இஸ்ரேல் ஹெஸ்பொலாவை தாக்குகிறது.
ஹெஸ்பொலாவின் ராக்கெட், ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால், எல்லைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்ர்ந்த மக்கள் மீண்டும் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் என்று இஸ்ரேல் விரும்புகிறது.
கடந்த ஆண்டு லெபனானில் குறைந்தது 2,464 பேர் கொல்லப்பட்டதாகவும் 12 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இதே காலகட்டத்தில் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஹெஸ்பொலா தாக்குதல் நடத்தியது. வடக்கு இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று பகுதியில் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)