டிரம்ப் - புதின் முதல் சந்திப்பை சௌதி அரேபியாவில் திட்டமிடுவது ஏன்? ஒரு பகுப்பாய்வு

    • எழுதியவர், மனல் கலீல்
    • பதவி, பிபிசி அரபிக்

யுக்ரேன் மீதான ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, சௌதி அரேபியாவில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார் அவர்.

இந்த முக்கிய சந்திப்பு நடக்கும் இடமாக சௌதி அரேபியாவை டிரம்ப் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது

டிரம்ப், இந்த சந்திப்பு எப்போது நடக்கும் என்று கூறவில்லை. இருப்பினும் மிக விரைவாக இது நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் சௌதி இளவரசரும் பங்கேற்கலாம் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியுடன் டிரம்ப் அலைபேசியில் தனித்தனியாக பேசிய சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பு வெளியானது.

சௌதி அரேபியா இது தொடர்பான வெளியிட்ட அறிக்கையில், டிரம்ப் மற்றும் புதினுக்கு இடையே நடைபெற்ற உரையாடல் குறித்தும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தங்களின் நாடு தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.

"ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே நீடித்த அமைதி நிலவ தன்னுடைய முயற்சிகளை சௌதி ராஜ்ஜியம் தொடரும்," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடுநிலையான இடம்

டிரம்ப் - புதின் சந்திப்பை தங்கள் நாட்டில் நடத்த சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகள் விரும்பியதாக கூறப்படுகிறது

''தர்க்கரீதியாக சௌதி அரேபியா சரியான இடமாக இருக்கும். ஏன் என்றால் இந்த விவகாரத்தில் நடுநிலைத் தன்மையோடு அந்த நாடு திகழ்கிறது," என்கிறார் பால் சலேம். வாஷிங்டனில் அமைந்திருக்கும் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டியூட்டின் துணைத் தலைவராக உள்ளார் அவர்.

யுக்ரேன் போரில் ஐரோப்பிய நாடுகள் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அங்கே இந்த சந்திப்பை நடத்த இயலாது என்று அவர் தெரிவிக்கிறார்.

"பாரம்பரியமாக, ஜெனிவா போன்று நடுநிலைப்போக்குடன் இருக்கும் இடங்களில்தான் இத்தகைய சந்திப்பு நடைபெறும். ஆனால் சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு மோசமாக உள்ளதால், இப்படி ஒரு மாற்று இடத்தை தேர்வு செய்திருக்கலாம்," என்று முனைவர் கட்டார் அபு தியாப் தெரிவிக்கிறார். அவர் சர்வதேச உறவுகள் குறித்த பேராசிரியராக உள்ளார்

மேலும், ''புதினின் நம்பிக்கையை அந்நாடு கொண்டுள்ளது. சௌதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமில்லை'' என்கிறார் அவர்

யுக்ரேன் மீதான படையெடுப்பில் போர் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 2023-ஆம் ஆண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினை கைது செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.

சௌதி அரேபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக இல்லை என்பதால் புதின், தான் கைது செய்யப்படுவோமோ என்ற அச்சம் ஏதுமின்றி அங்கே பயணிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பேச்சுவார்த்தையில் சௌதியின் பங்கு

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே கைதிகளை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய நாடுகளில் சௌதி அரேபியாவும் ஒன்று. இந்த நடவடிக்கை மூலம் இரண்டு நாடுகளின் நம்பிக்கையையும் சௌதி பெற்றுள்ளது.

இரு நாடுகளும் கைதிகளை விடுதலை செய்தபோது, ரஷ்யா மூன்று ஆண்டுகளாக தடுப்பு சிறையில் வைத்திருந்த அமெரிக்க ஆசிரியர் மார்க் ஃபோகலையும் விடுதலை செய்தது.

மத்திய கிழக்கிற்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்கோஃப், அந்த ஆசிரியரின் விடுதலையில் சௌதி இளவரசின் பங்கு முக்கியமானது என்று கூறுகிறார்.

மேலும், சௌதி அரேபியா தொடர்ச்சியாக ஸெலென்ஸ்கி மற்றும் புதினை பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைத்துள்ளது. மேலும் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இரு நாடுகளையும் வலியுறுத்தி உள்ளது. இதை நோக்கமாக கொண்டு பல நாட்டு பிரதிநிதிகளுடன் சர்வதேச சந்திப்பு ஒன்றையும் சௌதி நடத்தியது.

2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத் வந்த புதினை வரவேற்ற இளவரசர், அவரை "சௌதி அரேபிய அரசு மற்றும் மக்கள் அதிகமாக மதிக்கும் சிறப்பு விருந்தினர்," என்று குறிப்பிட்டார்.

வளைகுடா விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற அப்துல்லா பாபூத், ஓமன், கத்தார் மற்றும் எமிரேட்ஸ் போன்று சௌதி அரேபியாவும் மத்தியஸ்த பணியில் பங்கேற்க விரும்புவதாக கூறுகிறார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் செல்வாக்கு மிக்க ஒரு நாடாக தன்னை உயர்த்திக் கொள்ள இந்த நடவடிக்கையில் சௌதி ஈடுபடுவதாக அவர் தெரிவிக்கிறார்.

இந்த சந்திப்பை நடத்துவதால் சௌதி அரேபியாவும் ராஜ்ஜீய ரீதியாக நன்மையை அடையும் என்று பாபூத் தெரிவிக்கிறார். இதற்கு கைமாறாக, ஆப்ரஹாம் உடன்படிக்கை போன்ற அமெரிக்காவின் உத்தி சார்ந்த விவகாரங்களில் சௌதி அரேபியாவின் செயல்பாடு அதிகம் இருக்கும்.

ஆப்ரஹாம் உடன்படிக்கை நான்கு அரேபிய நாடுகள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே இருக்கும் உறவுகளை இயல்பாக்க உருவாக்கப்பட்டது.

பொருளாதாரம், நிதி, முதலீடு மற்றும் உத்தி உள்ளிட்ட காரணங்களுக்காக அமெரிக்கா- சௌதி இடையேயான உறவை டிரம்ப் வலுப்படுத்த விரும்புகிறார் என்று பால் குறிப்பிடுகிறார். மேலும் வருங்காலத்தில் அமெரிக்கா-சௌதி- இஸ்ரேல் இடையிலான ஒப்பந்தத்தை கொண்டு வரும் முனைப்பிலும் அவர் செயல்படுகிறார் என்கிறார் பால்.

டிரம்பின் மத்திய கிழக்கு கொள்கைகளுக்கு குறிப்பாக இஸ்ரேல் - பாலத்தீன விவகாரத்தில் சௌதி முக்கியமான நாடாக திகழ்கிறது என்று உத்தி ரீதியான தொடர்பியல் துறை பேராசிரியர் முனைவர் நிதால் சௌகைர் கூறுகிறார்

கச்சா எண்ணெய் காரணி

உலகிலேயே அதிக அளவு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு அமெரிக்கா. அதற்கு அடுத்த இடத்தில் சௌதி அரேபியாவும் ரஷ்யாவும் உள்ளது.

ரஷ்யா-யுக்ரேன் போர் உலக எரிசக்தி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்திய போது, கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைக்க சௌதி அரேபியா முக்கிய பங்காற்றியது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 22 எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் OPEC+ கூட்டணியின் எட்டு உறுப்பு நாடுகள் ஒரு முக்கிய முடிவை எடுத்தன. இந்த எட்டு நாடுகளில் சௌதி அரேபியாவும் ரஷ்யாவும் உள்ளது.

அதாவது, எதிர்பார்த்ததை விட தேவை குறைவாக இருப்பது மற்றும் கூட்டணியில் இடம் பெறாத நாடுகளின் போட்டி மனப்பான்மை உற்பத்தி ஆகிய காரணங்களால் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பை நிறுத்துவதாக இந்த நாடுகள் கூறின.

பாரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களான சௌதி அரேபியாவும், ரஷ்யாவும் பொதுவான எண்ணங்களைக் கொண்டுள்ளன என்று கூறுகிறார் பாபூத்.

டிரம்ப் - புதின் சந்திப்பின்போது, யுக்ரேன் போரை நிறுத்துவது குறித்து மட்டும் கவனம் செலுத்தாமல் உலக அளவிலான எண்ணெய் விலை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு போன்ற விவகாரங்களும் விவாதிக்கப்படும் என்கிறார் பாபூத்.

உத்தி நலன்கள்

டிரம்ப் 2017-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபரான பிறகு முதல் அரசு பயணமாக சௌதி அரேபியாவுக்கு சென்றார். உலக அரங்கில் சௌதியின் மதிப்பை உயர்த்தியது அந்த பயணம்.

தற்போது மீண்டும் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் அவர், தன்னுடைய முதல் அரசு முறை வெளி நாட்டுப் பயணம் சௌதி அரேபியாவுக்குதான் என மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார். அதற்கான விலையையும் அவர் ஏற்கனவே நிர்ணயித்துள்ளார்.

''சௌதி அரேபியா 450 முதல் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை வாங்கும் என்றால் நான் சௌதிக்கு செல்வேன்'' என்று அவர் தன்னுடைய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

அடுத்த சில நாட்களில் சௌதி அரேபியாவின் இளவரசர், அடுத்த நான்கு ஆண்டுகளில் சௌதி அரேபியா, அமெரிக்காவில் சுமார் 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக அறிவித்திருந்தார்.

"அருமையான சௌதி இளவரசர் அந்த மதிப்பை ஏன் முழுமையாக 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக அறிவிக்கக் கூடாது என்று கேட்பேன்," என்று டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் டிரம்ப் கூறினார்.

"அவர்கள் (சௌதி) அவ்வாறே செய்வார்கள் என்று நினைக்கின்றேன். ஏன் என்றால் நாங்கள் அவர்களிடம் நல்ல விதத்தில் நடந்து கொள்கிறோம்," என்று டிரம்ப் அப்போது குறிப்பிட்டார்.

''டிரம்ப் சௌதி அரேபியாவை ஒரு முக்கிய பொருளாதார கூட்டாளியாக பார்க்கிறார்'' என்று குறிப்பிடுகிறார் முனைவர் நிதால்.

முன்னாள் அதிபர் ஜோ பைடன், ஆசியாவில் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்தை செலுத்தியது போன்று, டிரம்ப் வளைகுடா நாடுகளில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிகழும் போட்டியின் ஒரு அம்சமாக, சௌதி அரேபியாவில் தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்த டிரம்ப் முயல்கிறார். சௌதி அரேபியா மனித உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்ற நிலையில் தற்போது அங்கே சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருப்பதாக அபு தியாபும், சௌகைரும் கூறுகின்றனர். மதக் காவலர்கள் பணிகளை முடிவுக்கு கொண்டு வந்தது மற்றும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை வழங்கியது போன்ற செயல்கள் உலக அரங்கில் அந்த நாட்டிற்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)